உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / நம் மரபில் இருந்து அழிந்து போன பொம்மைகளை மீட்டுள்ளோம்!

நம் மரபில் இருந்து அழிந்து போன பொம்மைகளை மீட்டுள்ளோம்!

மரத்தாலான பொம்மைகளை செய்து விற்பனை செய்து வரும், சென்னை சேத்துப்பட்டில் உள்ள, 'ஆரீரோ டாய்ஸ்' நிறுவனர் நிஷா - வசந்த் தம்பதி:நிஷா: என் மகள் நட்சத்திரா பிறந்ததும், அவள் விளையாட மர பொம்மைகளை தேடி அலைந்தோம். காரணம், அவளுக்கு தோல் ஒவ்வாமை பிரச்னை இருந்தது. சட்டைக்கு பயன்படுத்தும் சில கெமிக்கல்கள் கூட ஒத்துக்கொள்ளாது. அதேபோன்று சில பிளாஸ்டிக்கும் அலர்ஜியாகும். வெளிநாடுகளில் பச்சிளம் குழந்தைகளுக்கு என்றே டீத்தர் பொம்மைகள் இருக்கின்றன; வென்னிப்பல் பொம்மை என்று கூறுவர். சமூக வலைதளங்களில் பார்த்து அதே மாதிரி செய்து வாங்கினோம். எங்கள் மகள் அதை வைத்து விளையாடினாள்.நண்பர்கள் எல்லாம் இதுகுறித்து கேட்டபின் தான், எங்களுக்கு இதற்குள் இருந்த பெரிய பிசினஸ் புரிந்தது. 2018ல் உலகம் முழுதும் பொம்மை செய்யும் ஊர்கள், கண்காட்சிகளை தேடி சென்றோம். வசந்த்: பொம்மை பிசினஸில் மிகப் பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று தெளிவாக புரிந்தது. தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சுற்றி உள்ள, மரத்தால் ஆன பொம்மைகளை செய்யும் கைவினைஞர்களை தேடி ஒரு நெட்வொர்க்கை உருவாக்கினோம். கிலுகிலுப்பை, ஸ்டார், பீடீங் பாட்டில் என்று முதலில் ஆறு பொம்மைகளை வடிவமைத்தோம். மூன்று மாதங்களில், 30 அம்மாக்கள் வாடிக்கையாளர் ஆயினர். அடுத்து வெப்சைட் ஆரம்பித்தோம். கிடைத்த வரவேற்பு பெரிய நம்பிக்கையை கொடுத்தது. நானும், மனைவியும் முழு நேரமாக கவனம் செலுத்த ஆரம்பித்தோம்.ஒரு கட்டத்தில் முழுதும் விற்பனையாகி, 'அட்வான்ஸ் புக்கிங்' செய்யும் அளவுக்கு வணிகம் பெரிதானது. வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் வர ஆரம்பித்தன.இந்த சமயத்தில் தான் கொரோனா லாக்டவுன் வந்தது. அந்நேரம் தான் எங்கள் வணிகம் அடுத்த கட்டத்துக்கு சென்றது. பல குடும்பங்களில் கணவன் - மனைவி இருவருமே வீட்டில் இருந்தே பணிபுரியும் சூழல் இருந்ததால், குழந்தைகள் தானாக விளையாடுவது போன்று பொம்மைகள் செய்தோம்; பெரிய வரவேற்பு கிடைத்தது.தற்போது 127 வகை மர பொம்மைகள், விளையாட்டு பொருட்கள் எங்களிடம் இருக்கின்றன. நம் மரபில் இருந்து அழிந்து போன பொம்மைகளை மீட்டுருவாக்கம் செய்கிறோம். ஒரு பெரியவர், அமெரிக்காவில் உள்ள பேரனுக்கு நடைவண்டி வேண்டும் என்று கேட்டார். அதை வித்தியாசமான டிசைனில் செய்து தந்தோம். இன்று அதுதான், 'டாப் சேல்ஸ்!'ஆண்டிற்கு தற்போது, 20 கோடி ரூபாய்க்கும் மேல் டேர்ன் ஓவர் ஆகிறது. 50 கோடி ரூபாயை தாண்டிய பின், ஷோரூம் ஆரம்பிக்கிற திட்டமும் இருக்கிறது. எங்கள் கனவு, இதை உலகளாவிய வர்த்தகமாக மாற்றுவது, குறைந்தது 1,000 கைவினைஞர்களுக்கு வேலை தர வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதெல்லாம் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி