மேலும் செய்திகள்
மருத்துவம் என்பது மருந்து மட்டுமல்ல மனிதநேயமும் கூட!
12-Sep-2026 | 1
10 ரூபாய்க்கு தோசையும் மீன் குழம்பும் தருகிறேன்!
08-Sep-2026
எங்களது 3வது குழந்தை முதலீடுகள் தான்!
07-Sep-2026
உறவுகளின் அருமை குறித்து கூறும், 'நேச்சுரல்ஸ்' அழகு நிலையம் கிளையின் பங்குதாரர் விஜய் ஆனந்த்: நண்பரின் உறவினராக எனக்கு அறிமுகமானவங்க சவுமியா. அந்த அறிமுகம் நட்பாகி, பின் காதலானது. இருவர் வீட்டின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. தலா ஒரு ஆண், பெண் குழந்தை பிறந்தனர். என் மனைவிக்கு பல ஆண்டுகளாக, உடல் செல்களை தாக்கும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமை பிரச்னை இருந்தது. 2021ல் அவருக்கு நுரையீரல் பிரச்னை இருப்பதை கண்டுபிடித்தோம். ஒரு பக்கம் சிகிச்சையுடன், இன்னொரு பக்கம் வீடு, அழகு நிலையம் என எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார். நுரையீரலில் பிரச்னை இருக்கும்போதும், நிறைய வெளிநாடுகளுக்கு மிகுந்த எச்சரிக்கையுடனே பயணம் செய்துள்ளார், என் மனைவி; எந்த பிரச்னையும் வந்தது இல்லை. கடந்த 2023 ஜனவரியில் குடும்பத்துடன் மனைவி கேரளா சென்றிருந்தார். ரயிலில் பயணம் செய்தபோது, 'இன்ப்ளூயன்சா ஏ' வைரஸால் ஏற்படும், 'ஸ்வைன் ப்ளூ' என்ற சுவாசத் தொற்று நோய் பாதித்திருந்தது. அது தெரியாமல் நான்கு நாள் பயணத்தையும் முடித்து, காய்ச்சலுடன் வீட்டிற்கு வந்தார். உடனடியாக மனைவியை மருத்துவமனையில் சேர்த்து, பரிசோதனைகள் எடுத்தோம். அதன் முடிவுகள் வருவதற்குள், நிலைமை மோசமாகி விட்டது. 'ஆக்சிஜன்' எனும் பிராணவாயுவை செலுத்தும் கருவியுடன், 24 மணி நேரமும் இருக்க வேண்டும் என்ற நிலையில், மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்தோம். ஆனாலும், உடலளவில் மிகவும் பலவீனமாகி விட்டார். ஒரு கட்டத்தில், 'அம்மா பிழைக்க வாய்ப்பில்லை' என்ற எதார்த்தம், மகனுக்கும், மகளுக்கும் புரிந்து விட்டது. எங்களுக்கு உறவினர்களின் ஆதரவு மிகவும் பெரிது. மனைவி இறந்ததும், அத்தனை பேரும் கிட்டத்தட்ட ஒரு மாதம் எங்களுடனே இருந்தனர். அவர்கள் இல்லையெனில் நானும், என் பிள்ளைகளும் அந்த துயரத்தில் இருந்து எளிதாக மீண்டு வந்திருப்போமா என்று தெரியவில்லை. மகன், மகள் இருவரும் வேலை, திருமணம் என எதிர்கால முடிவுகளை எடுக்கும் வயதில் இருக்கின்றனர். மனைவி இருந்த வரை அவரே எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார். என்ன தான் பிள்ளைகளுடன் நண்பன் போல் பழகினாலும், தனிப்பட்ட என் உணர்வுகளை, மனதை பகிர்ந்து கொள்ள ஆளில்லாத வெற்றிடம் மனதை அழுத்துகிறது. என் பெற்றோர், சகோதரி மற்றும் அவரது பிள்ளைகள் என்று, உறவுகள் தான் இன்றும் எங்களின் பலம். உறவுகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அவர்களின் அன்பும், ஆதரவும் இருந்தால், வாழ்க்கையில் எதையும் கடந்து வந்து விடலாம்.
12-Sep-2026 | 1
08-Sep-2026
07-Sep-2026