பேச்சு, பேட்டி, அறிக்கை
தமிழக பா.ஜ., துணை தலைவர் கரு.நாகராஜன் அறிக்கை: ராமேஸ்வரத்தில் பள்ளிக்கு நடந்து சென்ற மாணவியை, முனிராஜ் என்பவர் கொலை செய்துள்ளார். இது போன்ற குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்காதது, நீண்ட கால விசாரணை போன்ற குளறுபடிகள் தான், குற்றவாளிகளுக்கு பயம் இல்லாத நிலையை உருவாக்கி உள்ளது. 'மக்களுடன் ஸ்டாலின்' என, விளம்பரம் வருகிறது; ஆனால், முதல்வர் மக்களுடன் இல்லை. இது போன்ற கொடூர குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒடுக்கலை என்றால், தேர்தலில் மக்களின் தீர்ப்பு வேற மாதிரி இருக்கும்! அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை பேச்சு: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை எதிர்ப்போர், தேர்தலுக்கு முன்பாகவே செய்து முடிக்க வேண்டிய பணியை, தேர்தலுக்கு பின் சாவகாசமாக செய்யலாமே என சிலர் சொல்லும் ஆலோசனை, திருமணத்திற்கு முன் நடத்த வேண்டிய நிச்சயதார்த்தத்தை, திருமணத்திற்கு பிறகு வைத்துக் கொள்ளலாமே என்பது போல் இருக்கிறது. அப்பதானே, வர்ற தேர்தல்ல அவங்க நினைச்சதை சாதிக்க முடியும்! பா.ஜ., தொழில் பிரிவு மாநில தலைவர் பாலகிருஷ்ணன் பேட்டி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள், வீடு வீடாக சென்று விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர்; மக்களும் அதை பூர்த்தி செய்து தருகின்றனர். மக்கள் யாரும் இதைக் கண்டு அச்சமடையவில்லை. 'சிறப்பு தீவிர திருத்தப் பணியால், ஒரு கோடி பேர் ஓட்டுரிமையை இழப்பர்' என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பது, வேடிக்கையாக உள்ளது. யாரும் ஓட்டுரிமையை இழக்க மாட்டார்கள். இறந்தவர்கள் தவிர, அனைவரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவர். 'நான் ஜெயித்து முதல்வராவதை தடுக்கவே, இந்த வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கொண்டு வந்திருக்காங்க'ன்னு சீமான் நினைக்கிறாரோ? பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம் பரில், 'டெட்ரா பேக்' எனப்படும் காகித குடுவைகளில் மது விற்க முடிவு செய்திருந்தது. பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த திட்டத்தை கைவிட்டது. 'மது வகைகளை காகித குடுவைகளில் அடைத்து விற்பனை செய்வது மிகவும் ஆபத்தானது; இது, குழந்தைகளின் வாழ்வில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்' என, தற்போது உச்ச நீதிமன்றமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. காகித குடுவைகளில் மது வணிகம் செய்ய நினைத்ததற்காக, தி.மு.க., அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும். அதான், அந்த முடிவில் இருந்து தமிழக அரசு பின்வாங்கிடுச்சே... அப்புறமும் ஏன் அரசை போட்டு வறுத்தெடுக்கிறாரு?