உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / பெரிய முதலீடும் கடன் வங்காமலும் தொழிலில் வெற்றி!

பெரிய முதலீடும் கடன் வங்காமலும் தொழிலில் வெற்றி!

'சித்துஸ்ரீ பிரைடல் கேர் அண்டு சித்துஸ்ரீ கிராப்ட்ஸ்' என்ற பெயரில், மணப்பெண்களுக்கான மேக்கப் தொழிலில் கலக்கும், திருச்சியைச் சேர்ந்த கீதா சரவணன்: நான் பிறந்தது, திருச்சி மாவட்டம் துறையூரில். பி.காம்., முடித்ததும், திருமணம் ஆனது. கணவர் சரவணன் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். 'டிவி' சேனலில், 'பிரைடல் மேக்கப் கோர்ஸ்' எனும் மணப் பெண்ணுக்கான மேக்கப் குறித்து வந்த விளம்பரத்தை பார்த்து, கணவரிடம் கேட்டதற்கு, 'படி...' என்று தட்டிக் கொடுத்தார். கடந்த, 2007ல் அந்த கோர்சை முடித்த கையுடன், என் சித்தி பெண் திருமணத்திற்கு நான் மேக்கப் போட, பலரும், 'சூப்பர்' என்றனர். அதையே தொழிலாக செய்யும் தன்னம்பிக்கை கிடைத்தது. தேவைப்பட்ட சின்ன முதலீட்டு தொகையை கணவர் கொடுத்தார். அக்கம்பக்கம், உறவினர்கள், நண்பர்கள் என மேக்கப் போட ஆரம்பித்தேன் . கூடவே, 'வெட்டிங் பிளவர் மேக்கிங்'கும் செய்ய ஆரம்பித்தேன். நாளடைவில், பிரைடல் மேக்கப் மற்றும் பிளவர் மேக்கிங்கில் பயிற்சியும் கொடுக்க ஆரம்பித்தேன். திருச்சி மாவட்டம் தாண்டி, தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பல இடங்களுக்கும் சென்று மேக்கப் செய்யும் அளவுக்கு வளர்ந்தோம். இதனால், 200 தொடர் வாடிக்கை யாளர்கள் கிடைத்தனர். ஒரு தொண்டு நிறுவனம் வாயிலாக கிட்டத்தட்ட, 3,000 பெண்கள் மற்றும் மாணவியருக்கு பிளவர் மேக்கிங் பயிற்சியும், 1,000 பெண்களுக்கு பிரைடல் மேக்கப் பயிற்சியும் அளித்தேன். கடந்தாண்டு, 'டர்கி டவலில் பொக்கே' என்ற ஐடியாவை பிடித்தேன். டர்கி டவலை கொண்டு வித விதமாக பொக்கே மற்றும் பொம்மைகள் தயாரிக்க ஆரம்பித்தேன். இந்த டவல் பொக்கே மற்றும் பொம்மைகளை தங்கள் நிகழ்ச்சிகளில், 'ரிட்டர்ன் கிப்ட்'டாக கொடுக்க பலரும் ஆர்டர் தர, அதையும் ஒரு தனி பிசினசாக செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளேன். 'பிரைடல் மேக்கப்' போட குறைந்தபட்சம், 10,000 ரூபாய் வாங்குகிறேன். தற்போது மாதம், 1.50 லட்சம் ரூபாய்க்கு, 'டர்ன் ஓவர்' நடக்கிறது. இதற்கு பெரிய முதலீடு எதையும் செய்யவில்லை; கடன் வாங்கவில்லை. பெண்கள் பலரும் தொழில் என்றாலே கடை வாடகை, ஊழியர்கள் என்று மலைப்பாக நினைக்கின்றனர். அவர்கள், என்னைப் போல் வீட்டி லிருந்து செய்யக்கூடிய பிசினஸ் குறித்து யோசித்து, பொறுமையாக முன்னேறி வெற்றியடைய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ