உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / மாநிலம் முழுதும் எங்கள் சிப்ஸ் விற்பனையாக வேண்டும்!

மாநிலம் முழுதும் எங்கள் சிப்ஸ் விற்பனையாக வேண்டும்!

மொத்தம் எட்டு வகையான சிப்ஸ் தயாரித்து, மாதம், 15 லட்சம் ரூபாய், 'டர்ன் ஓவர்' செய்து வரும், புதுக்கோட்டை மாவட்டம், பாப்பாவயலைச் சேர்ந்த விஜயகுமார்: நாங்கள் விவசாய குடும்பம். புதுக்கோட்டை அரசு கல்லுாரியில் பி.ஏ., படித்தபடியே பகுதி நேரமாக ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்தேன். என் தம்பி திருப்பதி, கோவையில் உள்ள ஒரு கம்பெனியில், நொறுக்கு தீனி தயாரிக்கும் மாஸ்டராக இருந்தார். கல்லுாரி படிப்பு முடித்த மூன்றே மாதத்தில், கோவையில் உள்ள எஸ்.பி.ஜி., சிப்ஸ் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு கிடைத்த அனுபவத்தில், நானும், தம்பியும் சேர்ந்து, 25 லட்சம் ரூபாய் தயார் செய்து, திருச்சி - மதுரை தேசிய நெடுஞ் சாலையில் உள்ள பாத்திமா நகரில், பி.ஆர்.சி., ஹாட் சிப்ஸ் கடையை கடந்தாண்டு துவங்கினோம். கேரளா, கர்நாடகா, மேட்டுப்பாளையம் என்று பல ஊர்களிலும், நேந்திரம் வாழைக்காய்கள் மற்றும் உருளை கிழங்குகள் வாங்கினோம். எண்ணெய், மைதா, சோளமாவு, கடலை மாவு ஆகியவற்றை திருச்சி, மணப்பாறை உள்ளிட்ட ஊர்களில் கொள்முதல் செய்தோம். விறகு அடுப்பில் தான் சிப்ஸ் தயாரிக்க முடியும் என்பதால், அருகில் உள்ள மர அறுவை மில்லில் வீணான கட்டைகளை வாங்கினோம். என் தம்பி சிப்ஸ் தயாரிப்பு, கடையை நிர்வாகம் செய்வது உள்ளிட்ட விஷயங்களை பார்த்து கொண்டார். நான் லைனுக்கு சிப்ஸ் கொண்டு செல்வது, பணம் வசூலிப்பது உள்ளிட்ட விஷயங்களை பார்த்து கொண்டேன். 60 டீலர்கள், 60 பெரிய கடைகள் என, ஆர்டர் கிடைத்தது. எக்காரணம் கொண்டும், பொருளின் தரத்தை குறைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். இதனால், எங்கள் கம்பெனி சிப்ஸ்க்கு ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். சென்னை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கும் டீலர்கள் கிடைத்தனர். முக்கிய சாலையில் எங்கள் தொழில்கூடம் இருப்பதால், தேங்காய் எண்ணெய் வாசனையை வைத்தே இது சிப்ஸ் கடை என்று தெரிந்து, சாலையில் செல்வோர் வந்து வாங்கிச் செல்கின்றனர். விடுமுறை நாட்களில், 10,000 ரூபாய்க்கும், மற்ற நாட்களில், 3,000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. இப்போது, எட்டு வகையான சிப்ஸ் தயாரிக்கிறோம். இதனால், மாதம், 15 லட்சம் ரூபாய், 'டர்ன் ஓவர்' ஆகிறது. தொடர்ந்து, இதே பகுதியில் சொந்த இடம் வாங்கி, தொழிலை வளர்க்கும் யோசனையும் இருக்கிறது. மாநிலம் முழுக்க எங்கள் கம்பெனி சிப்ஸ் விற்பனையாகும் அளவுக்கு, தொழிலை கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை