குழந்தைகளை வரவேற்கும் பள்ளி தோட்டம்!
பள்ளியில் தோட்டம் அமைத்து பராமரிக்கும், புதுக்கோட்டை மாவட்டம், தெம்மாவூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியை சத்யா: என் சொந்த ஊர், திருச்சி மாவட்டம், துறையூர். அரியலுார் மாவட்டம், சின்னபட்டாக்காடு அரசு பள்ளியில் 2010ல் ஆசிரியை வேலை கிடைத்தது. வித்தியாசமான கற்பித்தல் முறை வாயிலாக, குழந்தைகளுக்கு புதுப்புது அனுபவங்களை கொடுக்க முடிவு செய்தேன். பள்ளி வளாகத்தில் காய்கறி தோட்டம் அமைத்தோம். குழந்தைகளுக்கு செடிகளை பிரித்து கொடுத்து, பராமரிக்க சொன்னேன். அந்த செடிகளில் கிடைக்கும் காய்கறிகளை, குழந்தைகள் அவர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்வர். பள்ளியிலேயே உரக்குழி அமைத்தேன்; மட்கும் குப்பைகளை அதில் போட்டு, நாங்களே உரமும் தயாரித்தோம். கடந்த 2013ல், அயன் சுத்தமல்லி நடுநிலைப் பள்ளிக்கு மாறுதல் ஆனேன். அந்த பள்ளி வளாகத்தில், 1 ஏக்கர் நிலத்தில் சீமைக் கருவேல மரங்கள் சூழ்ந்து மண்டி கிடந்தன. அந்த இடத்தை சுத்தம் செய்வதில், ஊரில் சில பிரச்னைகள் இருந்தன; அதனால், பல ஆண்டுகளாக அப்படியே கிடந்தது. என்ன ஆனாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று, நான் முயற்சியை ஆரம்பித்தேன். பள்ளி நேரத்துக்கு பின், நானே மரங்களை வெ ட்ட ஆரம்பித்தே ன். என்னை பார்த்து பெற்றோர், ஆசிரியர்கள் அனைவரும் இணைந்தனர். பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து , முள் வேலி அமைத்தோம். பஞ்சாயத்து தலைவருக்கு கோரிக்கை வைத்து, பள்ளியில் தண்ணீர் தொட்டி அமைத்தோம். பின், மண்ணை பக்குவப்படுத்தி மாணவர்களை இணைத்து, 1 ஏக்கர் நிலத்தில் காய்கறி தோட்டம் அமைத்தேன். காய்கறிகள், பழங்களில் என்ன சத்து இருக்கிறது என்பதை, மனப்பாடம் செய்யாமலேயே குழந்தைகள் இயல்பாக சொல்ல ஆரம்பித்தனர். காய்கறிகளை ஆறு மாதங்களில் மாணவர்கள் அறுவடை செய்தனர். இந்த மாற்றங்கள் வாயிலாக, 2016ல், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் அமைப்பான, 'யுனிசெப்' எங்கள் பள்ளியை ஆவணப் படுத்தியது. கடந்தாண்டு தெம்மாவூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு மாறுதல் கிடைத்தது. இங்கும் தோட்டம் அமைத்து பராமரிக்க ஆரம்பித்தேன். பனை விதைகள் நடவு செய்வதை மாணவர்களுடன் சேர்ந்து முன்னெடுத்து இருக்கிறேன். என் பள்ளிக்கு குழந்தைகள் மகிழ்ச்சியுடன் வருவர். தங்களை வரவேற்க, தாங்கள் வளர்க்கும் செடிகள் காத்திருக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர். அந்த நம்பிக்கையும் அன்பும் அடுத்தடுத்த மாற்றங்களை நோக்கி அவர்களை முன்னேற்றும். அது போதும் எனக்கு!