உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் /  கட்டைக்கூத்து கலையை பாதுகாக்கும் நெதர்லாந்து ஹன்னா!

 கட்டைக்கூத்து கலையை பாதுகாக்கும் நெதர்லாந்து ஹன்னா!

ஐரோப்பிய நாடான நெதர்லாந்தை பூர்வீகமாக கொண்ட, காஞ்சிபுரத்தில் வசிக்கும் ஹன்னா: தமிழகத்தின் தொன்மையான கலைகளில் ஒன்று, கட்டைக்கூத்து. இது, மரத்தாலான முகமூடிகளை அணிந்து நடத்தப்படும் ஒரு கூத்து வடிவம். அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த கலையை மீட்கும் பொறுப்பை கையில் எடுத்திருக்கிறேன். கலாசார தேடலுக்காகத்தான் இந்தியா வந்தேன்; ஆனால், இன்று கலையை காக்கும் முயற்சியில் தீவிரமாக இயங்கி வருகிறேன். 35 ஆண்டுகளாக இந்தியாவில் இருக்கிறேன். என் தாய்மொழி டச்சு என்றாலும், தமிழ் நன்றாக தெரியும். நெதர்லாந்தில் இருக்கும் போதே தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். இந்திய அரசின் ஊக்கத்தொகை வாயிலாக, தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் தமிழ் மக்களிடம் பேசி பேசி, இப்போது தமிழில் அனைத்து வார்த்தைகளும் அத்துப்படி. தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்த புதிதில், இதிகாசங்களை என்னால் படித்து புரிந்துகொள்ள முடியவில்லை. அப்போது தான் இதிகாசங்களை கதையாக சொல்கிற கட்டைக்கூத்து கலை அறிமுகம் ஆனது. கட்டைக்கூத்தை மையமாக வைத்து, முனைவர் பட்ட ஆய்வை முடித்தேன். ஒரு கட்டத்தில், கட்டைக்கூத்து என் வாழ்க்கையில் ஓர் அங்கமாகவே மாறியது. கட்டைக்கூத்து கலைஞர் ராஜகோபாலும், நானும் காதல் திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் இருவரும் சேர்ந்து, கட்டைக்கூத்து கலைக்காக ஏதாவது செய்ய வேண்டும் என முடிவு செய்தோம். பொதுவாக, கட்டைக்கூத்து கலையில் ஆண்கள் தான் அதிகம் ஈடுபடுவர். ஆனால், நாங்கள் பெண்களுக்கும் பயிற்சி கொடுத்து, பெண் கலைஞர்களையும் உருவாக்கி இருக்கிறோம். கட்டைக்கூத்து என்பது கதை மூலம் ஒரு வழிபாடு. மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்களையும், புராணங்களையும் பொருள் மாறாமல் நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் எளிய வழி. இந்த கலையில் கலைஞர்களின் ஒவ்வொரு அசைவும், குரலும் அந்த கதையை உயிர்ப்பிக்கும். இந்த கலைக்காகவே வாழ வேண்டும் என்பது தான் என் விருப்பம். அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிற இந்த கலையை மீட்டெடுக்க தமிழர்கள் முன்வர வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புஞ்சையரசந்தாங்கல் கிராமத்தில் கட்டைக்கூத்து சங்கம் இயங்குகிறது. கட்டைக்கூத்தின் அடிப்படையை புரிந்துகொள்ள, 10 மாதங்கள் முழுமையாக பயிற்சி எடுத்தால் போதும். இந்த கலையை காக்கும் முயற்சியில் அனைவரும் இணையலாம்! தொடர்புக்கு: 99945 56473 ****************************** கல்வி என்ற ஆயுதம் கரை சேர்த்து விடும்!கல்வியால் முன்னேற்றம் அடைந்த, நாமக்கல் மாவட்டம், மோகனுாரைச் சேர்ந்த கலையரசி: அப்பா, அம்மா, தங்கை என எங்களுடையது சிறிய குடும்பம். அப்பா, அம்மா விவசாய கூலி தொழிலாளிகள்.பெற்றோர் வருமானத்தில், மூன்று வேளை சாப்பாடு கிடைத்தால் பெரிய நிம்மதி என்கிற மாதிரியான வாழ்க்கை... அதனால், எதற்கும் ஆசைப் பட்டதில்லை.'படித்து முடித்து, மேலே வந்துவிட்டால் எல்லாம் மாறி விடும்' என, சிறிய வயதில் மனதில் பதிந்து விட்டது. பள்ளியில் படிக்கும் காலத்தில், பகுதி நேர வேலைக்கு சென்று என் திறமைகளை வளர்த்து கொண்டேன்.பகுதி நேர வேலையில் கிடைத்த சிறு தொகையில் வீட்டுக்கு கொஞ்சம் கொடுப்பேன்; மீதி பணத்தில் கல்லுாரி கட்டணம் கட்டுவேன்.படிப்பு முடிந்ததும், ஒரு தனியார் மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்தேன். லேசாக மழை பெய்தாலும், ஒழுகும் கூரை வீட்டில் தான் குடியிருந்தோம்.இப்போது கரூரில் ஒரு தனியார் வங்கியில், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பணியில் இருக்கிறேன். இந்த வேலையில் சேர்ந்ததும் முதல் வேலையாக, ஓட்டு வீட்டுக்கு குடிபெயர்ந்தோம். அடுத்ததாக, வீட்டுக்கு தேவையானவற்றை ஒவ்வொன்றாக வாங்கினேன்.நல்ல வேலை, நிறைவான சம்பளம், நினைத்ததை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ள முடியும் சாத்தியம் என, பல சந்தோஷங்களை பார்க்கிறேன். இதையெல்லாம் விட பெரிய சந்தோஷம், சமூகத்தில் எங்களுக்கு கிடைத்த அங்கீகாரம்.இந்த சமூகத்தில், தன்னை விட வறியவர்களுக்கு உதவ நினைப்பவர்களை விடவும், அவர்களை எப்பவும் தனக்கு கீழேயே வைத்திருக்க நினைப்பவர்கள் தான் அதிகம்.அந்த சூழலில், படித்து பட்டதாரியாக நின்றது என்னுடைய முதல் வெற்றி. வேலை கொடுத்த வாழ்க்கை என, அடுத்தடுத்து வெற்றிகள் தொடர்ந்தன.மக்களுக்கு அடிப்படை தேவை உணவு, உடை, இருப்பிடம். ஆனால், எங்களுக்கு அந்த அடிப்படை தேவைகள் கிடைக்கவே கல்வி தான் காரணம்.கூரை வீட்டை ஓட்டு வீடாக மாற்றியதும், குடும்பத்தின் நிம்மதியான வாழ்க்கைக்கு அடித்தளமிட்டதும் என் படிப்பு தான்.ஆசிரியை ஆக வேண்டும் என்பது பல ஆண்டு கனவு. இப்போது அஞ்சல் வாயிலாக பி.எட்., படித்து கொண்டு இருக்கிறேன். கல்வியின் மகத்துவம் ஒருவருக்கு தரும் மரியாதையை மற்றவர்களுக்கும் எடுத்து சொல்லணும்...வேறு எதுவும் இல்லை என்றாலும், கல்வி என்ற ஆயுதம் கரை சேர்த்துவிடும் என்ற நம்பிக்கையை மற்றவங்களுக்கு ஏற்படுத்தணும்; அதுதான் என் லட்சியம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ