பேச்சு, பேட்டி, அறிக்கை
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி: தி.மு.க., கூட்டணியில் உள்ளோம். இக்கூட்டணி, 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்லும். ஓட்டு வித்தியாசத்தை அதிகப்படுத்தவே, தேர்தல் பணியாற்றுகிறோம். தமிழகத்தில் தனிக்கட்சி ஆட்சியைத்தான் மக்கள் விரும்புகின்றனர். எனவே, தி.மு.க.,வின் நிலைப்பாடு சரிதான். அதிகாரத்தில் பங்கு இல்லை என்ற முதல்வர் கருத்தை வரவேற்கிறோம். இப்படி சொன்னதால் மட்டும், இவர் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை தி.மு.க.,வுல ஒதுக்க மாட்டாங்க! சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி பேட்டி: விஜய் ஒரு பிரபலமான நடிகர். அவருக்கு என, ரசிகர் கூட்டம் உள்ளது. அந்த ரசிகர் கூட்டம் ஆதரவு கூட்டமாக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆதரவு கூட்டம் ஓட்டு வங்கியாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், ஓட்டு வங்கி, எம்.எல்.ஏ., சீட்களாக மாறுவது சந்தேகம். நிச்சயம் கணிசமான ஓட்டுகளை பெறுவார். 'இண்டி' கூட்டணி ஒற்றுமையாக இருந்தால், மும்முனை போட்டியாக இருந்தாலும் வெற்றி பெறும். விஜய் கணிசமான ஓட்டுகளை வாங்கினாலும் ஜெயிக்க வாய்ப்பில்லை என்பதால் தான், அவரது கூட்டணிக்கு போகாம, காங்கிரசார், பின்வாங்கிட்டாங்களோ? தமிழக வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேச்சு: காங்கிரஸ் கூட்டணி பற்றி யாரும் குறை சொல்லவில்லை; ஆனால், அக்கட்சியில் ஆட்கள் கிடையாது. கூட்டணியில் இருப்பதற்காக, நாங்கள் தான் வேலை பார்க்கிறோம். கூட்டணி குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிக்கொள்வார். அவர்கள் வந்தால் வரட்டும், வரலைன்னா போகட்டும். முதல்வருடைய இஷ்டம். நாம் எதுவும் பேச வேண்டாம். காங்கிரசில் ஆட்களே இல்லை என்றால், அந்த கட்சியை ஏன் துாக்கி சுமக்கிறாங்க... 'இடத்தை காலி பண்ணுங்க'ன்னு சொல்லி, வெளியில அனுப்பிட வேண்டியது தானே! அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு: விஜய் நடித்த, மெர்சல் திரைப்படத்திற்கு விலங்குகள் நல வாரியத்தின் தடையின்மை சான்றிதழ் கிடைக்காமல் முடங்கும் நிலை இருந்தது. என் மூலமாக, முதல்வராக இருந்த பழனிசாமியை மூன்று மணி நேரம் காத்திருந்து சந்தித்த விஜய், 'என்றும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டு இருப்பேன்' என்றார். ஆனால், இன்றைக்கு அ.தி.மு.க., பெயரை சொல்லாமல் தவிர்க்கிறார். இவங்க தலைவர் பழனிசாமி கூட, முதல்வரானதும், 'சசி கலாவுக்கு நன்றிக்கடன் பட்டிருக் கேன்'னு சொன்னார்... இப்ப, 'சசிகலா யார்'னு கேட்கலையா?