உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: தி.மு.க., முதல் முறையாக, 1967ல் ஆட்சியை கைப்பற்றியதும், கழக கண்மணிகள் கையை நீட்டிய இடமெல்லாம் காசு கொட்டியது. ஊர்ந்து சென்ற ஊழல், நடந்து, ஓடி, பறக்க ஆரம்பித்தது. கருணாநிதி ஆட்சியில், ஊழல் கப்பல் கப்பலாக அணிவகுத்தது. அந்த மாற்றம், 60 ஆண்டுகளுக்கு பின், இப்போது மீண்டும் துவங்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. புதிய, '108' ஆட்சி அதிகாரத்தில், இதுவரை இல்லாத சாமானியர்கள், புதிதாக பொறுப்பேற்க காத்திருக்கின்றனர். இந்த 108 கை நீட்டுமா, காசு கேட்குமா, கருணாநிதியை பின்னுக்கு தள்ளுமா, தமிழகத்தை 108 ஆம்புலன்சில் ஏற்றுமா... காத்திருப்போம். ஆட்சி அதிகாரத்துக்கு விஜய் கட்சியினர் ரொம்பவே புதுசு என்பதால், இவர் பயப்படுவதிலும் அர்த்தம் இருக்குது! தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா பேச்சு: காங்கிரஸ் தோல்வி அடைந்த போதெல்லாம் தி.மு.க., துணை நின்றது. தி.மு.க., தோல்வி அடைந்த அடுத்த நாளே காணாமல் போனது காங்கிரஸ். முதன் முதலாக ராகுல் தான் அடுத்த பிரதமர் என, 2019ம் ஆண்டின் லோக்சபா தேர்தலில் தேசிய அளவில் பிரகடனப்படுத்தியவர் ஸ்டாலின் என்பதை காங்கிரசார் மறந்தது ஏனோ? சரி விடுங்க... அடுத்த தேர்தலில் நீங்க ஜெயிக்கிற சூழல் வந்துட்டா, இதே காங்கிரசார் உங்க பக்கம் வந்துட போறாங்க! மேற்கு வங்க முன்னாள் கவர்னர் கோபாலகிருஷ்ண காந்தி அறிக்கை: விஜயின் வருகையை துாய்மையான அரசியலின் துவக்கமாக பார்க்கிறேன். பதவிக்காக, அரசியலமைப்பின் அடிப்படை விழுமியங்களை ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. மதச்சார்பற்ற கட்டமைப்பை பாதுகாப்பதே, அவரது முதல் முன்னுரிமையாக இருக்க வேண்டும். குறிப்பாக, முன்னாள் முதல்வர் ஸ்டாலினை ஓர் எதிரியாக பார்க்காமல், முன்னோடியாக கருத வேண்டும். எங்க... 22 வருஷமா கூடவே இருந்த காங்கிரசாரே, ஸ்டாலினை எதிரியாக பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க... இதுல, விஜய் கட்சியினர் இவர் அறிவுரையை ஏற்பாங்களா? தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: கடந்த ஐந்தாண்டு கள் தி.மு.க., ஆட்சியின் அலங்கோலங்களை, அராஜகங்களை, சட்டம் -- ஒழுங்கு சீர்கேட்டை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை, போதைப் பொருள் புழக்கத்தை கண்டிக்க துப்பில்லாமல், அதிகார துஷ்பிரயோகங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க., போன்ற கட்சிகள், தற்போது த.வெ.க.,வுக்கு வெண்சாமரம் வீச தயாராவது, சந்தர்ப்பவாதத்தின் உச்சக்கட்டம். அரசியலே தொழில் என்றாகி விட்ட சூழலில்,அங்கு சந்தர்ப்ப வாதம் தானே முன்னணியில் நிற்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை