உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் /  திறமை அங்கீகரிக்கப்பட்டால் பல வெற்றிகளை அடைய முடியும்!:  பெங்களூரிலும் கிளை துவங்க முயற்சிக்கிறோம்!

 திறமை அங்கீகரிக்கப்பட்டால் பல வெற்றிகளை அடைய முடியும்!:  பெங்களூரிலும் கிளை துவங்க முயற்சிக்கிறோம்!

சமீபத்தில், பஹ்ரைனில் நடந்து முடிந்த ஆசிய இளையோர் பெண்கள் கபடி போட்டியின் இறுதி சுற்றில், ஈரான் அணியை வீழ்த்தி , 15 ஆண்டுகளுக்கு பின் வெற்றியை வசப்படுத்தியது இந்திய அணி. இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த சென்னை, கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா: அம்மா ஆட்டோ ஓட்டுநர்; அப்பா கூலி வேலை செய்கிறார். என், 6 வயதில் கபடி மீது ஆசை வந்தது. வீட்டில் சொன்னபோது, 'அதெல்லாம் வேண்டாம்' என்றனர். அழுது அடம்பிடித்து கபடி விளையாட வந்தேன். கண்ணகி நகர் கபடி டீமில் நாங்கள், 30 பேர் உள்ளோம். எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் தான் எங்கள் பயிற்சிகள் துவங்கின. எங்களுக்கென மைதானம் கிடையாது; பூங்காவில் தான் பயிற்சி எடுப்போம். மழை வந்துவிட்டால் பூங்காவில் தண்ணீர் நிற்கும்; விளையாட முடியாது. தொடர் பயிற்சி இல்லாமல் கூட பல போட்டிகளுக்கு சென்றிருக்கிறோம். ஆனால், எங்களுக்கு இருந்த ஒரே நம்பிக்கை, எங்கள் பயிற்சியாளர் ராஜு தான். எங்கள் வீட்டில் பேசி, எங்களை கபடி விளையாட வைத்து எங்களுக்கு ஷூ, சாப்பாடு என எல்லாமே அவர் சம்பளத்தில் தான் வாங்கிக் கொடுத்தார். இதுவரை கட்டணம் எதுவும் நாங்கள் கொடுத்ததும் இல்லை; அவரும் கேட்டது இல்லை. நான் இந்திய அணிக்கு தேர்வான போது, உடல் ஆரோக்கியம் முக்கிய மாக இருந்தது. சத்தான உணவுகள் எடுத்துக் கொள்ளும்படி பலரும் கூறினர். எங்கள் குடும்பத்தை பொறுத்த வரை, மூன்று வேளையும் உணவு கிடைத்தாலே, அது ஆரோக்கியம் தான். ஆனால், பயிற்சி யாளர் தான் எது குறித்தும் யோசிக்காமல், நிறைய செலவு செய்து ஊட்டச்சத்து உணவுகளை வாங்கிக் கொடுத்தார். நான், பஹ்ரைன் செல்ல, 1 லட்சம் ரூபாயும் அவர் தான் கடன் வாங்கி உதவி செய்தார். இப்போது நான் ஜெயித்து விட்டேன். ஆனால், இது என் தனிப்பட்ட வெற்றி இல்லை; எளிமையான பகுதியை சேர்ந்த கண்ணகி நகரின் வெற்றி. இதற்காக நிறைய போராடி இருக்கிறோம். எத்தனையோ இடத்தில் அசிங்கப்பட்டு நின்றிருக்கிறோம். ஆனால், எல்லாவற்றையும் கடந்து, கண்ணகி நகர் கார்த்திகா என்று சொல்லும் போது, நாங்க வாழ்கிற இடத்திற்கு வெளிச்சம் கிடைத்த மாதிரி இருக்கு; எல்லாமே கபடியால் தான் சாத்தியமானது. தற்போது, அனைவரும் பண உதவி செய்கின்றனர். இந்த தொகை எங்கள் குடும்ப கடனை அடைக்க உதவும். எத்தனையோ பேர் உதவிகள் இல்லாமல் மைதானத்திற்கு வெளியே போராடு கின்றனர்; அவர்களுக்கும் உதவி கிடைக்கணும். திறமை அங்கீகரிக்கப்பட்டால் , எத்தனையோ வெற்றி களை நம்மால் அடைய முடியும்!

 பெங்களூரிலும் கிளை துவங்க முயற்சிக்கிறோம்!

சென்னை முழுதும் விற்பனை செய்து வரும், நங்கநல்லுாரைச் சேர்ந்த பாரதி: நான் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துட்டு இருந்தேன். வீட்டு வேலைகள், அலுவலக வேலைகள் இரண்டையும் சமாளிப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. அடிக்கடி உணவகங்களில் வாங்கி சாப்பிட ஆரம்பித்தோம். குழந்தை பிறந்த பின், ஹோட்டல் சாப்பாட்டை குறைக்க நினைத்தேன். அதே நேரம் வியாபாரம் செய்யவும் ஆசை இருந்தது. காய்கறிகளை வாங்கி, சுத்தம் செய்து, 'கட்' செய்து பாக்கெட் போட்டு தரும் வியாபாரத்தை ஆரம்பித்தேன். ஆரம்பத்தில், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வாங்க ஆரம்பித்தனர். 'வேலை எளிதாக முடிந்தது' என்று பலரும் கூறுவர். அவர்கள் கொடுத்த ஊக்கத்தில் படிப்படியாக முன்னேறி, இப்போது, 13 பெண்கள் என்னிடம் வேலை பார்க்கின்றனர். அதிகாலை, 2:00 மணிக்கு கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து காய்கறிகளை வாங்கி வருவோம். அதை நறுக்குவது, 'பேக்' செய்வது, மாவு அரைப்பது எல்லாம், அடுத்த ஐந்து மணி நேரத்திற்குள் முடித்து, விற்பனைக்கு அனுப்ப ஆரம்பித்து விடுவோம். குளிரூட்டப்பட்ட பொரு ட்களையோ, பதப்படுத்தப்பட்ட பொருட்களையோ விற்பனை செய்வது இல்லை. காய்கறி, பழங்கள் தவிர, சிறுதானிய மாவு வகைகளையும் சேர்த்து, மொத்தம், 250 வகையான பொருட்களை விற்பனை செ ய்து வருகிறோம். வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கு, சமூக வலைதளங்களில் எங்களது பணி குறித்து பதிவிட்டோம். ஆர்டர்கள் அதிகமாக வர ஆரம்பித்தன. 'செயலி' வாயிலாக ஆர்டர் களை மொத்தமாக பிரித்து, பொருட்களை தயார் செய்து, காலை, மதியம், மாலை மூன்று வேளைகளும் விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம். இந்த வியாபாரத்தில் நிலைத்து நிற்பதில், பல சவால்கள் இருக்கின்றன. சுலபமாக அழுகும் பொருட்களை அடிப்படையாக வைத்து செய்யும் வியாபாரம் என்பதால், எந்த காய்கறி விற்பனையாகும், எது விற்பனையாகாது, எத்தனை கிலோ தேவைப்படும் என்பதில் தெளிவு இருக்க வேண்டும். அதையும் தாண்டி, சில காய்கறிகள் வீணாவதை தடுக்க முடியாது. சிறிய அளவில் துவங்கிய வியாபாரம், இன்று, மாதம் 700 ஆர்டர்கள் எடுக்கும் அளவுக்கு உயர்ந்து, ஆண்டுக்கு, 50 லட்சம் ரூபாய் விற்பனை செய்யும் நிறுவனமாக உயர்ந்திருக்கிறது. தொடர்ந்து, பெங்களூரிலும் கிளை துவங்க முயற்சிகள் எடுத்து வருகிறோம். தொடர்புக்கு: 99628 29838, 63811 42026 www.freshggies.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை