யு.பி.எஸ்.சி., தேர்வுக்கான பயிற்சி மையமே அடுத்த இலக்கு!
கே.எம்.ஜி., என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவி, அரசு பணிக்கான பயிற்சி மையம் நடத்தி வரும், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், வண்டிப்பெரியாரில் வசித்து வரும் கணேசன்: இங்கு, 150 ஆண்டுகளாக தமிழர்கள் வசித்து வருகின்றனர். என் பெற்றோர் வண்டி பெரியாரில் உள்ள பசுமலை எஸ்டேட்டில் வேலை செய்தனர். தமிழ்வழி பள்ளியில் தான் படித்தேன். நானும் விடுமுறை நாட்களில் தோட்ட வேலைக்கு செல்வேன்.திருவனந்தபுரத்தில் பிளஸ் 1 படிப்பதற்காக, வி.ஏ.ஓ., அலுவலகத்தில் சில சான்றிதழ்கள் வாங்க வேண்டி இருந்தது. அதை தராமல் பல வாரங்கள் அலைக்கழித்தனர். அந்த சம்பவம் அப்படியே மனதில் பதிந்தது. இதற்காகவே நாம் அரசு வேலையில் சேர வேண்டும் என்று முடிவெடுத்தேன்.பள்ளி படிப்பு முடித்ததும், திருவனந்தபுரம் அரசு பொறியியல் கல்லுாரியில் சேர்ந்தேன். எனக்கு மலையாளம் எழுதவோ, வாசிக்கவோ தெரியாது. இதற்காகவே முயற்சி செய்து, மலையாளம் எழுத படிக்க கற்றுக் கொண்டேன். அரசு பணி தேர்வுக்கான பயிற்சி மையத்திற்கு கட்டணம் அதிகம். என்னிடம் அந்த அளவிற்கு பணம் இல்லை.அதனால், விடுதியில் கூட இருந்த தமிழ் பேசும் 10 நண்பர்களை அழைத்து, 'நீங்கள் 10 பேரும் மாதம் 250 ரூபாய் எனக்கு தந்தால், நான் பயிற்சி வகுப்பில் சேர்ந்து, அங்கு படிப்பதை இரவு உங்களுக்கு தமிழில் சொல்லித் தருகிறேன்' என்று கூறினேன். அவர்களும் ஒப்புக் கொண்டனர்.நானும், என் நண்பர்களும் 2003ல் கிளார்க் வேலைக்கான தேர்வை எழுதினோம். முதல் முயற்சியிலேயே எனக்கும், 10 நண்பர்களுக்கும் வேலை கிடைத்தது. ஆனாலும், மனம் நிறைவடையவில்லை. காரணம், ஆயிரக்கணக் கான தமிழ் பிள்ளைகள் இங்கு படிப்பை முடித்துவிட்டு, மீண்டும் தேயிலை தோட்ட வேலைக்கு தான் சென்று கொண்டிருக்கின்றனர்.அதனால், அவர்களுக்கு ஏதாவது வழி காட்ட வேண்டும் என்று முடிவெடுத்து, கே.எம்.ஜி., அறக்கட்டளை ஆரம்பித்தேன். அரசு வேலைவாய்ப்புகள் குறித்து நோட்டீஸ் அச்சடித்து, எல்லா எஸ்டேட்களுக்கும் வினியோகித்தேன். நாளாக நாளாக பயிற்சி மையத்திற்கு பலர் வர ஆரம்பித்தனர். இப்போது பள்ளிகள், காவல்துறை, தலைமை செயலகம் என பல இடங்களில் தமிழ் பிள்ளைகள் வேலை செய்கின்றனர். இன்று வரை யாரிடமும் பயிற்சிக்கென பணம் கேட்டதில்லை. முடிந்தவர்கள் தருவர். அது கட்டட வாடகை, மின் கட்டணம் போன்ற அடிப்படை செலவுக்கு உதவுகிறது. அடுத்து யு.பி.எஸ்.சி., தேர்வுக்கான பயிற்சி மையத்தை துவக்க வேண்டும். ஆட்சிப்பணிக்கு நம் பிள்ளைகள் வந்தால் தான் மாற்றம் நடக்கும். இதுதான் என் அடுத்த இலக்கு!