முதலீடு இன்றி பனை தொழிலில் தினமும் ரூ.1,000 சம்பாதிக்கலாம்!
பனை வேளாண் பொருளாதார பேரமைப்பின் பொதுச்செயலர் குமரிநம்பி:இந்தியாவில் நான்கு வகையான பதநீர் தரும் மரங்கள் உள்ளன. ஒவ்வொரு பனை மரமும் ஒரு இயற்கை தொழிற்சாலை என்று கூறலாம். பனை மரத்தின் ஒவ்வொரு பொருளும் பயன் தரக்கூடியவை.நீர் மேலாண்மையில் பனை மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பனை மரம் மழைப்பொழிவை ஏற்படுத்தும்; காற்றை துாய்மைப்படுத்தும்; பறவைகள் வாழ்விட மாகும்; பல்லுயிர் பெருக்கத்திற்கு துணை புரியும்; இடியை தாங்கும் இயற்கை அரணாக நிற்பதுடன், கடல் சீற்றங்களை தடுக்கும்.நிலத்தடி நீரை சேமிக்கும்; கடல் அரிப்பை தடுக்கும்; நீர் நிலைகளின் கரையை வலுப்படுத்தும்; நிலத்தடி நீரை நன்னீராக்கும்; உயிர் வேலியாக நின்று பாதுகாப்பை தரும்.வறண்ட நிலத்தை வளமாக்கும்; ஒவ்வொரு பனை மரமும் ஆண்டுக்கு, 25,000 லிட்டர் வரை மழை நீரை நிலத்தினுள், 100 அடி ஆழம் வரை கொண்டு சேர்க்கும் உன்னத பணியை ஓசையின்றி செய்து வருகின்றன.பனை மரங்கள் தரும் உணவுப் பொருட்களை, மூன்று விதமாக பிரிக்கலாம். முதலாவது, பதநீர். பனை மரத்தில் இருந்து அதிக வருமானம் தரக்கூடிய பொருள் பதநீர். இதை, கருப்பட்டி, பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனஞ்சீனி போன்ற பொருட்களை தயாரித்து விற்பனை செய்யலாம்.இதை சிறு தொழிலாகவும், பெருந்தொழிலாகவும் செய்யலாம். பதநீர் மற்றும் அது சார்ந்த பொருட்கள் தயாரிப்பில் இலங்கை, தாய்லாந்து, லாவோஸ், மொராக்கோ போன்ற வெளிநாடுகள் பெரும் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றன. அடுத்து பனம்பழத்தை பதப்படுத்தி மதிப்புக் கூட்டுவதன் வாயிலாக நுாற்றுக்கணக்கான உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யலாம். மூன்றாவது பனங்கிழங்கு. நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்தாக திகழும் இக்கிழங்கை அவித்து உலர்த்தி மாவாக்கி, அதிலிருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கலாம்.ஒரு பனை மரத்திலிருந்து ஆண்டுக்கு, 30,000 ரூபாய் வருமானம் பெறலாம். 10 பனை மரங்களை வைத்திருப்போர், தனக்கு மட்டுமின்றி, தன் குடும்பத்தினருக்கும் நிரந்தர வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். 200 பனை மரங்களை கொண்டு ஒரு சிறிய பனை தொழிற்சாலை ஏற்படுத்தி, 20 பேருக்கு நேரடியாகவும், 20 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரலாம்.எந்த முதலீடு இல்லாமல், வீடுகளில் இருந்து பனை தொழில் செய்து நாளொன்றுக்கு, 1,000 ரூபாய் வரை வருமானம் பெறலாம். முனைப்புடன் செயல்பட்டால், ஆயிரங்களில் மட்டுமல்ல... லட்சங்களிலும் சம்பாதிக்கலாம்.தொடர்புக்கு: 90927 99900