பேச்சு, பேட்டி, அறிக்கை
ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை: 'முதல்வர் ஸ்டாலின், பல நாட்டு கம்பெனி முதலீடுகளை ஈர்த்தார்' என, தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா படம் எடுத்து வெளியிட்டது பொய் என தெரிய வந்துள்ளது. 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதாக வெளியான செய்தியை, பாக்ஸ்கான் நிறுவனம் மறுத்துள்ளது. இது, கடந்த ஆண்டு ஒப்பந்தம் எனக் கூறியுள்ளது. இதற்கு, அமைச்சர் ராஜா என்ன சொல்லப் போகிறார். போடாத ஒப்பந்தத்தை போட்டதாக சொல்லி, பொதுமக்களை ஏமாற்றும் வித்தைக்கு பெயர்தான் திராவிட மாடல். 'வரும்.. ஆனா, வராது...' என்ற நடிகர் வடிவேலு காமெடி மாதிரி, 'பாக்ஸ்கான்' முதலீடு ஆகிடுச்சே! தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'ஒரு அடி கொடுத்தா, இரு அடி கொடுப்பேன்; பல ரவுடிகளை, 'டீல்' பண்ணியிருக்கேன். இந்த வேலையெல்லாம் எங்கிட்ட வெச்சுக்கக் கூடாது' என, வி.சி., தலைவர் திருமாவளவனுக்கு, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். திருமாவளவனிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லையே. காது கேட்கவில்லையா; பயமா? அதானே... ஐகோர்ட் வளாகத்தில் தனியா சிக்கியவரை, 'மொத்தி' எடுத்தவங்க, அண்ணாமலை சவாலுக்கு பதிலளிக்காம பம்மிட்டாங்களோ! ராமதாஸ் அணியின் பா.ம.க., பொதுச்செயலர் முரளிசங்கர் பேட்டி: எங்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசை எதிர்த்து யாரும் அரசியல் செய்ய முடியாது. அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததும், உடனடியாக நாங்கள் அனைவரும் சென்று அவரை பார்த்தோம். ஆனால், அன்புமணி தரப்பில் உள்ள ஆதரவாளர்கள் தற்போது வரை அவரை சந்திக்க வரவில்லை. அன்புமணி, எங்களை தொலைச்சிடுவோம் என்று கூறியது, மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது. யாரை, யார் தொலைக்கிறாங்களோ, இல்லையோ... இவங்க அடிக்கிற கூத்துல கட்சிதான் தொலைஞ்சு போயிடும்! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.,யின் தோழி சசிகலா பேச்சு: தமிழகத்தில் அரசு வேலைகளுக்கு பணம் வசூல் நடக்கிறது. பத்திரப்பதிவு செய்ய கமிஷன் கொடுக்க வேண்டியுள்ளது. மின் கட்டணம், வீட்டு வரி உயர்ந்துள்ளது. இதுபோன்ற கட்டணங்களால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பூட்டு போடப்பட்டு வருகிறது. ஜெயலலிதா ஆட்சியில் கடன் கட்டுக்குள் இருந்தது. தற்போது, கடன் அதிகரித்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியால் தான் மக்களுக்கு நல்லாட்சி கொடுக்க முடியும். அதையும், நல்ல தலைவர்களாக இருந்தால்தான் கொடுக்க முடியும். இப்ப, அ.தி.மு.க.,வின் தலைமை பதவியில் இருப்பவரை இவங்க தானே தேர்வு செஞ்சாங்க... அப்ப, நல்லவரா தெரிஞ்சவர் , இப்ப கெட்டவராயிட்டாரா?