உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம் அறிக்கை: நெல்லை கவின் ஆணவ கொலைக்கு பின், 'காதல் திருமணங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்திருக்கும்' என அறிவித்தோம். அதன்படி ஒன்றரை மாதத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ., அலுவலகங்களில், 104 ஜாதி, மத, சடங்கு மறுப்பு காதல் திருமணங்களை நடத்தியுள்ளோம். ஜாதி மறுப்பு காதல் திருமணங்களுக்கு எப்போதும் எங்கள் அலுவலகம் திறந்து இருக்கும். போற போக்கை பார்த்தா, இவங்க கட்சி சார்பில், திருமண தகவல் மையமே துவங்கி நடத்துவாங்க போலிருக்கே!தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் பேச்சு: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, அதிரடிப்படை தலைவராக, தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தார். ஆனால், தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரன், அமைதிப்படை தலைவராக மக்களிடம் பேசி, தி.மு.க.,விற்கு எதிரான எழுச்சியை உருவாக்கி, தி.மு.க., வை வீட்டிற்கு அனுப்ப போகிறார். இவர் என்னதான் சொன்னாலும், அதிரடிப்படையை பார்த்து தான் ஆளுங்கட்சியினர் நடுங்கினாங்க... அமைதிப்படையை அசால்டா தானே நினைக்கிறாங்க! சென்னை, மயிலாப்பூர் மேற்கு பகுதி, அ.தி.மு.க., செயலர் விஜயபாஸ்கர் பேட்டி: சமுதாயத்தில், போதை பொருட்கள் புரையோடி கிடக்கின்றன. அவற்றை கட்டுப்படுத்த தி.மு.க., அரசு தவறிவிட்டது. படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை; சும்மா இருக்கும் இளைஞர்கள், கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். '3.50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்போம்' என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதே தவிர, யாருக்கும் வேலை தராமல், ஏமாற்றத்தையே தந்துள்ளது. அதான், நகராட்சி நிர்வாகத் துறையில், 2,538 பேருக்கு வேலை தந்திருக்காங்களே... அதையும், 'பணம் வாங்கிட்டு குடுத்துட்டாங்க'ன்னு புகார்லாம் கிளம்பி இருக்கே! அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேட்டி: எதிலும், ஆழ்ந்து சிந்தித்து செயல்படும் மனோஜ் பாண்டியன், தி.மு.க.,வில் இணைந்திருப்பது வருத்தமளிக்கிறது. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் ஆட்டத்தால் பாதிக்கப்பட்ட, ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான முடிவுகளை எடுக்க நேரிடுகிறது. பழனிசாமியின் செயல்பாடுகளால் மனமுடைந்து தான், மனோஜ் பாண்டியன் தி.மு.க.,வில் சேர்ந்திருப்பார். பன்னீர்செல்வம் அணியில் இருந்துதானே, தி.மு.க.,வுக்கு மனோஜ் பாண்டியன் போயிருக்கார்... பன்னீர்செல்வம் மீது அவருக்கு அதிருப்தி ஏதும் இல்லையா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி