உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் பேட்டி: கடந்த, 60 ஆண்டுகளாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போதும், தமிழக காங்கிரசில் தொண்டர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பயணிக்கின்றனர். அவர்கள் கட்சிக்காக, நேரத்தையும் சொந்த பணத்தையும் செலவழிக்கின்றனர். அவர்களுக்கு கட்சி இதுவரை எதுவும் செய்யவில்லை. அவர்களை வார்டு கவுன்சிலர்களாக, பஞ்சாயத்து தலைவர்களாக மாற்ற வேண்டியது எங்கள் கடமை. அந்த நேரம் இப்போது வந்துவிட்டது. சட்டசபை தேர்தலில் சீட் வழங்க முடியாதவங்களை சமாதானப்படுத்த இப்படி சொல்றாரோ? தமிழக பா.ஜ., பொதுச் செயலர் ஏ.பி.முருகானந்தம் பேச்சு: தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி குறித்து, பழம் நழுவி தேன் கலந்த பாலில் விழுந்ததாக, பிரேமலதா சொல்கிறார். பழம் நழுவி விஷம் கலந்த பாலில் விழுந்து விட்டதற்கு, அக்கட்சியினர் வருத்தப்படுகின்றனர். விஜயகாந்த் வியர்வை, ரத்தம் சிந்தி கட்டிய ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தை தி.மு.க., ஆட்சியில் இடித்ததை பிரேமலதா எப்படி மறந்தார். அவரை விஜயகாந்த் ஆன்மா மறக்காது; மன்னிக்காது. 'மிசா' காலத்தில் தி.மு.க.,வினரை நையபுடைத்த காங்கிரசுடன் அடுத்த மூன்றே ஆண்டில் தி.மு.க., கூட்டணி வைக்கலையா...? அரசியலில் பின்னோக்கி பார்த்தால், முன்னேற முடியுமா? அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: 'கோவை மாவட்ட மக்கள், அருகில் இருக்கும் அனைத்து ஊர்களையும் கெடுப்பவர்கள்' என, தி.மு.க., - எம்.பி., தயாநிதி பேசிய வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. தமிழகத்தில், லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி, தலைசிறந்த தொழில் நகரமாகவும், தென் மாநிலங்களின் மான்செஸ்டராகவும் கோவையை உருவாக்கிய மக்கள் குறித்த தயாநிதியின் அவதுாறு பேச்சு கண்டனத்திற்குரியது. ஏற்கனவே கொங்கு மண்டலம் தி.மு.க.,வுக்கு எட்டாக்கனியா இருக்கு... அதை, தயாநிதி கிட்டா கனியா மாத்திடுவார் போலிருக்கு! அகில இந்திய மீனவர் காங்., தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ அறிக்கை: இந்திய கடற்பகுதியில் மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள், 22 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய நான்கு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதற்கு முழு பொறுப்பேற்று, மத்திய அரசு உடனே, 22 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் அடிக்கடி கைதாவதும், அதற்கு இவரை போன்ற தலைவர்கள், கைது எண்ணிக்கையை மட்டும் மாற்றி, அதே அறிக்கையை வெளியிடுவதற்கும் மத்திய அரசு சீக்கிரமே முற்றுப்புள்ளி வைக்கணும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி