திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களிடம் 9 சவரன் திருட்டு
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்களிடம், 9 சவரன் நகை திருடப்பட்டது. திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா, கடந்த 14ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் நடந்த ஆடிக்கிருத்திகை விழாவில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள், காவடி எடுத்து வந்து சுவாமியை தரிசனம் செய்ய குவிந்தனர். சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த இளங்கோ, 38, என்பவர், தரிசனம் செய்வதற்காக மாடவீதியில் வரிசையில் நின்ற போது, அவர் அணிந்திருந்த 3 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அதேபோல், பூந்தமல்லி, வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மல்லிகா, 55, என்பவரிடம், 3 சவரன் நகையும், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சித்தேரி பகுதியைச் சேர்ந்த கோவிந்தம்மாள், 50, என்பவரிடம் 3 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடினர். இதுகுறித்து மூவரும் அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஆடிக்கிருத்திகை திருவிழாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தும், பக்தர்கள் மூன்று பேரிடம் 9 சவரன் நகை திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.