பேச்சு, பேட்டி, அறிக்கை
இந்திய கம்யூ., கட்சியின் மாநில செயலர் வீரபாண்டியன் பேட்டி: தி.மு.க., என்பது, கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்லும் பாங்கும், அரசியல் பக்குவமும், தெளிவும் கொண்ட கட்சி. எனவே, கால சூழல்களுக்கு ஏற்றவாறு அவர்கள் தொகுதிகளை பகிர்ந்தளிப்பர். கடந்த தேர்தலை விட நாங்களும் கூடுதல் தொகுதி களை பெற்று, போட்டியிட முயற்சி ெசய்வோம். தி.மு.க., அணியில் சேர ராமதாஸ், பிரேமலதா போன்றோர் வரிசைகட்டி நிற்பதால், இவங்களுக்கு இருக்கும் தொகுதிகளை குறைக்காமல் இருந்தாலே பெரிய விஷயம்! த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் பேச்சு: வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் களப்பணி ஆற்றி, ஆளும் தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தே.ஜ., கூட்டணிக்கு இருக்கிறது. நம் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமியை ஆட்சியில் அமர வைக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழகம் முழுதும் மண்டல வாரியாக ஆர்ப்பாட்டம், கருத்தரங்கம் நடத்தப்படும். லட்சக்கணக்கில் கட்சியினரை திரட்டி ஆர்ப்பாட்டம் பண்ணுங்க... அப்ப தான் ஆளுங்கட்சிக்கு பயம் வரும்! தமிழக பா.ஜ., விவசாய அணியின் தலைவர் ஜி.கே.நாகராஜ் பேட்டி: மத்திய அரசி ன் விவசாய தொழில்நுட்ப மேலாண்மை நிறுவனம் வாயிலாக, தமிழகம் முழுதும், 1,200 விவசாய பட்டதாரிகளை மாநில அரசு நியமித்தது. ஆனால், அவர்களுக்கு ஊதியம் வழங்காமல் இருப்பதால் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். அவர்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம் மனு வழங்கினோம். 'அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், பரிசீலிக்கப்படும்' என உறுதியளித்தார். அந்த 1,200 பேர், அவங்க குடும்பத்தினர் என, மொத்தமா 5,000 ஓட்டுகளுக்கு மேல தி.மு.க.,வுக்கு இழப்பு தான்! தமிழக காங்., பொதுச்செயலர் ரமேஷ்குமார் அறிக்கை: மணிப்பூரில், 864 நாட்கள் வன்முறை நிகழ்ந்தது. அதில், 300 பேர் உயிரிழந்துள்ளனர். 67,000 பேர் இடம் பெயர்ந்தனர். இதே கால கட்டத்தில், 46 வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, மணிப்பூருக்கு கடைசியாக வந்தது, 2022ம் ஆண்டு ஜன., மாதம் நடந்த தேர்தலுக்காகத்தான். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டால் தற்போது மணிப்பூர் சென்ற பிரதமர் மோடி, அங்கு வெறும் மூன்று மணி நேரமே செலவிட்டுள்ளார். இது தான் பா.ஜ.,வின் சாதனையா? பிரதமர் மோடி மணிப்பூர் போகலைன்னு குற்றம் சாட்டிட்டு இருந்தாங்க... இப்ப, போனாலும் புகார் சொல்றாங்க... இவங்களுக்கு மணிப்பூர் தான் பிரச்னையா அல்லது மோடியா?