உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் /  சமூக பொறுப்பு அனைவருக்குமானது!

 சமூக பொறுப்பு அனைவருக்குமானது!

சர்வதேச சூழலியல் செயல்பாட்டாளர்களின் பட்டியலில் இணைந்துஇருக்கும், சென்னையை சேர்ந்த பொறியியல் மாணவி பெனிஷா: நாகர்கோவிலை சேர்ந்த நான், படிப்புக்காக சென்னை வந்தேன். சிறு வயதிலேயே சமூக பிரச்னைகளை சீர்துாக்கி பார்க்கும் பக்குவமும், எண்ணமும் வந்தது. சென்னை வந்ததும், சூழலியல் சார்ந்து இயங்கும் சமூக ஆர்வலர்களிடம் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது; அவர்களின் வாயிலாக சமூகம் சார்ந்து செயல்படும் இயக்கங்களில் இணைந்தேன். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் எல்லைகளை குறைக்கும் திட்டத்திற்கு எதிரான இயக்கம், சட்ட ஆவணங்களை மக்களுக்கு புரிய வைக்கும் முயற்சி, சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் தேவையை மக்களுக்கு புரிய வைப்பது என, சமூகம் சார்ந்த செயல்பாடுகளில், என் பங்களிப்பை தொடர்ந்து கொடுத்து வருகிறேன். 'வெட்டிவேர்' அமைப்பு, 'யங் பீப்பிள் பார் பாலிட்டிக்ஸ்' மற்றும், 'திருநங்கை பதிப்பகம்' போன்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறேன். அடுத்து, 'விஷ சுற்றுலா' எனும், 'டாக்ஸிக் டூர்' என்ற இயக்கத்தை முன்னெடுத்தோம். அதாவது, தொழிற்சாலைகள் பெருக்கத்தால் சுற்றுச்சூழல் கெட்டு போன பகுதிகளாக எண்ணுார், வடசென்னை, பள்ளிக்கரணை போன்றவை மாறி விட்டன. இந்த கொடுமையான சூழலில் தான், இப்பகுதி மக்கள் வாழ்கின்றனர். இந்த பகுதிகளுக்கு நீதிபதிகள், அரசியல் தலைவர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் போன்றவர்களை அழைத்து சென்று காண்பித்தோம். அந்த பகுதிகளை அவர்கள் பார்த்த பின், சூழலியல் சார்ந்து எடுக்க வேண்டிய முன்னெடுப்புகள் எளிதாக நடக்க ஆரம்பித்ததை, எங்களால் பார்க்க முடிந்தது. அடுத்து, சென்னையை காலநிலை மீள் தன்மை கொண்ட நகரமாக கட்டமைக்கும் நோக்கத்தில், 'அறம் திணை' என்ற இயக்கத்தை ஆரம்பித்தோம். விவசாயிகளை நேரடியாக நுகர்வோர்களுடன் இணைத்து, விவசாயிகளை பயன்பெற செய்வது, நீர் வளங்களையும், சதுப்பு நிலங்களையும் காப்பது, இயற்கை உணவுகளின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற முயற்சிகளையும் செய்து வருகிறோம். 'பொம்பள பிள்ளைக்கு இதெல்லாம் தேவையா...?' என, கேட்பவர்களையும் எதிர்கொள்கிறேன். சமூக பொறுப்பை கையில் எடுக்க வயது, பாலின வித்தியாசம் தேவை இல்லை; சமூக அக்கறை இருந்தால் போதும். சமூக பொறுப்பு அனைவருக்குமான உணர்வு என்ற நிலை வரும் போது, நிச்சயம் அது சமூக மாற்றமாக மாறும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ