உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / படிப்பை பிடிச்சுட்டு மேல வாங்க!

படிப்பை பிடிச்சுட்டு மேல வாங்க!

கோவையைச் சேர்ந்த தனியார் பள்ளி முதல்வரான, 26 வயது இளம்பெண் பூஜா: என் சொந்த ஊர் ஊட்டி. சிறு வயதிலேயே தந்தை பிரிந்து சென்றுவிட, என்னையும், தங்கையையும் அம்மா, தாத்தா, பாட்டி தான் வளர்த்தனர்; எங்களை வளர்க்க அம்மா மிகவும் சிரமப்பட்டார்.நானும், என் தங்கையும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தோம். அம்மா வேலைக்கு சென்று மாத சம்பளம் வாங்கியதால், சாப்பாட்டுக்கு கஷ்டம் இல்லை.ஆனால், அதை தவிர மற்ற எல்லாவற்றுக்கும் கஷ்டம்தான். அதனால், என் கவனத்தை முழுக்க படிப்பில் செலுத்தினேன்.பத்தாம் வகுப்பில் மாவட்ட அளவில் ரேங்க் வாங்கினேன். அதனால், எங்கள் பள்ளியில் மேல்நிலை படிப்பு செலவை ஏற்றுக் கொண்டனர். ஊட்டியில் இளநிலை படிப்பை முடித்து, கோவை பாரதியார் பல்கலையில் ரேங்க் ஹோல்டராக தேர்வானேன்.அதனால், முதுகலை பைனல் எக்சாம் முடிந்தவுடன், வேலைக்கான நேர்காணல்களை அட்டெண்ட் செய்ய ஆரம்பித்தேன்; 10 நாட்களில், நான் தற்போது பணிபுரியும் பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைத்தது. முதல் மாத சம்பளம் வந்தபோது, மகிழ்ச்சின்னு சொல்வதை விட, ஆசுவாசம், பெருமூச்சு!முதல் இரண்டு நாட்கள், சம்பளத்தை அக்கவுன்ட்டில் இருந்து எடுக்காமல் அப்படியே வைத்திருந்தேன். அதன்பின் வீட்டிற்கு இருந்த கடன்களை அடைத்தேன்.ஏனெனில், கடன் ஒரு வீட்டை எப்படியெல்லாம் நிம்மதியிழக்க வைக்கும் என்று, அந்த சூழல்ல இருந்தவங்களுக்கு நல்லா தெரியும்.அதனால், அதையெல்லாம் அடைச்சுட்டு எங்கம்மாவை நிம்மதியாக்கினேன். தங்கையை படிக்க வைக்கிறேன். சீக்கிரம் கல்லுாரி படிப்பை முடிக்க இருக்கிறாள்.கடின உழைப்பும், நேர்மையும் என் இயல்பு என்பதால், பள்ளியில் இரண்டே ஆண்டில் துறைத்தலைவர் பொறுப்பு கிடைத்தது. இப்போது, பள்ளி முதல்வராக பணி உயர்வு கிடைத்துள்ளது. கூடவே, மேற்படிப்புடன், சிறப்பு குழந்தைகளுக்கென ஆசிரியர் பயிற்சியும் எடுத்து வருகிறேன். இப்போது எங்கள் வாழ்க்கைக்கு கிடைத்துள்ள இந்த பொருளாதார பாதுகாப்பு, நிம்மதி, சந்தோஷம் எல்லாம் என் படிப்பு, வேலையால் தான் கிடைத்தது.அதனால், கல்வி கிடைக்காத குழந்தைகளில் ஆண்டுக்கு மூன்று பேரை தேர்ந்தெடுத்து, படிக்க வைக்கிறேன். இதை அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகமாக்க வேண்டும்.என் பள்ளியிலும், வாய்ப்பு கிடைக்கிற மேடைகளிலும் நான் விதைக்கும், வலியுறுத்தும் விஷயம் ஒன்று தான்... அது, படிப்பை பிடிச்சுட்டு மேல வாங்க; வேலையில் உங்களை நிலை நிறுத்திக்கோங்க; உலகை தைரியமாகவும், தெளிவாகவும் எதிர்கொள்ளுங்கள். வாழ்க்கை, நல்ல திசையில் உங்களை அழைத்துச் செல்லும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை