உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் /  இயற்கை அழகு சாதன பொருட்களுக்கு நல்ல எதிர்காலம்!

 இயற்கை அழகு சாதன பொருட்களுக்கு நல்ல எதிர்காலம்!

'தி பாரம்பரியம் காஸ்மெட்டிக்ஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வரும், ஈரோட்டை சேர்ந்த, 30 வயதான கவுசல்யா: என்னுடையது விவசாய குடும்பம். விவசாயத்தில், அப்பா சந்தித்த பிரச்னைகளை பார்த்து தான் வளர்ந்தேன். படித்து முடித்ததும், தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வந்தேன். சொந்தமாக பிசினஸ் செய்யலாம் என்று தோன்றியது. என்ன செய்வது என்று யோசித்தபோது, அழகு சாதன பொருட்களை இயற்கையாக தயாரிக்கலாம் என்ற யோசனை கிடைத்தது. சரியான விலையில், தரமான அழகு சாதன பொருட்கள் தயாரித்து, சமூக வலைதளம் வழியாக விற்பனை செய்ய திட்டமிட்டேன். சொந்த இடத்தில் நாமே மூலப்பொருட்களை விளைவிப்பது, விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்வது என்றெல்லாம் அடுத்தடுத்து முடிவெடுத்தேன். அப்பா, தென்னை விவசாயத்தில் ஈடுபட்டிருந்தார். இதனால், தேங்காய் எண்ணெயில் இருந்து சோப் தயாரிக்க முடிவெடுத்தேன். அதுகுறித்து முறையாக கற்று, சோப் செய்து பார்த்தேன். உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்தபோது நல்ல வரவேற்பு. இப்போது, மாதத்திற்கு, 2 டன் தேங்காய் எண்ணெயை எங்களுடைய சோப் தயாரிப்புக்கே பயன்படுத்தி கொள்கிறோம். பெரிய விளம்பரங்கள் எதுவும் இல்லாமலேயே, லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். இந்த நிதியாண்டில் மட்டும், 1.50 கோடி ரூபாய் வருவாயை தாண்டி இருக்கிறோம். அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு என்று முடிவெடுத்ததும், அதற்கான பயிற்சிகளை படித்து முடித்தேன். தயாரிப்புகளை மேம்படுத்தவும், எங்கள் நிறுவனத்திலேயே ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவும் அமைத்தேன். தொழிலை சரியாகவும், அறிவியல் பூர்வமாகவும் செய்கிறோம் என்ற திருப்தி கிடைத்தது. என் நிறுவனத்தில் பணிபுரிவோர், 90 சதவீதம் பேர் பெண்கள். வீட்டில் இருந்தபடியே பல பெண்கள் பகுதி நேரமாகவும் எங்கள் தயாரிப்புகளுக்கு உதவுகின்றனர். என் கணவரும், என் எல்லா முயற்சிகளுக்கும் ஆதரவு கொடுத்து, என் கனவுகளை நனவாக்க, அனைத்து உதவிகளையும் செய்கிறார். 'விவசாயத்தில் லாபம் இல்லை' என்று புலம்பாமல், இதுபோன்ற மதிப்புக் கூட்டலில் ஈடுபட்டால் நீங்களும் சம்பாதிக்க முடியும்; விவசாயமும் வளரும். விளைவிக்கிற பொருட்களுக்கு ஏற்ற வருமானத்தையும் விவசாயிகளுக்கு நீங்களே கொடுக்க முடியும். அப்படி ஆரம்பித்த என் சிறு முயற்சி தான், இப்போது பெரிதாக வளர்ந்து, மற்றவர்களுக்கும் பலன் தருகிறது. இத்தொழிலுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. கூடிய விரைவில், வெளிநாட்டிலும் கால் பதிக்கும் முயற்சிகளிலும் இருக்கிறோம். தொடர்புக்கு 90421 72818 theparambariyam.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை