அழகுக்கு வயது தடையில்லை!
நுாற்றுக்கும் மேற்பட்ட மூலிகை தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி, அழகுக்கலை துறையில், 30 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள, 75 வயதை கடந்த, சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை ஆலோசகர் ராஜம் முரளி:சென்னை சைதாப்பேட்டையில் பிறந்தேன். எத்திராஜ் கல்லுாரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த போதே வேலை கிடைத்தது.பிள்ளைகள் பெரியவர்களான பின், ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்து, தமிழக அரசின் பெண்கள் முன்னேற்றத்துக்கான பயிற்சி வகுப்புகளில், 43 வயதில் பங்கேற்றேன். அழகுக்கலை துறையில் ஆர்வம் இருந்தாலும், அந்த வயதில், 'பியூட்டி பார்லர்' வைக்க முடியாது என்பதால், நம் முன்னோர் அறிவுறுத்திய, பாரம்பரிய அழகு பொருட்கள் பற்றிய, 'ஹெர்பல் காஸ்மெடிக்' பயிற்சியை கற்க விரும்பினேன்.நான் மட்டுமே அந்த பாடத்தை தேர்வு செய்ய, சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சித்த மருத்துவ பிரிவுக்கு என்னை அனுப்பினர்.அங்கிருந்த தலைமை மருத்துவர் என் ஆர்வத்தை புரிந்து, காலை, 7:00 - 9:00 மணி வரை புறநோயாளிகள் பிரிவில் அமர வைத்தார். எண்ணற்ற நோயாளிகளை, அவர்களுக்கான பிரச்னைகளை, குறிப்பாக சரும நல பிரச்னைகளை நேரில் கண்டபோது, இயற்கை நமக்கு கொடுத்த பொருட்களை வைத்தே, சரும நலத்தை மேம்படுத்த முடியும் என்று உணர்ந்தேன். காலை, 9:00 மணிக்கு மேல் மருத்துவமனையை சுற்றியுள்ள மூலிகை தோட்டத்தை வலம் வருவேன். ஒவ்வொரு செடியின் அருமை பெருமைகளை, தோட்டத் தொழிலாளர்கள் விளக்கி கூறினர்; அதை எழுதி வைத்த, 'டைரி' இன்னும் என்னிடம் உள்ளது.ஒவ்வொருவரும் தங்களை அழகுப்படுத்திக் கொள்ளவே விரும்புவர். சிலர், 'நமக்கு வயதாகி விட்டது... இனி எதற்கு அழகுபடுத்த வேண்டும்' என நினைக்கின்றனர்; அது தவறு. அழகு என்பது தன்னம்பிக்கை. வயது ஏற ஏற எல்லா உறுப்புகளின் செயல் திறன்களும் குறைந்து கொண்டே போகலாம். குறையாதது மனநிலை மட்டும் தான்; அதை திடமாக்குவது தான் அழகு. அதற்காக, பியூட்டி பார்லர் சென்று அழகாக்க வேண்டும் என்பதல்ல. இன்றைய சூழலில், அது அனைவருக்கும் சாத்தியமில்லை. நம் வீட்டு பொருட்களை பயன்படுத்தி, நமக்கு ஏற்ப அழகை மேம்படுத்திக் கொள்ளலாம்.'வயதானால் முடியாது' என்று நினைக்கக் கூடாது. நம்மால் முடிந்ததை செய்தபடியே இருக்கலாம். எல்லாரும் அழகானவர்கள் தான். வெளியில் செல்லுங்கள்; இயற்கையை ரசியுங்கள். நீங்கள் எப்படிப்பட்டவராக இருந்தாலும், உங்களை சந்திக்க நினைப்பவர்களிடம் ஒரு புன்சிரிப்புடன், 'ஹாய்' சொல்லுங்கள். அது உங்களை உயர்த்தும்; அழகாக காட்டும். முதுமைக்கு மரியாதை தரும்!