வாசகர்கள் கருத்துகள் ( 1 )
என்ன வளைந்து கொடுத்து ஜால்ரா அடித்தும் SV சேகருக்கோ அவர் பிள்ளைகோ திமுக சீட் கொடுக்க வில்லையே. தன் தந்தை வெங்கட்ராமன் பெயரை மயிலாப்பூரில் ஒரு தெருவிற்கு வைக்க விடுவித்த வேண்டுகோளும் நிறைவேறவில்லை.
நடிகர் சத்யராஜ் மகளும், தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலருமான திவ்யா பேட்டி: மக்களுக்காக மட்டும் வேலை செய்யும் கட்சியாக தி.மு.க., திகழ்கிறது. மக்கள் பிரச்னைகள் பற்றிய புரிதல் கொண்ட கட்சி தி.மு.க., தான். வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்றது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. சென்னையில், ஆயிரம் விளக்கு, வேளச்சேரி தொகுதியை கேட்டுள்ளேன். எனக்கு சீட் கிடைப்பது முக்கியமல்ல. தி.மு.க., வெற்றிக்காக, உயிரை கொடுத்து வேலை செய்வேன். முதல்வர் ஸ்டாலின் கூறினால், பிரசாரத்துக்கு செல்வேன். சென்னை, பெரம்பூரில் நடிகர் விஜயை எதிர்த்து உங்களை நிறுத்த போறதா சொல்றாங்களே... அங்க கரையேற முடியும் என்ற நம்பிக்கை இருக்கா? தி.மு.க., செய்தி தொடர்புக்குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை: அ.தி.மு.க., தலைமை கழகத்தை, பா.ஜ., கைப்பற்றி விட்டது. ஜெயலலிதா பால்கனியில் நின்று, தொண்டர்களை பார்த்து கையசைக்கும் இடத்தில், மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் நிற்கிறார். அது சரி... அன்று ஜெ.,யின் போயஸ் தோட்ட வீட்டு வாசலில் காத்துக் கிடந்த பா.ஜ.,வை, பால்கனிக்கு உயர்த்தியுள்ளார் அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி. அடப் பரிதாபமே! கூட்டணி கட்சிகளுடன் சீட் ஒதுக்கீட்டு பேச்சை, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடத்தாமல், நடுரோட்டில் நடத்த சொல்றாரா? தி.மு.க., ஆதரவாளரான நடிகர் எஸ்.வி.சேகர் பேச்சு: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனிடம், முதல்வர் ஸ்டாலின் பெருந்தன்மையாக நடந்து கொண்டார். அதை அவர் பலவீனமாக நினைத்தால், அவருக்கு தான் அது பலவீனம். தேர்தல் நேரத்தில், கழுத்துல கத்தி வைக்கிற மாதிரி, 'இத்தனை தொகுதிகள் வேண்டும்; இல்லை என்றால் வெளியே போய்விடுவேன்' என, மிரட்டியது நாகரிகம் அல்ல. கூட்டணியை எப்படி அனுசரித்து போக வேண்டும் என்பதை, திருமாவளவனை கேட்டு, வேல்முருகன் தெரிந்து கொள்ள வேண்டும். 'அரசியலில் வளைந்து கொடுத்தால் தான், உயரங்களை எட்டி பிடிக்க முடியும்'னு சொல்றாரோ? தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி: பா.ஜ.,வுடன் எந்தெந்த கட்சிகள் சேர்கின்றனவோ, அந்த கட்சிகள் எல்லாம் மூழ்கும் கப்பலில் பயணிக்கும் கட்சிகள் தான். தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை பா.ஜ., அரசு தருவது கிடையாது. திட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் தடுத்து வருகின்றனர். இவ்வளவு செய்தும், அவர்களுக்கு மக்கள் வாக்களித்து விடுவரா? தமிழகத்தில் பா.ஜ., எத்தனை குட்டிக்கரணங்கள் அடித்தாலும் ஒன்றும் எடுபடாது. அதெல்லாம் இருக்கட்டும்... 'சீட்' ஒதுக்கீட்டில் அதிருப்தியில் இருக்கும் உங்க தலைவர் ராகுல், தமிழக தேர்தல் பிரசாரத்துக்கு வருவாரா, மாட்டாரா?
என்ன வளைந்து கொடுத்து ஜால்ரா அடித்தும் SV சேகருக்கோ அவர் பிள்ளைகோ திமுக சீட் கொடுக்க வில்லையே. தன் தந்தை வெங்கட்ராமன் பெயரை மயிலாப்பூரில் ஒரு தெருவிற்கு வைக்க விடுவித்த வேண்டுகோளும் நிறைவேறவில்லை.