சமையல்காரி என்று சொல்வதில் தான் எனக்கு பெருமை!
'மாஸ்டர் செப் தமிழ்' என்ற, 'டிவி' நிகழ்ச்சியில் பங்கேற்று, முதல் 12 போட்டியாளர்களில் ஒருவராக வந்த பெங்களூரைச் சேர்ந்த சங்கீதா: சேலம் மாவட்டம், ஆத்துார் தான் எனக்கு பூர்வீகம். எம்.பி.ஏ., முடித்திருக்கிறேன். சிறு வயது முதலே சமைக்க பிடிக்கும். படித்து முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தேன். காதலித்தவரை மணந்து, பெங்களூருக்கு குடிபெயர்ந்தேன். மகன் வளர ஆரம்பித்ததும் அதிக நேரம் கிடைத்தது. புதிதாக ஏதாவது சமைத்தால், அதை மொபைல் போனில் வீடியோ எடுத்து பதிவிடுவேன். இதை பார்த்துவிட்டு என் நண்பர்கள், 'நீ யு டியூப் சேனல் தொடங்கு' என்றனர். அப்போது, எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது. எப்படி வீடியோ எடுப்பது, 'எடிட்' செய்வது என எதுவுமே தெரியாது. எல்லாரும் சொல்கின்றனர் என்பதால், முயற்சி செய்தேன். 'தெருவே மணக்கும் தக்காளி ரசம்' என்ற வீடியோ தான், முதன்முதலில் எனக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. பெரிய கேமரா வாங்கி, தொழில் முறை படப்பிடிப்புடன், சமையல் வீடியோக்களை எடுக்க ஆரம்பித்தேன். ஒரே ஆண்டில், 10 லட்சம் பார்வையாளர்கள் கிடைத்தனர். என் வீடியோக்களை பார்க்கும் பலரும், நான் உபயோகிக்கும் மசாலா பொடிகளை கேட்க ஆரம்பித்தனர். இன்னொரு பக்கம் தெரிந்தவர்கள், அக்கம் பக்கத்தினர் மத்தியில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களை அதிகம் பார்க்க நேர்ந்தது. 'ரசாயன கலப்படம் இல்லாத மசாலா பொருட்கள் தயாரிப்பு வாயிலாக, புற்றுநோய் அபாயத்தை ஓரளவு குறைக்க முடியும்' என தோன்றியது. 'குக் வித் சங்கீதா மசாலா புராடக்ட்ஸ்' என்ற நிறுவனத்தை ஆரம்பித்தேன். என் அப்பா சுகாதார ஆய்வாளராக இருந்தவர்; அக்கா ஊட்டச்சத்து நிபுணர். அதனால், ஆரோக்கியமான உணவு என்ற விஷயத்தில் என்னால் துளி கூட சமரசம் செய்து கொள்ள முடியாது. இன்றைக்கு என்னோட, 80 வகையான மசாலா பொருட்கள் இந்தியா முழுக்க விற்பனையாகின்றன. அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும், 'சமையல்காரி' என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு பெருமை தான். திருமணமாகி வரும்போது இரண்டு, மூன்று அலுமினிய பாத்திரங்கள், அடுப்பு உள்ளிட்ட அடிப்படை பொருட்களுடன் வாழ்க்கையை தொடங்கினேன். இன்றைக்கு அதி நவீன சமையல் சாதனங்கள், சொந்த வீடு, வியாபாரம், அங்கீகாரம் என வாழ்க்கை மாறியிருக்கு... எல்லாவற்றுக்கும் காரணம், என் உழைப்பு மட்டுமே! தொடர்புக்கு: 90350 18089