எந்த வயதிலும் சுயதொழில் துவங்கலாம்!
பாரம்பரிய உணவுகளுடன் கூடிய, இயற்கை எழில் கொஞ்சும் பண்ணை விடுதியை வெற்றிகரமாக நடத்தி வரும், 90 வயதை கடந்த மூதாட்டி லட்சுமி, அவரது மகளான 72 வயதான கஸ்துாரி: லட்சுமி: விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டில் இருந்து 8 கி.மீ.,யில் உள்ள ரெட்டணை கிராமத்தில் தான், எங்களின் பண்ணை அமைந்துள்ளது. 2021ல் தான் இதை துவக்கினோம். மொத்த பரப்பளவு, 13 ஏக்கர். மழைநீரை சேகரிக்கும் குளங்களும் அமைத்திருக்கிறோம். வழக்கமான ஹோட்டல் அறைகள் போல் அல்லாமல், வீட்டில் தங்கும் உணர்வை ஏற்படுத்துவது போல் அறைகளை அமைத்திருக்கிறோம்.இங்கு தங்குவதற்கு இரண்டு வீடுகள் இருக்கின்றன. ஆறு உறுப்பினர்கள் உள்ள குடும்பம் தங்குவதற்கு, தினசரி வாடகையாக 6,000 ரூபாய் வசூலிக்கிறோம். தங்கள் செல்ல பிராணியையும் விருந்தினர்கள் அழைத்து வரலாம். புகை பிடிக்கவும், மது அருந்தவும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எங்கள் பண்ணையில் இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்படும் பழங்கள், காய்கறிகள், கீரைகளில் தான் உணவு தயாரிக்கிறோம்.காபி, தேநீர் தயாரிக்க பண்ணையில் வளர்க்கப்படும் மாடுகளின் பால் மட்டுமே பயன்படுத்துகிறோம். இங்கு சிறு நுாலகமும் உள்ளது. இங்கிருக்கும் குளத்தில் நீச்சல் அடிக்கலாம்.மிகவும் வயதான பெண்ணான எனக்கு, ஒரு தொழிலை துவங்குவது என்பது அவ்வளவு எளிதாக இல்லை. ஆரம்பத்தில் மசாலாக்கள், பொடி வகைகள் தயாரித்து வீடு வீடாக சென்று விற்பனை செய்து வந்தேன். உடல்நிலை காரணமாக தொடர்ச்சியாக அதில் ஈடுபட முடியவில்லை. எனவேதான், இந்த பண்ணை இல்லத்தை துவங்கினேன். பின், மகள் கஸ்துாரியும் இணைந்து கொண்டாள். தொழில் துவங்கிய காலகட்டத்தில் உணவக துறை குறித்த முன் அனுபவம் ஏதும் எங்களுக்கு கிடையாது. சமூக வலைதளங்கள், சந்தைப்படுத்துதல், கூகுள் மதிப்புரைகளை சேகரித்தல் உள்ளிட்ட பலவற்றையும் பேத்திகள் தான் கற்றுக் கொடுத்தனர்.கஸ்துாரி: தற்போதும் நாங்கள் கடினமாக உழைக்கிறோம். நாளொன்றுக்கு மூன்று முறை சமைக்கிறோம். மேலும், கிராம மக்கள் பலருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கிறோம்.தமிழ் மட்டுமே பேசத்தெரிந்த எங்களால், எப்படி இந்த தொழிலை திறம்பட நடத்த முடியும் என்ற தயக்கம் ஆரம்பத்தில் இருந்தது. பண்ணை விடுதிகள் பல இருந்தாலும், எங்களுடையது தனித்துவமிக்கதாக இருக்க வேண்டுமென விரும்பினோம்.சுயதொழிலை இந்த வயதில்தான் துவங்க வேண்டும் என்பதற்கு எந்த வரையறையும் இல்லை. எந்த வயதிலும் ஆரம்பிக்கலாம். அதை வெற்றிகரமாக நடத்தலாம் என்பதற்கு நாங்களே சாட்சி!