வித்தியாசமாக கடையை துவக்கினேன்!
தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலையில், 'வாகை தாளகம்' என்ற பெயரில், எழுதுபொருட்கள் விற்கும் கடையை நடத்தி வரும் ஜெகதீசன்: ஒரத்தநாடு அருகே வெள்ளூர் கிராமம் தான் சொந்த ஊர். அப்பா விவசாயி. 10ம் வகுப்பு, டிப்ளமா படித்து முடித்தேன். கை நிறைய சம்பளம் கிடைக்கிற வேலைக்கு போனா தான் குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும்னு, அதற்கேற்ற வேலைகளை தேடினேன்.சிங்கப்பூரில் கப்பல் கம்பெனியில் வேலை கிடைத்தது. பொறுப்பாக செய்ததால், நல்ல சம்பளம் கொடுத்தனர். பண்டிகை உள்ளிட்ட எதற்கும் ஊர் பக்கம் எட்டிப் பார்க்காமல் அங்கேயே இருந்து உழைத்தேன். வேலை நேரம் போக, மற்ற நேரங்களில் புத்தகங்கள் படிப்பது தான், என் ஒரே பொழுதுபோக்கு. புத்தகங்கள், கம்பெனிக்கு தேவையான ஸ்டேஷனரி பொருட்கள் வாங்க சிங்கப்பூரில் உள்ள, 'பாப்புலர் ஷாப்' என்ற கடைக்கு தான் செல்வேன். அந்த கடை மிக பிரபலம். அங்கு கிடைக்காத பொருட்களே கிடையாது.எனக்கு திருமணமாகி, மகன், மகள் பிறந்தனர். பின், அடிக்கடி ஊருக்கு வந்தேன். குடும்பத்தினரின் விருப்பத்திற்காக, சிங்கப்பூர் வேலையை விட்டு, தஞ்சாவூர் வந்தேன். வேலையை விடும்போது, மாதம், 1.50 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினேன்.ஊருக்கு வந்ததும், ஏதாவது தொழில் செய்யலாம் என்று யோசித்ததும், மக்களுக்கு பிடித்தமானதாகவும், என் மனசுக்கு பிடித்ததாகவும் இருக்கும் கடையை துவங்கலாம் என தோன்றியது. ஏறத்தாழ 500 சதுர அடி கொண்ட கடையை வாடகைக்கு எடுத்து, சூப்பர் மார்க்கெட் போல நோட் புக், பேனா, பென்சில் என அனைத்து எழுது பொருட்களையும் வாடிக்கையாளர்களே தேர்வு செய்து எடுத்துக் கொள்ளலாம் என்ற வகையில், புதுமையாக அமைத்தேன்.ஸ்டேஷனரி மார்க்கெட்டில் புதிதாக எந்த பொருள் வந்தாலும், எங்கள் கடையில் உடனே கிடைக்கும். கிட்டத்தட்ட கல்விக்கு தேவையான, 5,000 வகை பொருட்கள் கிடைக்கின்றன. விலையில் துவங்கி தரம் வரை, வாடிக்கையாளர்கள் திருப்தி தான் முக்கியம் என்பதே என், 'பிசினஸ்' மந்திரம். இதனால், தஞ்சை மாவட்டம் முழுவதும் என் கடை பிரபலமாகியது.இப்போதைக்கு வாடகை, ஆள் சம்பளம் என அனைத்து செலவுகளும் போக, மாதம், 70,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது. இது, சிங்கப்பூரில் வாங்கிய சம்பளத்தில் பாதி தான். ஆனாலும், குடும்பத்துடன் சேர்ந்து இருக்கிறோம்; பிடித்த தொழில் செய்கிறோம் என்ற மனதிருப்தி இருக்கிறது. 'கல்வி, கண்ணை திறக்கும்' என்பர். அதுமட்டுமல்ல; வளமான வாழ்க்கையின் வாசலையும், கல்வி தான் திறக்கும் என்பதற்கு, நானே உதாரணமாக இருக்கிறேன்!