தங்கம், வெள்ளி வெண்கலம் என 3 பதக்கங்கள் வாங்கினேன்!
சென்னையில் நடந்த முதியோருக்கான, 23வது ஆசிய தடகள போட்டியில், 75 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில், மூன்று பதக்கங்களுடன் வெற்றி வாகைசூடி இருக்கும், கோவையைச் சேர்ந்த, 76 வயதாகும் கண்ணம்மாள்: என் சொந்த ஊர் திருப்பூர். சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வம் அதிகம். பள்ளியில் இருந்தாலும், வீட்டுக்கு வந்தாலும் என் கவனம் விளையாட்டு மேல் தான் இருக்கும். பள்ளி ஆசிரியரான என் அப்பாவுக்கு, என்னை படிக்க வைத்து அரசு வேலைக்கு அனுப்ப வேண்டும் என ஆசை. ஆறாம் வகுப்பு படிக்கும் போதே, மாவட்ட அளவில், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று, நிறைய பரிசுகள் வாங்கி இருக்கிறேன். கல்லுாரி யில் படிக்கும்போது பல்கலைக்கழக அளவில், மாநில அளவில் பங்கேற்று வெற்றி பெற்றிருக்கிறேன். பட்டப்படிப்பு முடித்ததும், 1973ல் சென்னை ஒய்.எம்.சி.ஏ., உடற்பயிற்சி கல்லுாரியில், ஓராண்டு உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்து, சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். பின், அரசு பள்ளியில் வேலை கிடைத்தது. திருப்பூரில் பல அரசு பள்ளிகளில், 34 ஆண்டுகள் வேலை பார்த்து, 2008ல் ஓய்வு பெற்றேன். பணி ஓய்வு பெற்று விட்டதால், முழு நேரமாக விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க முடிவு செய்தேன். வயதானதால் ஓட்டப் பயிற்சியை தவிர்த்து, குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் விளையாட்டுகளில் பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். கடந்த 2011ல் துவங்கி, முதியோருக் கான மாவட்ட அளவிலான போட்டி களில் பங்கேற்று, பல பரிசுகள் வாங்கி இருக்கிறேன். சென்னையில், 2016ல் நடந்த மாநில போட்டிகளில் பங்கேற்று இரண்டாம் பரிசும், சமீபத்தில் நடந்த ஆசிய போட்டியில், ஈட்டி எறிதலில் தங்கம், வட்டு எறிதலில் வெள்ளி, குண்டு எறிதலில் வெண்கலம் என மூன்று பதக்கங்களும் வாங்கினேன். எந்தவிதமான தனிப்பட்ட உணவு முறையையும் பின்பற்றுவது கிடையாது. எதுவாக இருந்தாலும் அளவோடு சாப்பிடுவேன். கணவர், 26 ஆண்டு களுக்கு முன்பே இறந்து விட்டார். மகளை நன்கு படிக்க வைத்து விட்டேன். இப்போது மகள், மருமகன், பேரன்கள் அனைவருமே எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றனர். அதனால் தான் இந்த வயதிலும் போட்டிகளில் பங்கேற்ற முடிகிறது. நடைபயிற்சி, மிதிவண்டி ஓட்டுதல் என, சின்ன சின்ன உடற் பயிற்சிகளை பெண்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். குடும்பத்திற்காக உழைப்பது போன்று, நம் உடம்பையும் ஆரோக்கிய மாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.