வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அருமை,அருமை, வாழ்த்துக்கள் ஐயா, வாழ்க வளமுடன்.
மேலும் செய்திகள்
சீமானுக்கு எத்தனை நாக்குகள்?
14-Oct-2025
செங்கல்பட்டு மாவட்டம், இந்தளூர் கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன்: என் அப்பா, செருப்பு தைக்கும் வேலை தான் செய்தார். குழந்தையிலேயே பசியின் வலியை உணர்ந்தவன், நான். 'படிப்பு தான் என் வாழ்க்கையை மாற்றும்; எப்படியாவது முன்னேறி விடலாம்' என நினைத்தேன். ஆனால், உடல்நிலை சரியில்லாமல், அப்பா இறந்து விட்டார். குடும்ப பொறுப்பை நான் தான் சுமக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்ததால், 10ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தினேன். பிழைப்பிற்காக, உறவினருடன் சென்னை வந்தேன். ஹோட்டலில் வேலை, கட்டட தொழில் என, கிடைக்கும் கூலி வேலையெல்லாம் செய்து வந்தேன். திருமணத்திற்கு பின், மனைவியும் என்னுடன் கூலி வேலை செய்தார். குழந்தைகள் பிறந்ததும், வருமானம் போதவில்லை; அதனால் சொந்த ஊருக்கே திரும்பினோம். என் அப்பாவின் தொழிலை கையில் எடுத்தேன். பிள்ளைகள் இருவரும், வீட்டு கஷ்டத்தை உணர்ந்து நன்றாக படித்தனர். பெண்ணிற்கு மருத்துவ படிப்பு படிக்க ஆசை. பள்ளி முடித்தவுடன், மருத்துவ கல்லுாரியின் கட்டணத்தை கேட்டதும், என் தலையே சுற்றி விட்டது. ஆனால், என் மகள், 12ம் வகுப்பு தேர்வில், பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்றார். அந்த பள்ளி ஆசிரியர் ஒருவர், 'நீட்' தேர்விற்கு மகளை தயார் செய்து, மேற்படிப்பிற்கு வழிகாட்டினார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதும், அரசு மருத்துவக் கல்லுாரியில் இலவசமாக படிக்க வாய்ப்பு கிடைத்தது. நன்றாக படித்து எம்.பி.பி.எஸ்., முடித்து, இப்போது பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார்; மகனுக்கும் ரயில்வே துறையில் வேலை கிடைத்து விட்டது. என் அடுத்த தலைமுறையின் தலையெழுத்தை, படிப்பு தான் மாற்றி இருக்கிறது. 'இப்போது நீ செருப்பு தைக்கிறவர் இல்லை... டாக்டரோட அப்பா' என, என் மகள் அடிக்கடி கூறுவார். டாக்டரோட அப்பாவாக இருக்கலாம்... ஆனால், எனக்கென ஒரு வருமானம் வேண்டும்; அதனால், இப்போதும் செருப்பு தைக்கும் வேலையை செய்கிறேன். எனக்கு கிடைக்கும் வருமானத்தில், மற்றவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். சிறு வயதிலிருந்து நல்ல உணவு இல்லாமல், வெளியிடங்களில் மரியாதை இல்லாமல் இருந்த நான், இன்று தலைநிமிர்ந்து நடக்கிறேன். அதற்கு என் பிள்ளைகள் தான் காரணம். என் பிள்ளைகள் லட்சக்கணக்கில் சொத்து சேர்த்திருந்தால் கூட, இப்படியொரு சந்தோஷமும், பெருமையும் எனக்கு கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை. இந்த உலகத்திலேயே சந்தோஷமான மனிதன் நான் தான் என்று தோன்கிறது. படிப்புக்கு அம்புட்டு மவுசு!
அருமை,அருமை, வாழ்த்துக்கள் ஐயா, வாழ்க வளமுடன்.
14-Oct-2025