நான் செய்யும் பொம்மைகள் தான் என் குழந்தைகள்!
கடந்த 50 ஆண்டுகளாக பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்து வரும், 2024ல் கலைஞர்களுக்கான தமிழக அரசின் விருது வாங்கிய, சென்னையைச் சேர்ந்த குணசுந்தரி:என் கூட பிறந்தவங்க எட்டு பேர். ஒரு அக்கா மட்டுமே மன நோயாளி; அவளை நான் தான் பார்த்துக் கொள்கிறேன். மற்ற ஏழு பேரும் இந்த தொழில் தான் செய்கிறோம். எங்களுக்கு முன்னோடி அப்பா தான்; எந்த சிலையாக இருந்தாலும், பார்த்ததும் அப்படியே, 'மோல்டு' தயாரித்து, பொம்மை செய்து விடுவார்.காமராஜர் ஐயா, எங்கள் அப்பாவிடம், 'காந்தி சிலை வேண்டும்' என்று செய்யச் சொல்லி வாங்கி சென்றார். அப்பாவை பார்த்து தான் எனக்கும் பொம்மை செய்யும் ஆசை வந்தது. எட்டாவது வரை படித்தேன்; அதன்பின், பொம்மை செய்யும் தொழிலுக்கு வந்து விட்டேன்.என் 13வது வயதில் முறைப்படி பொம்மை செய்ய ஆரம்பித்தேன். விற்பனைக்கான வழி தான் தெரியவில்லை. அதனால், பூம்புகார் போன்ற அரசு விற்பனை கூடங்களை அணுகினோம். ஆரம்பத்தில் ஒரு பொம்மை, இரண்டு பொம்மை என, 'ஆர்டர்' கொடுத்தனர். இப்போது ஆயிரக்கணக்கில் ஆர்டர் எடுத்து செய்து கொடுக்கிறோம்.அந்த காலத்தில் மண் பொம்மைகள் தான் அதிகம். மண் பற்றாக்குறை வரும் போது, பேப்பரை வெந்தயம் சேர்த்து ஊற வைத்து அரைத்து, பசையும், சுண்ணாம்பு துாளும் கலந்து, அச்சு போட்டு பொம்மைகளை உருவாக்கி இருக்கின்றனர். இப்போது, 'ரெடிமேட்' பேப்பர் துாள் கிடைக்கிறது; அதனால் வேலை கொஞ்சம் எளிது.பேப்பர் துாளை வாங்கி, அத்துடன் பசை, சுண்ணாம்பு துாளும் கலந்து மாவு தயாரிப்போம். பொம்மைகள் தயாரிக்க மேல் அச்சு, கீழ் அச்சு என இரண்டு அச்சுகள் இருக்கும். மேல் அச்சு என்பது பொம்மைகளின் முன்பாகம்; கீழ் அச்சு என்பது பின்பாகம்.மாவை நல்லா திரட்டி, பொம்மையின் நீள, அகலத்துக்கு ஏற்ற மாதிரி, சப்பாத்தி உருளை வைத்து தேய்த்து அச்சில் வைத்து அழுத்தணும். அதன் மீது பேப்பரை தண்ணீரில் நனைத்து, பசை தடவி ஒட்ட வேண்டும். இதே மாதிரி கீழ் அச்சையும் தயார் செய்து, இரண்டையும் ஒன்றாக வைத்து மூடி காய வைக்க வேண்டும். காய்ந்ததும், அச்சில் இருந்து பொம்மையை எடுக்க வேண்டும். அதன்பின், பொம்மையை பிசிறு இல்லாமல் தயார் செய்து, கீழ் பகுதியில் அட்டை ஒட்டி, காய வைக்க வேண்டும். காய்ந்ததும் பெயின்ட் அடிக்க வேண்டும். ஒரு பொம்மை தயாரிக்க, ஐந்து நாட்களாகும். ஒரு நாளைக்கு வெவ்வேறு வகையான ஐந்து பொம்மைகளை தயாரிக்க முடியும்.இந்த கலையை நிறைய மக்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆசைப்பட்டு, பள்ளி - கல்லுாரிகளுக்கு பயிற்சியாளராக செல்கிறேன். எனக்கு குழந்தைகள் கிடையாது. நான் செய்யும் பொம்மைகள் தான் என் குழந்தைகள்!