இஞ்சி டீயை பருகியபடியே, “பேச்சாளர்களை தீவிரமா தேர்வு செய்யுறாங்க...” என்றார், அந்தோணிசாமி.“எந்த கட்சியில பா...” என கேட்டார், அன்வர்பாய்.“அ.தி.மு.க., மாணவரணி மாநில செயலரா, ஐ.டி., அணியின் முன்னாள் நிர்வாகியான சிங்கை ராமச்சந்திரனை நியமிச்சிருக்காங்க... இவர், மாவட்ட வாரியா கட்சிக்கு இளம் பேச்சாளர்களை உருவாக்கும் முகாம்களை நடத்துறாருங்க...“இதுக்கு, 'பள்ளி, கல்லுாரி மேடைகள்ல பேசி பழக்கம் இருக்கிற ஆண், பெண் இரு பாலரும் கலந்துக்கலாம்... கட்சியின் அடிப்படை உறுப்பினராகவும், 18 முதல், 35 வயதுக்குள்ளயும் இருக்கணும்'னு விதிகளை வகுத்திருக்காங்க...“கட்சி, அமைப்பு ரீதியா செயல்படுற, 82 மாவட்டங்களுக்கும் தலா ஒரு பேச்சாளர் வீதம் தேர்வு செய்து, அவங்களுக்கு சென்னை, அ.தி.மு.க., ஆபீஸ்ல, ஐந்து நாட்கள் பயிற்சி குடுக்கிறாங்க... அப்புறமா, பழனிசாமி கையால சான்றிதழ் வழங்கி, கட்சி மேடைகள்ல பேச வைக்க திட்டமிட்டிருக்காங்க...” என்றார், அந்தோணிசாமி.“அப்பா ஆதரிக்கறார், மகன் எதிர்க்கறார் ஓய்...” என்றார், குப்பண்ணா.“தி.மு.க., தகவலா வே...” என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.“இல்ல... துாத்துக்குடியில் மூடி கிடக்கற ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி, தமிழ்நாடு எழுச்சி தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி பண்ணா... காங்., தொழிற்சங்கமான, ஐ.என்.டி.யூ.சி., அமைப்பின் தேசிய செயலர் கதிர்வேல் தலைமையில், ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகள் நடந்தது ஓய்...“ஆனா, போலீசார் அனுமதி தர மறுத்துட்டதால, போராட்டம் ரத்தாகிடுச்சு... அதே நேரம், ஐ.என்.டி.யூ.சி, மாநில செயலரும், காங்., பொதுக்குழு உறுப்பினருமான பெருமாள்சாமி, 'ஸ்டெர்லைட் ஆலையை அந்த இடத்தில் இருந்து அகற்றியே ஆகணும்'னு சொல்றார் ஓய்...“இவர், வேற யாருமில்ல... கதிர்வேலின் மகன் தான்... ஆலைக்கு ஆதரவாக அப்பாவும், எதிராக மகனும் கருத்து சொல்லிண்டு இருக்கறதால, ஐ.என்.டி.யூ.சி.,யில குழப்பம் கும்மியடிக்கறது ஓய்...” என்றார், குப்பண்ணா.“கொடுத்த காசுக்கு இவ்வளவு தான் முடியும்னு சொல்லிட்டாங்க வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...“திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகா நில அளவை பிரிவுல, காசு இல்லாம ஒரு துரும்பு கூட அசையாது... என்ன தான் ஆன்லைன்ல பொதுமக்கள் விண்ணப்பங்கள் குடுத்தாலும், 'கவனிப்பு' இல்லாம அதிகாரிகள், பேனா மூடியை திறக்க மாட்டேங்காவ வே...“சமீபத்துல, அ.தி.மு.க., முன்னாள் பெண் எம்.எல்.ஏ., ஒருவர் தரப்புல, சேவூர்ல உள்ள தங்களது நிலத்தை அளவீடு செய்து வரைபடம் கேட்டு, 'ஆன்லைன்' வழியா விண்ணப்பிச்சாங்க... ஆனா, '7,000 ரூபாயை வெட்டுனா தான் காரியம் நடக்கும்'னு நில அளவை பெண் அதிகாரி கறாரா சொல்லிட்டாங்க வே...“வேற வழியில்லாம, 4,500 ரூபாயை புரட்டி குடுத்தாங்க... அதுக்கு, கையால் வரைந்த வரைபடத்தை, அரசு முத்திரை இல்லாம பெண் அதிகாரி குடுத்திருக்காங்க... கேட்டதுக்கு, 'நீங்க குடுத்த காசுக்கு இவ்வளவு தான் வரும்'னு முகத்துல அடிச்ச மாதிரி சொல்லிட்டாங்க வே...” என முடித்தார், அண்ணாச்சி.ஒலித்த மொபைல் போனை எடுத்த குப்பண்ணா, “சொல்லுங்கோ ஜோதிமணி...” என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.