நம்மை ஏளனம் செய்தவர்களுக்கு நம் செயலால் பதில் தரணும்!
சுய தொழிலில் இறங்கி, மாதம் லட்சங்களில் வருமானம் பார்க்கும், கோவையைச் சேர்ந்த திவ்யா சுவாமிநாதன்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தான் என் சொந்த ஊர். கோவை பி.எஸ்.ஜி., கல்லுாரியில், 'பயோ கெமிஸ்ட்ரி' முடித்ததும், ஐ.டி., நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். சில நாட்களில் அப்பா இறந்துவிட, அம்மாவும், தங்கையும் மட்டுமே தனியாக இருப்பர் என்பதால், வேலையை விட்டுட்டு ஊருக்கு வந்துவிட்டேன். மாதம், 5,000 ரூபாய் சம்பளத்தில் ஊரிலேயே ஒரு வேலைக்கு சேர்ந்தேன். வீட்டில் எனக்கு திருமணம் செய்து வைத்தனர். இரண்டு குழந்தைகள் பிறந்தனர். கணவர் தான் என்னை எம்.பி.ஏ., படிக்க வைத்தார். 'பியூட்டிஷியன் கோர்சில்' எனக்கு விருப்பம் அதிகம். 'சாரி டிரேப்பிங்' எனும் அழகாக புடவை கட்டி விடுவது தொடர்பான கோர்சில் சேர்ந்தேன். கணவர் கொடுத்த ஊக்கத்தில், வெளிமாநிலங்களுக்கு சென்று, பல பியூட்டிஷியன் கோர்ஸ்கள் படித்து முடித்தேன். ஆரம்பத்தில், 'உனக்கு கண்களுக்கான மேக்கப் கூட சரியாக செய்யத் தெரியவில்லை. நீயெல்லாம் என்ன பண்ண போற?' என்று ஏளனம் செய்தனர். மிகவும் மனம் உடைந்து அழுதபடி இருப்பேன். அதன்பின் தான், 'நமக்கு வராது என சொல்ல அவர்கள் யார்?' என்று வைராக்கியத்துடன் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். தொடர்ந்து, திருமணங்கள், விசேஷங்களில் பெண்களுக்கு, 'மேக்கப்' போட ஆரம்பித்தேன். இரு நாட்களில், 20,000 ரூபாய் சம்பாதித்தபோது தான், இந்த தொழில் எனக்கு நிறைய நம்பிக்கை கொடுத்தது. மேலும், பல பயிற்சிகளையும் கற்றுக் கொண்டேன். அதன்பின், 2020ல் அரசு அனுமதியுடன், 'கிளிட்டர்ஷைன் மேக்ஓவர் அகாடமி'யை ஆரம்பித்து, சான்றிதழ் வகுப்புகள் எடுக்கத் துவங்கினேன். ஆரம்பத்தில் மூன்று மாணவியர் சேர்ந்தனர். தொடர்ந்து பலரும் தேடி வர ஆரம்பித்தனர். எங்கள் அகாடமிக்கு சமூக வலைதளத்தில் ஒரு பக்கம் ஆரம்பித்து, அதில் வகுப்புகளின் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டேன். அதன் வாயிலாக தமிழகம் மட்டுமல்லாமல், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்தும் கூட வந்து என் வகுப்பில் சேர்ந்தனர். இப்போது, மாதம் லட்சங்களில் வருமானம் வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், 1,100க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி கொடுத்திருக்கிறேன். அவர்களில் பலர் பியூட்டிஷியன் துறையில் தொழில் முனைவோர் ஆகி இருப்பதில் மிகுந்த சந்தோஷம். 'உங்களால் ஒன்றும் செய்ய முடியாது' என்று எவராவது கூறினால், அதை சிறப்பாக செய்து, அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டுமே தவிர, முடங்கி விடக்கூடாது.