உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / அலுவலகத்தில் துாங்கி வழியும் கல்வி அதிகாரி!

அலுவலகத்தில் துாங்கி வழியும் கல்வி அதிகாரி!

“வாக்குறுதியை நிறைவேத்துங்கன்னு கடிதம் எழுதியிருக்காவ வே...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி. “யாருப்பா அது...” என கேட்டார், அன்வர்பாய். “வட மாவட்ட, தி.மு.க.,வுல இருக்கிற வன்னியர் சமூக நிர்வாகிகள் பலர், முதல்வருடன் நடந்த சந்திப்புல, நீண்ட கடிதம் ஒன்றை குடுத்துட்டு போயிருக்காவ... அதை சமீபத்துல, அறிவாலயத்துல பிரிச்சு படிச்சிருக்காவ வே... “அதுல, 'எதிர்க்கட்சி தலைவரா நீங்க இருந்தப்ப நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்துல, வன்னியர் சமுதாயத்துக்கு, 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு தருவோம்னு அறிவிச்சீங்க... நம்ம ஆட்சி அமைஞ்சதும், வன்னி யர் இட ஒதுக்கீடு போராட்டத்துல உயிரிழந்தவங்களுக்கு மணி மண்டபம், வன்னியர் சமூகத்தின் மூத்த தலைவர், ஏ.கோவிந்த சாமிக்கு மணி மண்டபம் கட்டி திறந்துட்டீங்க... ஆனா, 10.5 சதவீதம் ஒதுக்கீடு மட்டும் தரல... வர்ற சட்டசபை கூட்டத்துல இதை நிறைவேத்தணும்... அப்ப தான் தேர்தல்ல ஓட்டு கேட்க முடியும்'னு உருக்கமா வலியுறுத்தியிருக்காவ வே...” என்றார், அண்ணாச்சி. “முக்கிய பதவிக்கு கடும் போட்டி நடக்கறது ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்... “சுகாதாரத் துறையில, மருத்துவ கல்வி இயக்குநர் பொறுப்பு மிகவும் முக்கியமான பதவி... ஒட்டுமொத்த மருத்துவத் துறையும், இந்த அதிகாரி நிர்வாகத்துல தான் வரும் ஓய்... “இந்த பதவியில் இருந்தவர், போன மாசம், 'ரிட்டயர்' ஆகிட்டார்... அதுக்கு முன்னாடியே, சென்னை மருத்துவ கல்லுாரி டீனா இருந்த தேரணி ராஜன், கூடுதல் மருத்துவ கல்வி இயக்குநரா நியமிக்கப்பட்டார் ஓய்... “அவர், இப்ப இயக்குநர் பதவிக்கு காய் நகர்த்திண்டு இருக்கார்... இன்னொரு பெண் டாக்டரும், இந்த பதவிக்கு முயற்சி பண்றாங்க... எல்லாரும் முதல்வர் அலுவலக செயலர் முதல், தலைமை செயலர் வரை சிபாரிசு தேடி அலையறா ஓய்... “இதுக்கு மத்தியில், பூட்டுக்கு பேர் போன மாவட்டத்தின் பெண் டீன், இந்த பதவிக்கு தகுதியா இருப்பாங்கன்னு முதல்வருக்கு தகவல் போயிருக்கு... சீக்கிரமே இது சம்பந்தமா அறிவிப்பு வரும்னு சொல்றா ஓய்...” என்றார், குப்பண்ணா. “ஆபீஸ்ல எந்த நேரமும் துாங்கிட்டே இருக்காருங்க...” என்றார், அந்தோணிசாமி. “யார் ஓய் அது...” என கேட்டார், குப்பண்ணா. “சென்னைக்கு பக்கத்துல, பட்டுக்கு பிரசித்தி பெற்ற மாவட்டத்தில், மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட உதவி அலுவலரா இருக்கிறவரை தான் சொல்றேன்... “எந்த நேரம் பார்த்தாலும், 'ஏசி'யை போட்டுட்டு, ஆபீஸ்ல துாங்கிட்டு இருக்காரு... மாதந்தோறும் பல பள்ளிகளுக்கு இவர் ஆய்வு நடத்த போகணும்... ஆனா, ஆய்வுக்கு சரியாவே போறதில்லைங்க... “அதே நேரம், ஆய்வுக்கு போனதா கணக்கு காட்டி, பணத்தை வாங்கிடுறாரு... அலுவலக ஊழியர்களையும் தரக்குறைவா பேசுறாருங்க... “இவர், இங்க வந்ததுல இருந்தே, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்துல பல பணிகள் முடிக்காம இழுபறியாவே கிடக்குதுங்க... இவரை பத்தி, மாநில திட்ட இயக்குநருக்கு நிறைய புகார்கள் போயிருக்குதுங்க...” என முடித்தார், அந்தோணிசாமி. “வெங்கடேசன், இங்கன உட்காரும்...” என, நண்பருக்கு இடம் தந்தபடி அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
ஜூலை 28, 2025 23:36

பாவம் வீட்டில் தூங்கவிடாமல் மனைவி நிம்மதி யைக் கெடுக்கிறாரோ, , வேறு எதையாவது ‘அருந்த’ விட்டு விழுந்து கிடக்கிறாரோ? எதுவும் சாத்தியமே


S.V.Srinivasan
ஜூலை 28, 2025 15:01

திராவிட மாடல் ஆட்சியில் எந்த துறை ஒழுங்கா இருக்கு கல்வி துறை ஒழுங்கா இருக்க. தமிழ் நாட்டின் சாபக்கேடு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை