உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / உறவினர்கள் பெயரில் சொத்து குவிக்கும் அதிகாரி!

உறவினர்கள் பெயரில் சொத்து குவிக்கும் அதிகாரி!

ஏலக்காய் டீயை உறிஞ்சியபடியே, ''விஜய் காரை துரத்தி பிடிச்சாரு பா...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.''சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் போலீசாரால அடிச்சு கொல்லப்பட்ட அஜித்குமார் வீட்டுக்கு, த.வெ.க., தலைவர் விஜய் திடீர்னு போய் ஆறுதல் சொன்னாரே... அவர் வந்த தகவல் பரவி, கூட்டம் திரண்டுட்டதால, ரெண்டே நிமிஷம் மட்டும் அங்க இருந்தவர், அவசர அவசரமா கிளம்பிட்டாரு பா...''அவர் கூடவே வந்திருந்த கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் வெளியே வர்றதுக்குள்ள, விஜய் கார்ல ஏறி கிளம்பிட்டாரு... அந்த கார்ல தான் ஆனந்தும் வந்திருந்தாரு பா...''தனியா நின்னு தவிச்சிட்டு இருந்த ஆனந்த்கிட்ட ஸ்கூட்டியுடன் வந்த கட்சி நிர்வாகி ஒருத்தர், 'வாங்கண்ணே... காரை பிடிச்சிடலாம்'னு சொல்ல, அந்த அவசரத்திலும், 'ஹெல்மெட் இருக்காப்பா'ன்னு ஆனந்த் கேட்டாரு... நிர்வாகியும், 'சீட்டுக்கு அடியில் இருக்கு'ன்னு சொல்ல, அதை திறக்க முயற்சி பண்ணியும் முடியல... வேற வழியில்லாம ஸ்கூட்டியில் ஏறிய ஆனந்த், ஒரு வழியா விஜய் காரை துரத்தி பிடிச்சு, அதுல ஏறி போனாரு பா...'' என, நடந்த சம்பவத்தை விளக்கினார் அன்வர்பாய்.''முக்கிய பதவிகளை பிடிக்க போட்டி நடக்கறது ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...''கோவை பாரதியார் பல்கலையில் பல வருஷமா துணைவேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உட்பட பல பணியிடங்கள் காலியா கிடக்கு... பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடங்களை நிரப்ப, சமீபத்துல நடவடிக்கை எடுத்தா ஓய்...''இதுல, பதிவாளர் பணியிடத்தை நிரப்ப நியமிக்கப்பட்ட தேர்வு குழுவுலயே ஏகப்பட்ட குளறுபடி... கவர்னரின் நாமினியை நியமிக்காமலேயே குழுவை அமைச்சிருக்கா ஓய்...''இதுக்கு முன்னாடி, ஏழு இணைப் பேராசிரியர்கள் பதிவாளரா இருந்திருக்கா... ஆனாலும், இந்த பதவிக்கு விண்ணப்பித்த இணைப் பேராசிரியர்கள் பலரை நிராகரிச்சுட்டா ஓய்...''தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரா ஒரு பெண்மணியை நியமிச்சிருக்கா... இந்த பதவிக்கு வர்றதுக்கான தகுதி இவங்களுக்கு இல்லையாம்... ஆனா, அவங்க உறவினர் ஆளுங்கட்சியில் முக்கிய பதவியில இருப்பதால, இந்த பதவியை பிடிச்சுட்டதா சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''விஜயராணி அக்கா அப்புறமா பேசுதேன்...'' என, மொபைல் போனை 'ஆப்' செய்தபடியே வந்த பெரியசாமி அண்ணாச்சி, ''எல்லாரையும் மிரட்டி வசூல் பண்ணுதாரு வே...'' என்றார்.''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.''ராணிப்பேட்டை மாவட்ட கனிமவள துறையில் பணியாற்றும் அதிகாரி ஒருத்தருக்கு பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது... கல் குவாரி, கிரஷர் உரிமையாளர்கள், அரசு கான்ட்ராக்டர்கள்னு பலரையும் மிரட்டி, 'தொடர்ந்து தொழில் செய்யணும்னா, மாசா மாசம் தவறாம கட்டிங் வந்துடணும்'னு மிரட்டியே வசூல் பண்ணுதாரு வே...''முன்னாடி எல்லாம் ஆயிரங்கள்ல லஞ்சம் தந்துட்டு இருந்தவங்க, இப்ப, அதிகாரிக்கு லட்சங்கள்ல குடுக்க வேண்டியிருக்கு... இப்படி கிடைக்கிற பணத்துல, அதிகாரி, தன் உறவினர்கள் பெயர்ல சொத்துக்களை வாங்கி குவிச்சிட்டு இருக்காரு வே...'' என்ற அண்ணாச்சி, ''சுரேஷ் இங்கன உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்துவிட்டு எழ, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Gajageswari
ஜூலை 07, 2025 05:30

பணம் பணம் பணம் என்று அரிப்பு அதிகமானது


Anantharaman Srinivasan
ஜூலை 05, 2025 18:39

திமுக ஆட்சியில் கட்டிங் வஞ்சம் தினமும் தலைவிரிதாடுகிறது. நேர்மையான திராவிடமாடல் நிர்வாகமென்று மார்தட்டிக்கொள்ளும் முதல்வர் தினம் வரும் செய்திகளைப்பார்த்து சிறிதும் வெட்கப்படுவதில்லை.


D.Ambujavalli
ஜூலை 05, 2025 17:16

தலைவரை நம்பினோர் நடுத்தெருவில் நிற்பார் என்று மக்களுக்கு சூசகமாகத் தெரிவித்து விட்டாரோ ஆனந்த்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை