உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக, பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை:

தமிழகத்தில், சாராய வாடை இல்லாத கொண்டாட்டங்களே இல்லை என்ற நிலையை, தி.மு.க., அரசு உருவாக்கியுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழகத்தில், 518 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. 3,000 ரூபாய் பொங்கல் பரிசு கொடுக்கிறோம் என கூறி விட்டு, மறைமுகமாக அந்த பணத்தை டாஸ்மாக் கடைகள் வாயிலாக, நாட்டு மக்களிடம் இருந்து, இந்த அரசு வசூலித்துள்ளது.உண்மை தான்... கொண்டாட்டம் என்றாலே, சாராயத்துடன் தான் என்ற நிலையை உருவாக்கியதில், தி.மு.க., அரசின் பங்கு அதிகமே!

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி:

மஹாராஷ்டிராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், மாபெரும் வெற்றியை எங்கள், பா.ஜ., அணி பெற்றுள்ளது. அதுபோல, திருவனந்தபுரம் மேயர் தேர்தலிலும், மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளை எங்கள் கட்சி பெற்றுள்ளது. தமிழகத்தில் வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்காக, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்துள்ளோம். எனவே, மஹாராஷ்டிரா, திருவனந்தபுரம் வெற்றி, தமிழகத்திலும் ஏற்படும். மஹாராஷ்டிரா, திருவனந்தபுரம் தேர்தல்களில், பா.ஜ., பெற்ற வெற்றியை எண்ணி, இருமாந்து இருந்திடாமல், இன்னும் அதிகமாக வேலை செய்தால், தமிழக சட்டசபை தேர்தலில், பா.ஜ., குறிப்பிடத்தக்க அளவுக்கு வெற்றி பெறும்!

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேட்டி:

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மாதந்தோறும், 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். அரசு டவுன் பஸ்களில், பெண்களை போல ஆண்களுக்கும் இலவச பயணம் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்படும். நுாறு நாள் வேலை திட்டம், 150 நாட்களாக அதிகரிக்கப்படும். 5 லட்சம் பெண்களுக்கு, இருசக்கர வாகனம் வழங்கப்படும். வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்காக, அ.தி.மு.க., அறிவித்துள்ள முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளிலேயே, அரசு கஜானா காலியாகி விடும். தமிழக அரசு போண்டி தான் போங்கள்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பேச்சு:

ஜல்லிக்கட்டு போட்டிகளில் சிறப்பாக பங்கேற்று, அதிக காளைகளை அடக்குவோருக்கு, முன்னுரிமை அடிப்படையில், கால்நடை பராமரிப்பு துறையில் அரசு வேலை வழங்கப்படும். பல பரிசுகளை தட்டிச்செல்லும் மாடுபிடி வீரர்களுக்கு, தமிழக முதல்வர் அறிவித்துள்ள அரசு வேலை என்பது, நிம்மதியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இப்படி, 'செட்டில்' ஆகி விடுவோம் என்ற நம்பிக்கையில் இனி, நிறைய பேர் மாடுபிடி வீரர்களாகி விடுவர்!

பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:

தமிழகத்தில் போதை கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என நேரிலும், அறிக்கை வாயிலாகவும், போராட்டங்கள் மூலமும் வலியுறுத்தியுள்ளோம். எனினும், தினமும் கஞ்சா போதை கும்பல்களின் வெறியாட்டம் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இருவர், கஞ்சா கும்பலால் அடித்து கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு, தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். கஞ்சா போதையை கட்டுப்படுத்த வேண்டும் என போலீசாருக்கு முதல்வர் முழுமனதுடன் உத்தரவிட்டால், மறுநாளே மாநிலம் முழுதும் கட்டுப்படுத்தப்பட்டு விடும்; ஆனால், உத்தரவிடுவதில்லையே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anantharaman Srinivasan
ஜன 19, 2026 12:15

எப்பேர்பட்டாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பதற்காக அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை தந்துள்ளது. அனைத்தையும் நிறைவேற்ற முடியாதென்பது பழனிசாமிக்குத் தெரியும். முதல்வர் நாற்காலியாகப்பட்டது அவ்விதம் tempt டை கிளப்பி விடுகிறது.


சமீபத்திய செய்தி