உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / பறவைகளுக்கும் வாழ்க்கை இருக்கிறது!

பறவைகளுக்கும் வாழ்க்கை இருக்கிறது!

இந்தியா முழுக்க பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் பறவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கிருபா நந்தினி: கல்வி பின்புலமே இல்லாத கிராமத்தில் பிறந்தவள் நான். கடும் பொருளாதார நெருக்கடிக்கு இடையில், விலங்கியலில் எம்.பில்., முடித்தேன். புத்தகங்களை விட, கருத்தரங்குகள், பயிலரங்குகள், களப்பணிகள் வாயிலாகத் தான் நிறைய கற்றுக்கொண்டேன். பறவைகள் குறித்த ஆராய்ச்சியில் ஆர்வம் அதிகமாக, நிறைய பயணங்கள் செய்து ஆய்வுகள் மேற்கொண்டேன். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, ஒரிசா, ராஜஸ்தான், குஜராத் என, பல மாநிலங்களின் மூலை முடுக்குகளில் எல்லாம் பல்வேறு பறவைகளை தேடி அலைந்து திரிந்திருக்கிறேன். என் ஆய்வறிக்கைகள் வெறும் காகிதமாக மட்டும் நின்று விடாமல் இருக்கணும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால், பழங்குடிகள், வெவ்வேறு இனக்குழு மக்கள், குறிப்பாக பெண்கள், மாணவர்கள் என நான் பயணிக்கிற இடங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரம்பித்தேன். தற்போது வரை தோராயமாக, 5,000 மாணவர்களை சந்தித்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக பேசி இருக்கிறேன். இந்தியா முழுக்க, எங்கெல்லாம் இயற்கைக்கு மாறாக பறவைகள் மரணம் அடைகிறதோ, அங்கு எல்லாம் உடல்கூறாய்வு மற்றும் சுற்றுப்புற சூழலை ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்கிறேன். இதுவரை, 1,000 பறவைகளுக்கு மேல் உடல்கூறாய்வு செய்திருக்கிறேன். பறவைகளின் இறப்பு குறித்த உண்மையான காரணத்தை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும்போது நிறைய அச்சுறுத்தல்கள், மிரட்டல்களை சந்தித்து இருக்கிறேன். பறவைகளின் இறப்புக்கு பல காரணங்கள்; அதில் ஒன்று, மூடநம்பிக்கைகள். மூடநம்பிக்கையால், மக்களால் வெறுக்கப்படும் பறவையாக ஆந்தை மாறி இருக்கிறது. அதன் வழித்தடங்களை மக்கள் வெறி கொண்டு அழிக்கின்றனர். கிளி ஜோதிடம், கிளிகளுக்கான பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. குஜராத், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் உத்ராயன் என்ற பண்டிகையில், ஒருவர் பட்டத்தை மற்றவர் அறுக்கும் போட்டி நடக்கிறது. இதற்காக கண்ணாடி துகள்கள் பூசப்பட்ட மாஞ்சா நுாலை பயன்படுத்துகின்றனர். அந்த நுாலில் மாட்டி, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பறவைகள் பாதிக்கப்படுகின்றன. இது மாதிரியான நிகழ்வுகளை மையமாக வைத்து, குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, கதை வடிவத்தில் ஒரு புத்தகம் எழுதி வருகிறேன். பறவைகளுக்கும் வாழ்க்கை இருக்கிறது என யோசிக்கிற, அவற்றை காப்பாற்ற செயல்படுகிற மாணவர்களை உருவாக்க வேண்டும். இந்திய பறவையியல் வல்லுநர் சலீம் அலி விட்டுச் சென்றிருக்கும் பல கேள்விகளுக்கு விடை தேடணும் என்பதே என் இலக்கு!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ