உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / முதுமையை மறந்து இயங்கி கொண்டே இருக்கிறேன்!

முதுமையை மறந்து இயங்கி கொண்டே இருக்கிறேன்!

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தான் கற்ற ஓவியக் கலையை மற்றவர்களுக்கு கட்டணமின்றி கற்றுக் கொடுக்கும், சென்னையை சேர்ந்த, 77 வயது லட்சுமி ராகவன்: என் பூர்வீகம் சீர்காழி. சென்னை, மயிலாப்பூரில் வளர்ந்தேன். பள்ளிப்படிப்பை முடித்ததும், ஸ்டெல்லா மேரிஸ் கல்லுாரியில் பைன் ஆர்ட்ஸ் குரூப்பில் சேர்ந்து பட்டம் பெற்றேன்.கணவர், வங்கியில் வேலை பார்த்ததால் இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கும் பயணப்பட்டேன். தனிமையை தவிர்க்க, அந்தந்த ஊர்களின் பாரம்பரிய ஓவியங்களை கற்றுக் கொள்வேன்.கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்து சேர்ந்தோம். சமஸ்கிருதம் நன்கு தெரியும். அக்கம்பக்கத்தில் சமஸ்கிருதம் படிக்கும் மாணவர்களின் பெற்றோர், சமஸ்கிருதம் குறித்த விளக்கங்களை கேட்டு தெரிந்து கொள்ள என்னிடம் வருவர்.அப்படி வரும் போது, சுவர் முழுக்க மாட்டப்பட்டிருக்கும் நான் வரைந்த ஓவியங்களை பார்த்து வியந்து பாராட்டுவர். அப்போது, 'நீங்கள் ஏன் என் பசங்களுக்கு ஓவியம் கற்றுக் கொடுக்க கூடாது?' என, கேட்பர்.ஒருமுறை, கணவருடன் வங்கியில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அவர், 'வருஷா வருஷம் சம்மரில் நம் வங்கி சார்பாக, 'கேம்ப்' நடத்துறோம். இந்த ஆண்டு, ஆர்ட் எக்ஸ்பிஷனை சேர்த்துக் கொள்ளலாமா?' என்றார்.அந்த சம்மர் கேம்பில் நான் வரைந்த ஓவியங்கள் இடம் பெற்றது மட்டுமல்லாமல், அதை பார்க்க வந்த பலர், 'எங்கள் பிள்ளைகளுக்கு ஓவியம் கற்றுத்தர முடியுமா?' என்று கேட்டனர். அப்படி துவங்கப்பட்டது தான் இந்த ஓவியக்கூடம்.ஆரம்பத்தில், அக்கம் பக்கத்தில் உள்ளோருக்கு சொல்லி கொடுக்க ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில், கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் ஓவியம் பயின்றனர். இதுவரை, 'ஓவியம் கற்றுக் கொடுக்கிறோம்' என்று எந்த இடத்திலும், விளம்பரம் செய்ததே இல்லை.இப்போது மாலையில் மட்டும், 30 பேர் வரை வருகின்றனர். அதில் இல்லத்தரசிகளும் அதிகம். இதுவரை பயிற்சிக்கான கட்டணம் என எதுவும் வாங்கவில்லை. பேத்திக்கு ஓவியம் கற்றுக் கொடுக்க வேண்டும் என, என்னை பார்க்க வந்தார், 85 வயதை கடந்த ஒரு அம்மா. பேத்தி வரைவதை பார்த்து தானும் வரைய வேண்டும் என்று தற்போது அவரும் கற்றுக் கொள்கிறார்.இவரை போல் இங்கு வரும் மாணவர்களின் பெற்றோர் பலரும் கற்றுக் கொள்கின்றனர். காரணம், அவர்கள் மனதிற்குள் எங்கோ ஓர் மூலையில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஓவிய ஆர்வம் இங்கு வந்ததும் எட்டி பார்த்து விடுகிறது.மேலும், 'இன்றைய வேகமான வாழ்க்கையில் மனதை ரிலாக்சாக வைத்துக் கொள்ள இந்த ஓவியப் பயிற்சியும், இங்கிருக்கும் நேரமும் உதவுகிறது' என, பலர் கூறுகின்றனர். அவர்கள் கூறும் அந்த வார்த்தைகள் தான், முதுமையை மறந்து என்னை இயக்கி கொண்டே இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ