உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / புகார் பெட்டி: விழும் நிலையில் மின்கம்பம் ஒரத்துார் வாசிகள் அச்சம்

புகார் பெட்டி: விழும் நிலையில் மின்கம்பம் ஒரத்துார் வாசிகள் அச்சம்

விழும் நிலையில் மின்கம்பம் ஒரத்துார் வாசிகள் அச்சம்

குன்றத்துார் ஒன்றியம் படப்பை அருகே ஒரத்துார் ஊராட்சி அமைந்துள்ளது. ஒரத்துாரில் இருந்து படப்பை செல்லும் சாலையை பயன்படுத்தி தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. உயர் மின்கம்பிகளை தாங்கி நிற்கும் கம்பங்கள் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஒரத்துாரில் உள்ள நான்கு மின்கம்பங்கள் சேதமடைந்து, எந்த நேரத்திலும் முறிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதிவாசிகள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து ஒரத்துார் வாசிகள் கூறுகையில், 'மின்கம்பங்கள் சேதமடைந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. எனவே, மின்கம்பத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, படப்பை மின்வாரிய உதவி செயற்பொறியாளரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை' என்றனர்.எனவே, அசம்பாவிதம் நிகழும் முன், சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றியமைக்க மின்வாரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சு.முருகேசன், ஒரத்தூர். மணியாட்சி சாலை வேகத்தடைக்கு வெள்ளை வர்ணம் பூச எதிர்பார்ப்பு

பள்ளூர் - சோகண்டி இடையே, மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில், 24 கி.மீ., ஒரு வழிச்சாலை உள்ளது. இச்சாலை, 7 மீட்டரிலிருந்து, 10.5 மீட்டர் இரு வழிச்சாலையாக மேம்படுத்த, 44 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவுபடுத்தப்பட்டது.இங்கிருந்து, மணியாட்சி கிராமம் வழியாக சாமந்திபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலை, சமீபத்தில் அமைக்கப்பட்டது. இதில், ஆங்காங்கே வேதத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த வேகத்தடைகள் மீது, வெள்ளை நிற வர்ணம் பூசவில்லை. மேலும், இச்சாலையோரம், போதிய மின்விளக்கு வசதி இல்லாததால், இருளில் சூழ்ந்து காணப்படுகிறது.எனவே, மணியாட்சி - சாமந்திபுரம் சாலையில், வேகத்தடைகளுக்கு வெள்ளை நிற வர்ணம் அல்லது எச்சரிக்கை தடுப்பு சாதனங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மு.குமரகுரு, மணியாட்சி. நீர்குன்றம் சாலையோரம் வளர்ந்த செடி, கொடிகள் அகற்ற கோரிக்கை

உத்திரமேரூர் ஒன்றியம் சிறுதாமூரில் இருந்து, நீர்குன்றம் வழியாக ஆனம்பாக்கம் செல்லும் இணைப்பு சாலை உள்ளது. சிறுதாமூர், பட்டா உள்ளிட்ட கிராம வாசிகள், இச்சாலையை பயன்படுத்தி உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த சாலையில், நீர்குன்றம் ஏரிக்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில், செடி, கொடிகள் வளர்ந்து, சாலை வரை வளர்ந்துள்ளது. இதனால், இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாமல் சிரமப்படுகின்றனர்.மேலும், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், வாகன ஓட்டிகள் உடலை பதம் பார்க்கிறது. எனவே, சாலையோர மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ்.தாமோதரன், சிறுதாமூர். மாயமாகி வரும் சுடுகாடு ஊராட்சி நிர்வாகம் மெத்தனம்

ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் வல்லம் ஊராட்சிக்குட்பட்டு தெரேசாபுரம் கிராமம் உள்ளது. இங்கு, வல்லம் வடகால் சிப்காட் சாலையோரம் இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய, சுடுகாடு வளாகத்தில் எரிமேடை அமைக்கப்பட்டுள்ளது.இந்த சுடுகாடு வளாகத்தை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை. இதனால், வளாகம் முழுதும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. எரிமேடையின் மீதும் முட்செடிகள் வளர்ந்துள்ளன.இதனால், இறந்தவர்களின் உடலை தகனம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், சுடுகாடு வளாகம் மற்றும் எரிமேடையில் உள்ள செடி, கொடிகளை அகற்றி, மயானத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- து.சக்கரபாணி, தெரேசாபுரம். காஞ்சி பஸ் நிலையத்தில் தபால் நிலையம் வருமா?

காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்ட தலைமை தபால் நிலையத்திற்கு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர். அவ்வாறு காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வருவோர், அங்கிருந்து மருத்துவமனை சாலையில் உள்ள தபால் நிலையத்திற்கு செல்ல, போதிய பேருந்து வசதி இல்லாமல் உள்ளது.இதனால், அதிக கட்டணம் கொடுத்து, ஆட்டோக்களில் பயணம் செய்து தபால் நிலையம் செல்கின்றனர். எனவே, பயனாளர்களின் நேரம் மற்றும் காலவிரயத்தை குறைக்க, பேருந்து நிலையத்தில் தபால் நிலையம் அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ