மீன் வளர்த்து விற்கும் தமிழாசிரியர்!
மீன்கள் வளர்த்து, விற்பனை செய்து, ஆண்டுக்கு, 7 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டும், அரியலுார் மாவட்டம், உடையார் பாளையத்தை சேர்ந்த, ஓய்வுபெற்ற தமிழாசிரியர் கதிர்வேல்: என் ஆரம்பகால வாழ்க்கை, சவாலானது. வாழ்வாதாரத்துக்காக தையல் கடை, வாடகை சைக்கிள் கடை, ஒலிப்பெருக்கி தொழில் செய்தேன். கடும் பொருளாதார நெருக்கடியிலும் படித்து முடித்து, தஞ்சாவூர் கரந்தை தமிழ் கல்லுாரியில், புலவர் பட்டம் வாங்கினேன். பி.லிட்., படிப்பும் முடித்தேன். தேர்வு எழுதி, அரசு பள்ளியில் தமிழாசிரியர் வேலையில் சேர்ந்தேன். பின், எம்.எட்.,- எம்.பில்., - பிஎச்.டி., பட்டங்களையும் வாங்கினேன். அரசு பள்ளிகளில், 26 ஆண்டுகள் வேலை பார்த்து, 2019ல் ஓய்வு பெற்றேன். பணி ஓய்வுக்கு பின் விவசாயம் செய்யலாம் என்ற எண்ணத்தில், 30 ஏக்கர் நிலம் வாங்கி இருந்தேன். 20 ஏக்கர் நிலத்தை என் இரண்டு மகன்களுக்கும் பிரித்து கொடுத்துவிட்டு, 10 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்கிறேன். மழைநீரை சேகரித்து, மீன்கள் வளர்க்க முடிவு செய்து, 4 ஏக்கர் நிலத்தில், ஐந்து குளங்கள் வெட்டினேன். மீதி, 6 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். மீன் குளம் அமைப்பதால், நிலத்தடி நீர்மட்டமும் உயரும். குளத்தின் பக்கவாட்டு பகுதிகளில், மண் அரிப்பை தடுக்க, பசுந்தீவனங்களை வளர்க்கிறேன். மீன்களும் இந்த தீவனங்களை சாப்பிடும். ஐந்து குளங்களிலும், 6,000 மீன் குஞ்சுகளை விடுவேன். மீன்களுக்கு மிகவும் பிடித்தமான மற்றும் சத்தான உணவு, பாசி. 20 நாட்களுக்கு ஒரு முறை, தென்னை மட்டைகளை வெட்டி குளத்தில் போட்டால், அவற்றில் பாசி வளர்ந்து, மீன்களுக்கு உணவாகிவிடும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தண்ணீரை வெளியேற்றி, 20 நாட்கள் குளத்தை காய விடுவேன். பின், ஒரு குளத்துக்கு, 30 கிலோ ஈர சாணம், 10 கிலோ கிளிஞ்சல் சுண்ணாம்பு போட்டு தண்ணீர் நிரப்பி, 15 நாட்கள் கழித்து மீன் குஞ்சுகளை விடுவேன். போட்லா, கட்லா, புல், கெண்டை ரக மீன் குஞ்சுகளை குளங்களில் விடுவேன். இவை, ஆறு முதல் எட்டு மாதங்களில் நன்கு வளர்ச்சி அடைந்து விடும். ஒரு மீன் சராசரியாக ஒன்று முதல் ஒன்றேகால் கிலோ எடை இருக்கும். ஐந்து குளங்களிலும், 5 டன் அளவுக்கு மீன்கள் கிடைக்கும். ஒரு கிலோ உயிர் மீன், 200 ரூபாய் என்று விற்பனை செய்கிறேன். சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் நேரடியாக வந்து வாங்கி செல்வர். 5 டன் மீன்கள் விற்பனை வாயிலாக, ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய் வருமானமும், செலவுகள் போக, 7 லட்சம் ரூபாய் வரை லாபமும் கிடைத்து வருகிறது. தொடர்புக்கு: 63818 65103************************** பல நாடுகளில் விற்பனையாகும் பிளாஸ்டிக் கூடைகள்! பிளாஸ்டிக் ஒயரில் கூடைகள் பின்னி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வரும், கோவையைச் சேர்ந்த சரஸ்வதி மற்றும் அவரது மகன் சரவணன்: சரஸ்வதி: பொருட்கள் வாங்குவது முதல் பள்ளிக்கு உணவு எடுத்துச் செல்வது வரை, ஒரு காலத்தில் நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாமல் இருந்தவை, ஒயர் கூடைகள். இப்போது, நம்மூர் ஒயர் கூடைகளுக்கு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்திருக்கிறது. நான் பள்ளியில் படிக்கும்போது, கூடை பின்னுவது எப்படி என்பதை சொல்லி கொடுத்தனர். திருமணமான பின், ஒயர் சேர் பின்னுவது, கூடை பின்னுவதில் கிடைத்த வருமானம், வீட்டு செலவுக்கு மிகவும் உதவியாக இருந்தது. தற்போது, விதவிதமான நிறங்களிலும், வடிவங்களிலும் ஒயர் கூடைகள் பின்னி விற்பனை செய்கிறோம். மேலும், அந்த கூடைகளில் ஏதாவது கதை, நம் பாரம்பரியத்தை பேசும் கட்டம் போட்ட சேலை, பட்டுச்சேலை பார்டர் என்று வித்தியாசமான விஷயங்கள் நிறைய இருக்கும். சரவணன்: நான் புகைப்பட நிறுவனம் வைத்துள்ளேன். எனக்கு சொந்தமாக ஒரு, 'பிராண்ட்' பெயரில் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. ஒருமுறை அம்மா சுறுசுறுப்பாக கூடை பின்னிக்கொண்டு இருந்ததை பார்த்த எனக்கு, அம்மாவின் ஆர்வத்தையும், என் கனவையும் ஒன்று சேர்க்கலாம் என்ற யோசனை தோன்றியது. அப்படி ஆரம்பித்தது தான், 'கூடை பை சரஸ்' நிறுவனம். எனக்கு சமூக வலைதளங்களில் விற்பனை செய்வது குறித்து தெரிந்திருந்ததால், அதன் மூலம் விற்பனை செய்வது எளிதாக இருந்தது. எங்கம்மாவுடன், பக்கத்து வீட்டு அக்காக்கள் சிலரும் கூடை பின்னுவர். அவர்களிடம், 'மாதம் 1,000 கூடைகள் பின்னித்தர முடியுமா?' என்று கேட்டேன். அவர்கள் என்னை வேடிக்கையாக பார்த்தனர். அவர்களுக்கு புரியவைத்து, 2024ல் இந்த நிறுவனத்தை துவக்கினோம். பெரிய, 'ஆர்டர்'கள் வரும்போது பல்லடம், ஈரோடு, சேலத்தில் இருந்து ஆட்களை அழைத்து வேலை பார்ப்போம். எங்கள் ஒயர் கூடைகள், கைப்பைகள், துபாய், சிங்கப்பூர், மலேஷியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, லண்டன், நெதர்லாந்து, பிரான்ஸ், அமெரிக்கா உட்பட, 50 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மாதம், 2 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. அடுத்து, மூங்கிலில் கைப்பைகள் செய்வது பற்றி யோசித்து வருகிறோம். தொழிலை தாண்டி, இந்த பகுதியை சுற்றி இருக்கும் பெண்களுக்கு, எங்களால் ஒரு வேலை கிடைக்கிறது. அதில், எங்களுக்கு பெரிய சந்தோஷம். தொடர்புக்கு: 95009 45482