''டில்லி போலீசிடம் சிக்கி, அபராதம் கட்டுறாங்க...'' என்றபடியே, இஞ்சி டீயை உறிஞ்சினார் அந்தோணிசாமி.''யாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.''குற்ற நடவடிக்கையில்ஈடுபடுறவங்க, வாகனங்களின் நம்பர் பிளேட்களை மாத்தி, தப்பிடுறாங்களே... இதை தடுக்க, உயிர் பாதுகாப்பு நம்பர் பிளேட்களை பொருத்த மத்திய அரசு உத்தரவு போட்டதுங்க...''இந்த நம்பர் பிளேட் உள்ள வாகனங்கள் விபத்தில் சிக்கினாலோ, காணாமல் போனாலோ, அதன் உரிமையாளர் விபரங்களை சட்டுன்னு கண்டுபிடிச்சிடலாம்... தமிழகம் தவிர, மற்ற மாநிலங்கள்ல இந்த நம்பர் பிளேட் பொருத்த நடவடிக்கை எடுத்திருக்காங்க...''நம்ம ஊர்ல போக்குவரத்து துறை அதிகாரிகள் அசால்டா இருக்கிறதால, 2 கோடி பழைய வாகனங்கள் புது நம்பர் பிளேட் பொருத்தாம வலம் வருதுங்க... நம்ம ஊர் எம்.பி.,க்கள் சிலர், டில்லியில பழையவாகனங்களை தான் பயன்படுத்துறாங்க...''இந்த வாகனங்கள்ல,எம்.பி.,க்களின் உறவினர்கள், நண்பர்கள்போறப்ப, அந்த மாநில போக்குவரத்து போலீசார் மடக்கி, 'உயிர் பாதுகாப்பு நம்பர் பிளேட் இல்ல'ன்னு, அபராதத்தை தீட்டிடுறாங்க... 'சீக்கிரம் இதுக்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்கணும்'னு எம்.பி., ஆதரவாளர்கள் புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.''லஞ்சம் கேட்டவங்களை கண்டுக்காம விட்டுட்டாங்க வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...''ஈரோடு தெற்கு போக்குவரத்து பிரிவுல,ஒரு எஸ்.ஐ.,யும், ஒரு எஸ்.எஸ்.ஐ.,யும் சமீபத்துல வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தாவ... அப்ப, பைக்குல போதையில வந்த ஒரு வாலிபரிடம், வழக்கு போடாம இருக்க பணம் கேட்டு மிரட்டியிருக்காவ வே...''அந்த வாலிபர்,லஞ்ச ஒழிப்பு போலீஸ்ல புகார் குடுத்துட்டாரு... லஞ்ச ஒழிப்பு பெண் அதிகாரி, ரெண்டு பேர் மேலயும் வழக்கு போடாம, எஸ்.பி.,க்கு தகவல் சொல்லியிருக்காங்க வே...''உடனே, ரெண்டு பேரையும் ஆயுதப்படைக்கு மாத்தினாவ... ஆனா, சில நாட்கள்லயேஎஸ்.ஐ., பழைய பணியிடத்துக்கே வந்துட்டாரு... இது, பிரச்னையை கிளப்ப, மறுபடியும் ஆயுதப்படைக்கு மாத்தப்பட்டாரு வே...''எஸ்.எஸ்.ஐ.,யை தாளவாடிக்கு மாத்திட்டாவ... இந்த விவகாரத்துல, லஞ்ச ஒழிப்பு பெண் அதிகாரி உடனே நடவடிக்கை எடுக்காதது ஏன்னு சந்தேகம் வருது வே...'' என்றார், அண்ணாச்சி.''வாரி சுருட்டறா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.''பெரம்பலுார் மாவட்டத்துல, 121 ஊராட்சிகள் இருக்கு... இந்த கிராமங்கள்ல, 100 நாள் வேலை உறுதி திட்டத்துல நிறைய பணிகள் நடக்கறது ஓய்...''பணித்தள பொறுப்பாளர்கள், கூடுதல் வேலையாட்கள் இருக்கறதா போலி கணக்கு காட்டி, காசை அடிக்கறா... இவாளுக்கு அந்தந்த ஊராட்சி தலைவர், பஞ்சாயத்து எழுத்தரும் ஒத்தாசையாஇருக்கா ஓய்...''குறிப்பா, தினமும்தலா, 10 முதல், 40 பேர் கூடுதலா வேலை பார்த்ததா பொய் கணக்கு எழுதி, மாசத்துக்கு 30,000 முதல் 90,000 வரை முறைகேடு பண்றா... சமீபத்துல,கலெக்டருக்கு நிறைய புகார்கள் போகவே, திடீர்னு ரெய்டு நடத்தி, குரூர் பணித்தள பொறுப்பாளர் உட்பட ஆறு பேரை அதிரடியா நீக்கிட்டா... ஆனாலும், பல கிராமங்கள்ல இந்த மோசடி நடந்துண்டு தான் இருக்கு ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.அரட்டை முடிய, பெஞ்ச் அமைதியானது.