எங்கள் சலங்கைகளில் எடை, நிறம், சத்தம் எல்லாம் வேறுபடும்!
திருச்சி, வெங்கட்நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள பகவதி அம்மன் மகளிர் குழுவைச் சேர்ந்த, சூர்யா:எங்கள் ஊரில் சலங்கை தயாரிப்பது தான் பிரதான தொழில். எங்கள் தாத்தா - பாட்டி காலத்தில் இருந்து இதுதான் எங்களுக்கும் குடும்பத் தொழில். சலங்கையை, மாட்டுக்கு கழுத்தில் கட்டுவாங்க; நடனம் ஆடுறவங்க கால்களில் கட்டுவாங்க. வீடுகளுக்கு அலங்கார பொருளாகவும் சிலர் வாங்கிட்டு போவாங்க.தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் நீங்கள் சலங்கைகள் வாங்கலாம்; ஆனால், நாங்கள் தயாரிக்கும் சலங்கைக்கு தனி சத்தம் உண்டு. லேசாக ஆட்டினாலே, 'க்ளுக்'குன்னு சத்தம் வரும். எடை, நிறம், சத்தம் இப்படி எல்லாவற்றிலும், ஏதோ ஒரு வித்தியாசத்தை எங்கள் சலங்கைகளில் நீங்கள் உணர முடியும்.பார்க்க சின்ன பொருள் தான்; ஆனால், ஒரு சலங்கை தயாரிப்பில், 24 வகையான வேலைகள் இருக்கின்றன. சாணம், களிமண், செம்மண், படி மண், குங்கிலியம், விளக்கெண்ணெய், பித்தளை, அலுமினியம் எல்லாம் கலந்து தான் தயாரிக்கிறோம். ஒவ்வொரு சலங்கையிலும், எங்கள் மூதாதையர் எங்களுக்கு சொல்லிக் கொடுத்த நுணுக்கங்கள் உள்ளன.என்ன தான், ஆயிரம் டெக்னாலஜி வந்தாலும் கையால் செய்யக்கூடிய தொழில் இது. சாணத்தை சுத்தமாக்குவது லேசான விஷயம் இல்லை; குழந்தையை பெத்து எடுக்குற மாதிரி, மிகவும் கவனமாக செய்கிறோம். மதுரையில் பழைய பொருள் கடையில் இருந்து பித்தளை, அலுமினியம் வாங்கி வருவோம்; சாணம், மண் எங்கள் ஏரியாவில் கிடைக்குது.பித்தளையும், அலுமினியமும் சேர்ந்து 1 கிலோ, 500 ரூபாய்; 1 கிலோ கலவைக்கு, 10 கிராம் அளவு சலங்கைகள், 60 எண்ணிக்கை தயாரிக்கலாம். அளவுக்கேற்றபடி ஒரு சலங்கை, 15 முதல் 500 ரூபாய் வரை இருக்கிறது.மாடுகளுக்கு நெற்றியில் கட்டும் நிலா, சங்கு, மாம்பிஞ்சு, காசு இதெல்லாம் கூட தயாரிக்கிறோம். ஆரம்பத்தில் தனித்தனியாக தான் சலங்கை தயாரித்துக் கொண்டு இருந்தோம்.ஆனால், மகளிர் குழுவில் சேர்ந்தால் நிறைய பலன்கள் இருக்கும் என்பதால், எங்கள் ஏரியாவில் சலங்கை தயாரிக்கிற, 30 பேர் சேர்ந்து மகளிர் குழுவாக இணைந்தோம். ஒவ்வொருவரும் தனித்தனியாக சலங்கைகள் தயாரித்து, மொத்தமாக விற்பனைக்கு அனுப்புகிறோம்.மாதத்துக்கு, 300 கிலோ சலங்கைகள் தயார் செய்கிறோம். வாரம், 50,000 ரூபாய் வரை, 'டர்ன் ஓவர்' செய்கிறோம். இப்போது, சென்னை உட்பட தமிழகம் முழுக்க எங்கள் சலங்கைகளை விற்பனைக்கு அனுப்புகிறோம். எங்கள் பொருளுக்கு தனித்துவம் இருக்கு என்ற அடையாளம் கிடைத்தால் போதும்.