படிப்பால் எங்கள் தலைமுறையே மாறி இருக்கிறது!
கணவர் தயவின்றி எட்டு குழந்தைகளை படிக்க வைத்து, பெரிய பதவிகளில் அமர்த்தியுள்ள சென்னையைச் சேர்ந்த பழனியம்மாள்: என் சொந்த ஊர் சேலம். 'டிரெஸ் மேக்கிங், எம்ப்ராய்டரி கோர்ஸ்' முடித்துள்ளேன். திருமணம் முடிந்து சென்னை வந்ததும், 'படிக்கலாம், வேலைக்கு போகலாம்' என்று, பல கனவுகளுடன் இருந்தேன். ஆனால், கணவர் தினமும் மது குடித்து விட்டு வந்து அடிப்பார். அடுத்தடுத்து பிரசவம்; ஐந்து பெண், மூன்று ஆண் என மொத்தம் எட்டு பிள்ளைகள். சில நாட்களில் எங்களை எல்லாம் விட்டு விட்டு பிரிந்து சென்று விட்டார். என் கஷ்டத்தை பார்த்து, அண்ணன் தான் தையல் மிஷின் வாங்கி தந்தார்; அதில் தான் வாழ்க்கை ஆரம்பித்தது. பிள்ளைகளுக்கு ரேஷன் அரிசி சாப்பாடு தான். அவர்களை அரசு பள்ளியில் படிக்க வைத்தேன். அனைவரும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், 1,000த்திற்கும் மேல் மதிப்பெண் வாங்கி, அரசு கல்லுாரியில், உதவித்தொகை வாயிலாக தான் படித்தனர். கணவர் எங்களை விட்டு சென்றபோது, என் பெரிய மகளுக்கு வயது, 14. அடுத்த ஏழு ஆண்டில் அவள் வேலைக்கு சென்று, தம்பி, தங்கைகள் படிக்க உதவினாள். அடுத்தடுத்த ஆண்டில், அடுத்த மூன்று பேர் வேலைக்கு சென்றனர். ஒருவர் கை பிடித்து ஒருவர் என, அனைவருமே நல்ல நிலைக்கு வந்துவிட்டனர். ஒரு காலத்தில், செருப்பு வாங்க கூட காசு இல்லாமல் இருந்தோம்; ஆனால், இன்று என் மகன் ஐ.ஏ.எஸ்.,சுக்கு நிகரான, 'இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ்' தேர்வில் தேர்ச்சி பெற்று, அதிகாரியாகி, சைரன் வைத்த காரில் வருகிறான். எவ்வளவு பெருமை தெரியுமா எனக்கு! பழனியம்மாளின் மகனான, ராஜஸ்தான் மாநிலம், பாலியில் இந்திய வன சேவை அதிகாரியாக பணிபுரியும் பாலமுருகன்: என் கூடப் பிறந்தவர்கள் ஏழு பேர். முதல் சகோதரி துபாயில், 'பிசியோதெரபிஸ்ட்' பணியில் இருக்கிறார்; இரண்டாவது சகோதரி சட்டக் கல்லுாரி பேராசிரியை; மூன்றாவது சகோதரி, பாபா அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி, நான்காவது சகோதரர் மும்பை தனியார் நிறுவன மேனேஜர், ஐந்தாவது சகோதரி மருத்துவர், ஆறாவது சகோதரர் மருத்துவர்; விபத்து ஒன்றில் காலமாகி விட்டார். கடைசி சகோதரி ஜெர்மன் நாட்டில், 'ஏரோ ஸ்பேஸ்' விஞ்ஞானியாக உள்ளார். எங்கள் அனைவருக்கும் ஏணியாக இருந்தது அம்மா தான்! அவர் மட்டும் இல்லையெனில், நாங்கள் அனைவரும் மாடு மேய்த்து, 'இது தான் விதி...' என, வாழ்ந்திருப்போம். அவர் அடி, உதை வாங்கினாலும், எங்களை படிக்க வைப்பதில் உறுதியாக இருந்தார். படிப்பால் எங்கள் தலைமுறையே மாறி இருக்கிறது என்றால், அதற்கு காரணம் அம்மா தான்!