மேலும் செய்திகள்
இருமொழி கொள்கை என்பது முழு பொய்!
23-Dec-2024
கல்வியால் வறுமையை ஜெயித்த, திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்த 30 வயதாகும் ஜெயசக்தி: அப்பா, அம்மாவுக்கு நான் ஒரே பொண்ணு. கிடைக்கிற வேலையை எல்லாம் பார்த்து என்னை வளர்த்தாங்க. சின்ன குடும்பமா இருந்தாலும் எங்க வறுமை பெருசு. குடும்ப கஷ்டத்தை உணர்ந்து நல்லா படிச்சு, 10ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தேன். அடுத்து பிளஸ் 1க்கு, 3,500 ரூபாய், 'பீஸ்' கட்டணும். அம்மா வேலை பார்த்த கம்பெனியில், நானும் சுத்தம் செய்யும் வேலையில் சேர்ந்தேன். அந்த வருமானத்தை சேமித்து தான், பீஸ் கட்டினோம். நல்ல மதிப்பெண் எடுத்ததால், திருச்செங்கோடு கல்லுாரியில், 'பி.டெக்., பயோ டெக்னாலஜி' படிக்க, 'சீட்' கிடைத்தது.அங்கும் பீஸ் கட்ட வழியில்லை. நிறைய இடத்தில் கடன் வாங்கி தான் படித்து முடித்தேன். ஆனாலும், வேலை கிடைக்கவில்லை.அம்மாவின் கடைசி நகையான தாலிக் கொடியை அடகு வைத்து, 'மெடிக்கல் கோடிங்' படித்தேன்.மிகுந்த சிரமங்களுக்கு பின் ஒரு வழியாக, 2015ல் சென்னையில் வேலை கிடைத்தது. தனியார் வங்கி கால் சென்டரில் தான் முதல் வேலை. மாதம், 4,500 ரூபாய் சம்பளம்.அதில் இருந்தபடியே, எனக்கான வேலையை தேடினேன். மெடிக்கல் கோடிங் துறையில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்த போது, என் வாழ்க்கை மாற ஆரம்பித்தது.அந்த வேலையில் முதல் சம்பளத்தை வாங்கியதும், நான் செய்த முதல் விஷயம்... பெற்றோரை கழிப்பறை இருக்கிற வாடகை வீடாக பார்த்து குடியேற வைத்தது தான். அடுத்தது, வயிறார சாப்பிட்டோம். வெளியே போட்டு செல்வதற்கு நல்ல ஆடைகளை வாங்கினோம். அடிப்படை தேவைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டோம்.ஊரில் வீடு கட்டலாம் என்று சொன்னதும், என் பெற்றோர், 'நீ பொம்பளப் புள்ள, சம்பாதிக்கிற காசை சேர்த்து வைத்து திருமணம் செய்து, நிம்மதியாக இரு' என்றனர். ஆனால், நான் கேட்கவில்லை.சொந்த வீட்டில் அவர்களை, 'ஜம்'முன்னு உட்கார வைத்தேன். அடுத்து திருமணம்... என்னை புரிந்து கொண்ட அன்பான கணவர் அமைந்தார்.எனக்கு, 'விட்டிலிகோ' எனப்படும் வெண்புள்ளி பிரச்னை இருந்தது. தற்போது அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன்.இந்த பிரச்னையால் அப்போது என்னுடன் நட்பு பாராட்டவோ, அன்பாக பேசவோ யாருமே இல்லை; பெரும்பாலும் தனிமையில் தான் இருந்துள்ளேன். நான் இப்போது நன்றாக இருக்கிறேன்.என் படிப்பும், வேலையும் தான், எங்கேயோ இருந்த என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.உங்கள் அடையாளம் எதுவாகவும் இருக்கலாம். ஆனால், அது எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதை நோக்கி செல்லுங்கள். அதற்கு படிப்பையும், வேலையையும் கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள்!
23-Dec-2024