விடாமல் முயற்சி செய்வோம் உழைப்போம்!
கடினமாக உழைத்து, இரண்டு கார்களுக்கு உரிமையாளராக மாறி உள்ள திருநங்கை அனுஷ்யா மணி: என் சொந்த ஊர் திருச்சி. ஆறாவது படித்தபோது எனக்குள் ஏதோ மாற்றம் நடக்க ஆரம்பித்தது. நான் ஆண் இல்லை; பெண் என தோன்றியது. என் பெற்றோருக்கும் இது தெரியவர, 'ஆம்பள பசங்க விடுதியில் சேர்த்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும்'னு ஆண்கள் விடுதியில் சேர்த்து விட்டனர். ஆனால், அங்கு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்.ஒரு கட்டத்தில், வீட்டுக்கு ஓடி வந்துட்டேன். ஆனால், பெற்றோர் என்னை வீட்டில் சேர்க்கவில்லை. அதனால், ஒரு டீக்கடையில் வேலைக்கு சேர்ந்தேன். கோவை தான் திருநங்கையருக்கு தாய்மடி என சொல்லப்பட்டதால், கோவைக்கு வந்து விட்டேன். சமையல் துறையில் இங்கு பல திருநங்கையர் வெற்றிகரமா இயங்கிட்டு இருந்ததால், நானும் சமையல் கற்று, அதையே என் வாழ்வாதாரத்திற்கான வேலையாக மாற்றிக் கொண்டேன்.ஆனால், முகூர்த்த நாட்களில் மட்டுமே சமையல் ஆர்டர் கிடைக்கும். அதனால், நிலையான வேலை ஒன்றை தேடியபோது, ஆட்டோ ஓட்டலாம் என்று தோன்றியது. லைசென்ஸ் வாங்கி, ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தேன். ஓரளவுக்கு வருமானம் வந்த பின்தான், வாழ்க்கையில் நம்பிக்கை கிடைத்தது.அடுத்து கார் ஓட்டலாம் என்று தோன்றியது. 10ம் வகுப்பு முடித்தால் தான் கார் ஓட்ட லைசென்ஸ் எடுக்க முடியும் என்று கூறியதால், 10ம் வகுப்பு தேர்வு எழுதி, பாசாகி கார் ஓட்ட கற்று, லைசென்ஸ் வாங்கினேன். சிறிது காலம் டாக்சி டிரைவராக வேலை பார்த்தேன்.சொந்தமாக கார் வாங்க லோன் கேட்டு பல வங்கிகளுக்கும் போனேன்; புறக்கணிப்பு தான் கிடைத்தது. ஒரு கட்டத்தில், வங்கியில் லோன் கிடைத்ததும், என் வாழ்க்கை மாறியது. தற்போது, என்னிடம் இரண்டு கார்கள் உள்ளன.என் பெற்றோரை இப்போது நான் தான் கவனித்துக் கொள்கிறேன். என் அக்காவிற்கு திருமணம் செய்து வைத்தேன். அவர் குழந்தைகளையும் நான் தான் படிக்க வைக்கிறேன். இரண்டு ஆண்டுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டேன்.'டிரான்ஸ் மாம்' என்ற ஒரு அமைப்பை துவங்கி, அதன் வாயிலாக ஒரு திருநங்கையை படிக்க வைத்து, ஐ.டி., வேலையும் வாங்கி கொடுத்தேன். சக திருநங்கையருக்கும் என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்.நிகழ்காலத்தில் ரணமான ஒரு வாழ்க்கையை அனுபவித்து வரும் திருநங்கையருக்கு நான் சொல்வது இதுதான்... விடாமல் முயற்சி செய்வோம்; உழைப்போம். ஒருநாள் நமக்கான சுய சம்பாத்தியம், சக மனிதர்களின் மரியாதை, அன்பு என, எல்லாமே நம் வாழ்க்கைக்குள் வரும்.