பேச்சு, பேட்டி, அறிக்கை
தி.மு.க.,வை சேர்ந்த பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேச்சு: தமிழக அரசியலில் விஜய் ஒரு புதிய சக்தியாக அவதாரம் எடுத்துள்ளார். விஜய்க்கு என ஒரு, 'மாஸ்' இருப்பது அவரது மக்கள் சந்திப்பு பயணத்தில் தெரியவந்தது. ஆனால், பழனிசாமி செல்கிற பிரசாரம் தோல்வி அடைந்துள்ளது. எந்த பிரச்னைக்கு முன்னுரிமை கொடுத்து பேச வேண்டும் என்ற தெளிவு, தொலைநோக்கு பழனிசாமியிடம் இல்லை. அது இல்லாத வரை அவரால் வெற்றி பெற முடியாது. இவரது, 'இன்னோவா' காரை, விஜய் கட்சி ஆபீஸ் இருக்கும் சென்னை பனையூர் பக்கம் திருப்பப் போறாரோ? அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை பேச்சு: தமிழகத்தில் உள்ள சாலைகள், தெருக்களுக்கு சூட்டப்பட்ட ஜாதி பெயர்களை நீக்க, எம்.ஜி.ஆர்., ஆட்சி காலத்திலேயே அரசாணை வெளியிடப்பட்டது. அது, இன்னமும் அமலில் இருக்கிறது. அப்படியிருக்க, தி.மு.க., அரசு, இதே பொருள் குறித்து வெளியிட்டுள்ள புதிய அரசாணையானது, முதல் திருமணம் சட்டப்பூர்வமாக இருந்து வரும் நிலையில், மறுமணம் செய்து வைப்பது போல் உள்ளது. எம்.ஜி.ஆர்., ஆட்சியில் அரசாணை வெளியிட்டும், ஜெ., பழனிசாமி ஆட்சி காலங்களில் அதை நடைமுறைப்படுத்த ஏன் நடவடிக்கை எடுக்கலை? தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: ஆண்டுக்கு ஒருமுறை தான் நரகாசுர வதம். ராம - ராவண யுத்தம். ஆண்டுக்கு ஒருமுறை தான் அசுர சக்தியை அழிக்கும் நாள். ஆனால், இந்த முறை இரண்டு தீபாவளி, இரண்டு நரகாசுர வதம், இரண்டு ராம -- ராவண யுத்தம். ஆம், ஒன்று தற்போது நாம் கொண்டாடி முடித்த தீபாவளி பண்டிகை. இரண்டாவது, திராவிட மாடலை துாக்கி, 2026ல் வங்கக் கடலில் வீசும் நாள். தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதில், அ.தி.மு.க.,வை விட பா.ஜ.,வினர் தீவிரமா இருக்காங்களே... தேர்தலுக்கு பின், ரகசிய திட்டம் ஏதும் வச்சிருக்காங்களோ? விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., சிவா பேச்சு: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிகழும் விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள், என் தொகுதியில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர். இதனால், அவசர சிகிச்சை பிரிவை மேம்படுத்த வேண்டும். மழை காலங்களில் மருத்துவமனை மற்றும் டீன் குடியிருப்பில் தண்ணீர் தேங்குகிறது. அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இம்மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வேண்டும். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வே குறை சொல்லும் அளவுக்கு தான் அரசு மருத்துவமனை நிர்வாகம் இருக்கு!