பேச்சு, பேட்டி, அறிக்கை
காங்., தமிழக மூத்த தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை: தேர்தலில் கோலோச்சிய பணத்தின் ஆதிக்கத்தை தகர்த்து மிகப்பெரிய ஜனநாயக புரட்சி செய்த முதல்வர் விஜய், மக்கள் நலமே முதன்மை என்ற இலக்குடன் புதிய சாதனையை படைத்து வருகிறார். அரசின் நிர்வாகத்தில் லஞ்சம், ஊழலை அகற்றி, மக்கள் சேவை எளிதாக கிடைக்க வழி வகுத்துள்ளார். தேர்தலில் தி.மு.க.,தான் பணத்தை வாரியிறைச்சது... அந்த பணத்தில் தான் இவங்க கட்சியில் ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் ஜெயித்திருக்காங்க என்பதை மறந்துட்டாரோ?புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி பேச்சு: தமிழகத்தில் துாத்துக்குடி, ராமநாதபுரம், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் ஏற்படும் சுகாதாரக் கேடுகள், முறைகேடுகள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். திருவள்ளூர், பெரியபாளையம் இறால் தொழிற்சாலையில் நடந்த விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா, 25 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். இறால் தொழிற்சாலை விதிமீறல்கள் மீது த.வெ.க., அரசு கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, எதிர்காலங்களில் இதுபோன்ற விபரீதங்களை தவிர்க்க முடியும்! இந்திய கம்யூ., மாநில செயலர் வீரபாண்டியன் பேட்டி: 'மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது' என்ற தீர்மானம் முதல்வரால் முன்மொழியப்பட்டு, அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. நடுவர் மன்றம் அமைக்க கோரி எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தெரிவித்த திருத்தம் முற்றிலுமாக நீக்கப்பட்டு, முதல்வர் முன்மொழிந்த நிலையிலான தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இன்றைய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, முன்னர் இவங்களது கூட்டணி தோழரா இருந்தவர் என்பதை மறந்துட்டாரோ? தி.மு.க., செய்தி தொடர்பு குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை:விஜய்க்கு, 'ஒய்' பிரிவு பாதுகாப்பு கொடுத்து, விசில் சின்னம் கொடுத்து, அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், செங்கோட்டையன் என நிர்வாகத்துக்கு ஆட்களையும் கொடுத்து, த.வெ.க.,வை ஒரு பகடைக்காயாக, பினாமியாக வைத்து, கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க பா.ஜ., திட்டமிட்டதை முறியடிக்க, தி.மு.க., - அ.தி.மு.க., எனும் திராவிட சகோ தரர்கள், ஒரு வேளை இணக்கம் காண முயன்றிருந்தால், அதில் தவறேதுமில்லையே! தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து ஆட்சிக்கு வர அ.தி.மு.க., தலைமை எடுத்த முயற்சியால தான், இன்று அந்த கட்சி சின்னாபின்னமாகி கிடக்குது... அந்த நிலை தி.மு.க.,வுக்கும் வந்துடாம பார்த்துக்குங்க!