உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

காங்., தமிழக மூத்த தலைவர் அழகிரி பேட்டி: காங்., கட்சியின் தமிழக தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டிருப்பது இயல்பான மாற்றம்தான். இவர், தெலுங்கானா பொறுப்பாளராக இருந்தபோது தான் ரேவந்த் ரெட்டியை அம்மாநில காங்., தலைவராக்க ஏற்பாடு செய்து, அவர் முதல்வராகும் வாய்ப்பை உருவாக்கி கொடுத்தார். மாணிக்கம் தாகூர் தலைமை வலுவடைய நாங்கள் ஒத்துழைப்பு தருவோம். புதிய தலைவருக்கு நீங்க ஒத்துழைப்பு தராம போனாலும் பரவாயில்லை... உபத்திரவம் தராம இருந்தாலே, கட்சி வளர்ச்சிக்கு உறுதுணையா இருக்கும்!@@ தி.மு.க., முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி: தமிழக மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமார், ஏ.டி.எம்., கார்டு வைத்து குழந்தைக்காக மாத்திரையை துாளாக்கியதாக கூறியுள்ளார். ஒரு மாத்திரையை கொடுத்து, அதை அவர் கூறியபடி செய்து காண்பிக்க சொன்னால் உண்மை தெரியவரும். போதை பொருள் பழக்கம் இல்லாதவர் என்பதை மருத்துவ பரிசோதனை மூலம், அமைச்சர் சரத்குமார் நிரூபிக்க வேண்டும். அந்த அமைச்சர் மீது முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் தப்பு செய்திருந்தால் கண்டிப்பாக முதல்வர் விஜய் நடவடிக்கை எடுப்பாரு... அதே நேரம், போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக், உங்க கட்சியில் முக்கிய பதவியில் இருந்ததை மறந்துட்டீங்களோ?

கடலுார் காங்., - எம்.பி., விஷ்ணுபிரசாத் அறிக்கை:

என்.எல்.சி., நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கு மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏழை எளிய மக்களின் நிலங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பொதுத்துறை நிறுவனம், தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியா முழுதும் மின்சாரத்தை வழங்கி வருகிறது. தொடர்ந்து லாபகரமாக செயல்பட்டு வரும் என்.எல்.சி.,யின் பங்குகளை விற்க அனுமதிக்க மாட்டோம். 'பங்குகள் விற்பனை மூலம் கிடைக்கும் லாபத்தை, என்.எல்.சி., விரிவாக்கத்துக்கு பயன்படுத்துங்க'ன்னு இவர் யோசனை தரலாமே!

'வீ த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை பேட்டி:

கடந்த தி.மு.க., ஆட்சி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, த.வெ.க., அரசு எடுத்துள்ள முயற்சியை வரவேற்கிறேன். எண்ணுார் மின் திட்டத்தை பி.ஜி.ஆர்., எனர்ஜி நிறுவனத்திற்கு வழங்கியதில் ஊழல்; ஊட்டச்சத்து மாவு உற்பத்தி செய்ய ஆவின் முன்வந்தபோதும் தனியார் நிறுவனங்களிடம் அதிக விலைக்கு வாங்கியது; பொங்கல் இலவச வேட்டி, சேலை ஊழல்; போக்குவரத்து துறை ஊழல்; 100 நாள் வேலை திட்ட ஊழல் ஆகியவை குறித்தும் விசாரிக்க வேண்டும். தி.மு.க.,வினர் எந்தெந்த துறைகள்ல ஊழல் பண்ணியிருக்காங்க என்ற முழு பட்டியலும் இவர்கிட்ட இருக்கும் போலிருக்கே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை