உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் /  சிவனை போற்றும் கயிலாய வாத்தியங்கள்!

 சிவனை போற்றும் கயிலாய வாத்தியங்கள்!

'ஆதி முதலோன் சிவபூத கணங்கள்' என்ற பெயரில், கயிலாய வாத்தியங்களை இசைப்பதுடன், மற்றவர்களுக்கு கற்று தரும், சென்னை, சித்தாலப்பாக்கத்தைச் சேர்ந்த ஜீவானந்தம்: இது சிவனுக்காக, சிவனை நினைத்து இசைப்பது. கயிலாய வாத்தியத்தில், 55க்கும் மேற்பட்ட வாத்தியங்கள் இருந்ததாக தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால், வெளிநாட்டு இசைக்கருவிகளின் பயன்பாடு அதிகரித்த பின், பாரம்பரிய இசைக்கருவிகள் தொலைந்து போக ஆரம்பித்து விட்டன. நான் ஓட்டுநர் வேலை பார்த்தேன். 17 ஆண்டுகளுக்கு முன், சித்தாலப்பாக்கத்தில் உள்ள ஒரு கோவிலில் கயிலாய வாத்தியம் வாசித்தனர்; இந்த இசை முறைக்கு, 'சிவ வாத்தியம்' என்று இன்னொரு பெயரும் உண்டு. முதல் முறையாக கேட்கும் போது ஒரு ஆத்ம திருப்தி கிடைத்தது. அதனால், இதைக் கற்றுக்கொள்ள நினைத்தேன். புதுச்சேரியில் உள்ள குழுவில் இணைந்து கற்றுக்கொண்டு, கோவில்களில் நிகழ்ச்சிகள் நடத்தி வந்தேன். அந்த நிகழ்ச்சியை பார்த்த சில பெண்கள், 'எங்களுக்கும் சொல்லித் தாருங்கள்' என்று கேட்டனர். முதலில் தயங்கினாலும், பின் முயற்சி செய்யலாம் என்று நினைத்தேன். தற்போது, எங்கள் குழுவில் பெண் கலைஞர்கள், 30 பேர் உள்ளனர். பெரிய இசைக் கருவிகளை தோள்களில் சுமந்து, கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து, நெற்றியில் திருநீறு பூசி, 15 முதல் 45 வயது வரை உள்ள பெண்கள் இந்த கயிலாய வாத்தியங்களை இசைக்கின்றனர். புதிதாக வருபவர்களுக்கு சங்கு வாத்தியத்தில் தான் முதலில் பயிற்சி கொடுப்போம். அதன்பின், ஒவ்வொரு கருவியாக பயிற்சி கொடுப்போம். எல்லாரும் இந்த இசை முறையால் ஈர்க்கப்பட்டு ஒன்றிணைந்தோம். இந்த வாத்தியங்களை துாக்கும்போது கை, கால், முதுகெல்லாம் வலிக்கும். ஆனால், எதையுமே வெளிக்காட்டாமல் மணிக்கணக்கில் உற்சாகம் குறையாமல் வாசிப்போம். இசைக்கருவிகளை கையில் எடுத்து விட்டால், வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் உற்சாகமாகி விடுவோம். இதுவரை, 200 பேருக்கு கயிலாய வாத்தியம் கற்றுக் கொடுத்துள்ளேன். இதற்கு, எந்தக் கட்டணமும் வசூலித்தது இல்லை. இதை, சிவனுக்கு செய்யும் தொண்டாக பார்க்கிறேன். அதேபோல், நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது என் மாணவர்களும், 'இவ்வளவு ரூபாய் கொடுங்கள்' என்று கறாராக கேட்டது இல்லை. விழா நடத்துவோர் தரும் தொகையை எல்லாரும் பகிர்ந்து கொள்வோம். இந்த வாத்திய இசையை கேட்கும் மக்களுடைய கால்கள் தன்னிச்சையாக தாளமிடும். 'மகிழ்ச்சியாக இருந்தோம்' என்று அவர்கள் சொல்லும் அன்பு தான் எங்களுக்கு பெரிது. தொடர்புக்கு 86829 05848 ********************* வெளிநாடுகளிலும் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்! செயற்கை பூக்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் அசத்தும், திருச்சியைச் சேர்ந்த 30 வயதான, ரம்யா: என் சொந்த ஊர் திருச்சி. பி.காம்., முடித்ததும், சென்னையில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை கிடைத்தது. எங்களுடையது காதல் திருமணம். முதல் குழந்தை பிறந்ததும், வேலையை ராஜினாமா செய்துவிட்டு, வீட்டிலேயே இருந்தேன். இரண்டாவது முறை கர்ப்பமானபோது கருச்சிதைவு ஏற்பட்டது; உச்சக்கட்ட மன அழுத்தத்தை சந்தித்தேன். அதில் இருந்து மீண்டு வருவதற்காக, கைவினை பொருட்கள் செய்வதில் கவனம் செலுத்தினேன். சமூக வலைதளம் தான் எனக்கு குரு. மார்க்கெட்டில் இரண்டு ரூபாய்க்கு கிடைக்கும், நுரைதாள்கள் எனப்படும், 'போம் பேப்பர்'களை வாங்கி, விதவிதமான வடிவங்களில் தலைமுடி அலங்கார பொருட்களை தயாரித்து, தோழியருக்கு பரிசளித்தேன். நம் ஊரில் கிடைக்கும் நுரைதாள்கள் அடர்த்தியாக இருக்கும். அதிலும், குறிப்பிட்ட சில நிறங்கள் தான் கிடைக்கும். மேலும், இயற்கையான பூக்கள் போன்ற நுணுக்கங்களை இதில் கொண்டு வர முடியாது. 'போமிரான்' தாள்கள் என்பது, ஈரானில் உற்பத்தி செய்யப்படும், உயர் ரக போம் தாள்கள். இது, அடர்த்தி குறைவாக இருக்கும். இவை பல வண்ணங்களில் கிடைப்பதால், தத்ரூபமாக பூக்களை உருவாக்க முடியும். ஈரானில் இருக்கும் ஒரு வியாபாரியை இணையம் வாயிலாக தொடர்பு கொண்டு, 2,000 ரூபாய்க்கு வாங்கினேன்; அதுதான் என் தொழிலுக்கான முதலீடு. பூவின் மொட்டு, இலையில் இருக்கும் சிறு சிறு நுணுக்கங்களை தத்ரூபமாக கொண்டு வருவதற்காக, ரஷ்யாவை சேர்ந்த கலைஞர் ஒருவரிடம், இணைய வழியில் பயிற்சி பெற்றேன். விதவிதமான பூக்களை உருவாக்கி, தலை அலங்கார பொருட்களை தயார் செய்தேன். அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு, விற்பனை செய்ய ஆரம்பித்தேன். பின், 'பன்ச் ஆப் பெடல்ஸ்' என்ற நிறுவனத்தை துவங்கி, வாடிக்கையாளர்கள் கேட்கும் நிறத்திலும், வடிவிலும், ஆடைகளுக்கு ஏற்ப பிரத்யேகமாக செய்து கொடுக்க ஆரம்பித்தேன். நான் உருவாக்கும் மல்லிகை சரத்தை, நிஜ பூக்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் வித்தியாசம் தெரியாது. வெளிநாடுகளில் மல்லிகை, முல்லை பூக்கள் கிடைப்பது சிரமம்; அப்படியே கிடைத்தாலும் விலை அதிகம். இதனால், பிரான்ஸ், மலேஷியா, நெதர்லாந்து, நார்வே, அமெரிக்கா உட்பட பல நாடுகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள் எனக்கு கிடைத்தனர். என்னிடம் எட்டு பெண்கள் வேலை செய்கின்றனர். 20,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதுவரை, 300 பேருக்கு பயிற்சி வகுப்புகளும் எடுத்துள்ளேன். 2,000 ரூபாயில் ஆரம்பித்த தொழில் வாயிலாக இப்போது மாதம், 4 லட்சம் ரூபாய் வரை வர்த்தகம் செய்கிறேன். தொடர்புக்கு 89030 31158


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை