உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

பா.ஜ., தேசிய அமைப்பு செயலர் சந்தோஷ் பேச்சு: தமிழக சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வினர் இன்னும் சிறப்பாக பணியாற்றி இருக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் பா.ஜ., ஆட்சியை பிடித்து விட்டது. அடுத்து, நம் முழு கவனமும், தென் மாநிலங்களின் பக்கம் தான். தமிழக வெற்றிக் கழக அரசின் பல செயல்பாடுகள், தி.மு.க.,வை பின்பற்றியே இருக்கின்றன. இது, பா.ஜ.,வுக்கான வாய்ப்பை தானாகவே உருவாக்கும். எனவே, ஒவ்வொரு நிர்வாகியும், தொண்டர்களையும், பூத் கமிட்டி பொறுப்பாளர்களையும் சந்தித்து, கட்சி வளர்ச்சி பணியில் ஈடுபட வேண்டும். வருஷம் பூரா, 'பூத் கமிட்டி' போடுறீங்க... ஆனா, ஓட்டு பெட்டியில விழுற ஓட்டு மட்டும், 'பூதக் கண்ணாடி' வச்சுப் பார்த்தாலும் தெரிய மாட்டேங்குதே! கிடைச்ச வாய்ப்பை வீணாக்கிட்டு, இனி என்ன செஞ்சாலும் ஒண்ணும் தேறாது போலிருக்கே! முதல்வர் விஜய் அறிக்கை: த.வெ.க.,வுக்கு, 35 சதவீத ஓட்டுகள் கிடைத்துள்ளன. தி.மு.க.,வின் ஓட்டு சதவீதம் வெறும், 24.19 சதவீதம் தான். அதாவது, தனித்து போட்டியிட்டு த.வெ.க., பெற்ற ஓட்டுகளை விட, 10 சதவீதம் குறைவு. த.வெ.க.,வை, 3.21 கோடி மக்கள் நிராகரித்ததாக, தி.மு.க., கூறுகிறது. அப்படி பார்த்தால், 3.68 கோடி மக்கள் நிராகரித்த கட்சி, தி.மு.க.,தான். மக்கள் மீது கடன் சுமையை ஏற்றி வைத்து விட்டு, வளர்ச்சிக்காக பெற்ற கடன் என்று வாய் வித்தை காட்டும் தி.மு.க., நம்மை பார்த்து, ஆட்சிக்கான ஆதரவை கடன் பெற்றதாக கூறியதை என்னவென்று சொல்வது! சட்டசபையில, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, இது சம்பந்தமா பேசும்போது, நீங்க அமைதியா வெளிநடப்பு செய்தபோதே, 'இன்னும் சற்று நேரத்தில், காட்டமான அறிக்கை வரப்போகுது'ன்னு புரிஞ்சுது... அது போலவே செஞ்சிட்டீங்களே! தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிக்கை: எங்கள் கூட்டணி கட்சிகளின் நிலைப்பாட்டால், த.வெ.க., ஆட்சி நிலைக்க தேவையான எண்ணிக்கை இருந்தாலும், துாய அரசியல் என சொல்லி ஆட்சிக்கு வந்த நீங்கள், 'அழுக்கு அரசியல்' செய்து கொண்டிருக்கிறீர்கள். பிளவுபட்ட அ.தி.மு.க., எனும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சி செய்து, அவர்களின் எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கியிருக்கிறீர்கள். உங்களது தொடக்கமே இப்படி இருந்தால் முடிவு எப்படி இருக்கும்? அ.தி.மு.க.,வினர், தாமாக த.வெ.க.,வினருக்கு ஆதரவு கொடுக்க வந்தது தான் உண்மைன்னு தமிழகமே சொல்லும்போது, புதுசா கட்சி துவங்கி, புதுசா ஆட்சிக்கு வந்தவங்களை, சிறு வயது முதல் அரசியலில் ஈடுபட்டு, பழம் தின்னு கொட்டை போட்ட, 73 வயசு நிறைந்த தலைவர், இப்படி பேசுவது நல்லா இல்லியே...! அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி பேட்டி: அ.தி.மு.க.,வின், 25 எம்.எல்.ஏ.,க்கள் த.வெ.க.,வுக்கு ஆதரவளித்தாலும், கட்சியில் அனைத்து அதிகாரமும் பொதுச்செயலரான எனக்கு தான் உள்ளது. கொறடாவை நியமிக்கும் அதிகாரம் பொதுச்செயலருக்கு தான் உண்டு. இதை, உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் உறுதிப்படுத்தி உள்ளது. இவரு சொல்றத பார்த்தா, 'வீடு காலியானாலும் பரவாயில்லை, சாவி கொத்து என்கிட்ட தான் இருக்கு'ன்னு சொல்ற மாதிரி இருக்கு!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கண்ணன்
மே 16, 2026 11:29

வயது எவ்வளவானாலும் பட்டறிவோ இல்லை என்றால் ஒன்றுக்கும் உதவாது


Lakshminarasimhan
மே 16, 2026 10:15

த வெ க மற்றும் தி மு க ஆகிய ரெண்டு கட்சிகளையும் மக்கள் புறக்கணித்த அடையாளம் த வெ க பெரும்பான்மையை பெற முடியல அடுத்தது 67 இடங்களில் 3 வது இடத்துக்கு தள்ளப்பட்டது திமுக ஆட்சியை இழந்தது வாக்கு சதவீதம் குறைந்தது