என் கணவரால் தான் இத்தனை உயரங்களை நான் தொட முடிந்தது!
கேரள மாநில சுகாதாரத் துறையின் முன்னாள் அமைச்சர் கே.கே.ஷைலஜா: நான் ஒரு சாதாரண அறிவியல் ஆசிரியை. என் பாட்டி கல்யாணி, நிலப்பிரபுக்களின் ஆதிக்கம், ஜாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடியவர்.என் சிறு வயதில், ஒவ்வொரு நாளும் திண்ணையில் அமர்ந்து, எங்களுக்கு நிறைய கதைகளை கூறுவார். அந்த கதைகளில் போராட்ட வீரர்களும், தியாகிகளுமே நிறைந்திருந்தனர். அப்போதே, மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை அந்த கதைகள் துாண்டின. கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக சேர்வதற்கும் அதுவே காரணம்.கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தபோது, மக்களிடத்தில் அறிவியல் மனப்பான்மையை ஊட்டினோம். ஆரம்ப சுகாதார நிலையங்களை, குடும்ப சுகாதார மையங்களாக மாற்றினோம். மாவட்ட அளவிலான மருத்துவமனைகளில் கூட இதய நோய் நிபுணர் உள்ளிட்ட நிபுணத்துவம் கொண்ட மருத்துவர்களை நியமித்தோம்; இதனால், இறப்புகளை குறைத்தோம்.என் செயல்பாடுகளை புரிந்து, மருத்துவக் குழுவினர் உதவிகரமாக இருந்தனர். அவர்களுக்கு நான் உதவிகரமாக இருந்தேன். கூட்டு முயற்சியால் மட்டுமே இது சாத்தியமானது.நாம் உயர்ந்த இடத்தில் இருந்தால் மட்டுமே மக்களுக்கு உழைக்க முடியும் என்பதே தவறான எண்ணம். பெண்களுக்கு எதிரான ஆணவக் கொலைகளுக்கு அடிப்படையே ஜாதி தான். முன்பெல்லாம் பெண்கள் வீட்டைவிட்டு வெளியிலேயே வர மாட்டார்கள். ஆனால், இன்று பெண்கள் இல்லாத துறையே இல்லை என்றாலும், அவர்களில் பெரும்பான்மையினர் சமூகப் பணிக்கு முன்வருவதில்லை.தொழில் முனைவோராகவும் பெண்கள் மாற வேண்டும். பெண்கள் பகுத்தறிவுடன் நடந்துகொள்ள வேண்டும். சமூக வாழ்வுக்கு வர வேண்டும் என்றால், பெண்கள் எப்போதும் கோபமாக இருக்க வேண்டும் என்பதில்லை; நிதானமாக, பொறுமையாக விஷயங்களை கையாள வேண்டும். என் கணவரால் தான், என்னால் இத்தனை உயரங்களை தொட முடிந்தது. நாங்கள் இருவரும், ஒரே ஏரியா கமிட்டியில் தான் கட்சிப் பணியாற்றினோம்.திருமணம் முடிந்து, அவரது வீட்டுக்கு சென்றபோது, 'ஷைலஜாவும் என்னை போன்ற கட்சி ஊழியர் தான். அவளும் என்னை போல வெளியே போய்விட்டு வருவாள். 'அவள் மீது கோபப்பட வேண்டாம்' என்று மாமியாரிடம் சொல்லி விட்டார்.மாமியாருக்கு வீட்டு வேலைகளில் உதவ முடியாதது குறித்து எனக்கு குற்ற உணர்வாக இருக்கும் என்றாலும், நாங்கள் ஒன்றாக சாப்பிடும்போது, தினமும் நான் சந்தித்த மனிதர்களை, செய்த பணிகளை மாமியாரிடம் பகிர்ந்து கொள்வேன். முழுமையாக என்னை புரிந்து கொண்டார்.