பேச்சு, பேட்டி, அறிக்கை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு: மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் காரிய நிகழ்வில், என் அப்பா வயது நபர் ஒருவர் என்னிடம் வந்து, 'மகனே, 50 எம்.எல்.ஏ.,க்களுடன் சட்டசபை செல்வாய் என ஆசைப்பட்டேன்; அது நடக்கவில்லை. இடைத்தேர்தலில் நின்று எப்படியாவது உள்ளே போய்விடு' என்றார். சிரித்துக் கொண்டே அவரிடம், 'நான் உறுதியாக செல்வேன்' என்றேன். 'இதே சிரிப்போடு செல் மகனே' என, அவர் கூறினார்.தனித்து போட்டியிட போறீங்களா அல்லது அ.தி.மு.க., - தி.மு.க., தயவுல பொது வேட்பாளரா போட்டியிட போறீங்களா?திராவிட வெற்றிக் கழகம் கட்சி தலைவர் மல்லை சத்யா பேட்டி: வரும் பட்ஜெட் கூட்டத்தில், த.வெ.க., அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்; வளர்ச்சி பணிக்கான திட்டங்களையும் அறிவிக்க வேண்டும். 'மதுபான கடைகளை மூடுகிறோம்' என சொல்லிவிட்டு, உணவகத்துடன் கூடிய, 'ரெஸ்டோ பார்' திறந்தால், 'அதை திறக்க விடமாட்டோம்' என, கண்டிப்பாக வைகோவும், அவரது மகன் துரையும் மல்லுக்கட்ட வருவர்.இவர், தன் முன்னாள் தலைவரான வைகோவையும், அவரது மகன் துரையையும் பாராட்டுவது போல கிண்டல் பண்றாரு என்பது நல்லாவே தெரியுது!அ.தி.மு.க.,வின் எம்.ஜி.ஆர்., இளைஞரணி முன்னாள் துணை செயலர் சீனிராஜ் பேச்சு: அ.தி.மு.க.,வில் மூத்த நிர்வாகிகளுக்கு கட்சி பதவிகளில் இருந்து ஓய்வு வழங்கி, வழிகாட்டுதல் குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர்களை அனுபவ ஆலோசனைகள் வழங்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். குறைந்தபட்சம், 30 முதல் 50 வயது வரை உள்ள இளைஞர்களை மாவட்ட, ஒன்றிய, நகர பேரூராட்சி செயலர்களாக நியமிக்க வேண்டும். காலத்திற்கேற்ப அரசியலை மாற்றிக் கொண்டால் மட்டுமே அ.தி.மு.க.,வுக்கு ஏறுமுகம் இருக்கும். இவர் சொல்றதை பார்த்தால், 72 வயதான பழனிசாமியே வீட்டுக்கு போக வேண்டி யிருக்குமே! ம.தி.மு.க.,வில் இருந்து விலகி, சமீபத்தில் தி.மு.க.,வில் இணைந்த வழக்கறிஞர், 'பொடா' அழகு சுந்தரம் பேச்சு: தி.மு.க.,வில் மாணவர் பருவத்தில் இருந்து பணியாற்றிய நான், வைகோ பேச்சின் மீதான ஈர்ப்பில் ம.தி.மு.க.,வில் இணைந்து, மண் குதிரையை நம்பி நட்டாற்றில் இறங்கி, தற்போது மனம் திருந்தி தி.மு.க.,வில் இணைந்துள்ளேன். தேர்தல் கூட்டணியை மாற்றி மாற்றி, தன்னிச்சையாக முடிவு எடுத்ததால், தமிழக மக்களின் நம்பகத்தன்மையை வைகோ இழந்து விட்டார். முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒருமுறை, 'ம.தி.மு.க., என்றால், மறுபடியும் தி.மு.க., தான்' என்று சிலேடையாக பேசினார்... இவரை போன்றவங்க அதை நிரூபிச்சிட்டு இருக்காங்க!