உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பஞ்.,களிடம் பறந்து பறந்து வசூலிக்கும் அதிகாரி!

பஞ்.,களிடம் பறந்து பறந்து வசூலிக்கும் அதிகாரி!

பில்டர் காபியை பருகியபடியே, ''அறுபடை வீடுகள்லயும் தங்கத்தேர் இழுத்திருக்கா ஓய்...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு, முந்தா நாள் 71வது பிறந்த நாள் வந்துதோல்லியோ... அந்த கட்சியின் மருத்துவ அணி இணை செயலர் டாக்டர் சரவணன் ஏற்பாட்டுல, பழனிசாமி பெயர்ல, முருகனின் அறுபடை வீடுகள்லயும் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தியிருக்கா ஓய்...''அதோட, 'வர்ற 2026ல், பழனிசாமி மீண்டும் முதல்வராகணும்'னு சிறப்பு பூஜைகளையும் நடத்தியிருக்கா... ''அடுத்த கட்டமா, மருத்துவ அணியின் மாநில செயலர் டாக்டர் வேணுகோபால் உள்ளிட்ட 82 மாவட்ட நிர்வாகிகளுடன் சேர்ந்து, மருத்துவ முகாம், ரத்ததான முகாம்களை நடத்த போறா...''இதுல, மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கை, காது கேட்கும் கருவிகள் வழங்கவும் முடிவு பண்ணியிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''அதிகாரிக்கு நெருக்கமா இருந்தவங்க கலக்கத்துல இருக்காங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...''தேனி மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், போன மாசம் ஓய்வுக்கு முதல் நாள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டாரு... அவர் மீதான கோர்ட் வழக்கை காரணம் காட்டி தான் இந்த நடவடிக்கையை எடுத்தாங்க பா...''மாவட்டத்தில், ரேஷன் கடை விற்பனையாளர்கள் பணி நியமனத்தில் நடந்த முறைகேடுகள் சம்பந்தமா, சென்னையில் இருந்து வந்திருந்த கூடுதல் பதிவாளர், தேனி இணை பதிவாளர் ஆபீஸ்ல விசாரணை நடத்தியிருக்காரு... ''அப்ப, சஸ்பெண்ட் அதிகாரிக்கு நெருக்கமா இருந்த ரெண்டு அதிகாரிகளிடம், சரமாரி கேள்வி கேட்டு துளைச்சு எடுத்துட்டாரு பா...''இதுல ஒருத்தர், ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு தனது நெருங்கிய உறவினர்களை சேர்த்திருக்காரு... விசாரணையால, ரெண்டு பேருமே கலக்கத்துல இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''முனிராஜ், சரவணகுமார் கொஞ்சம் தள்ளி உட்காருங்க...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே, ''ஓடியாடி, 'செல்வம்' சேர்க்காரு வே...'' என்றார்.''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''பெரம்பலுார் கலெக்டர் ஆபீஸ்ல இருக்கும் ஊராட்சிகள் உதவி இயக்குநர் மற்றும் தணிக்கை அலுவலகத்துல ஒரு அதிகாரி இருக்காரு... ஊராட்சி செயலர்கள் இடமாறுதல்ல ஏகத்துக்கும் காசு பார்த்துட்டாரு வே...''ஒவ்வொரு ஊராட்சியும், இவருக்கு மாசம் 10,000 ரூபாய் தட்சணை தரணும்... இவர் ஆய்வுக்கு போனா, ஊராட்சிகளின் அந்தஸ்துக்கு ஏற்ப 10,000ல இருந்து 20,000 ரூபாய் வரை வெட்டணும் வே...''இது போக, நிர்வாக அனுமதி, இதர செலவீனங்கள்னு இவர் கையெழுத்து போடுற எல்லா பைல்களுக்கும், 'வெயிட்' வைக்கணும்... இவருக்கு லஞ்சம் வாங்கி தரவே அஞ்சாறு புரோக்கர்கள் இருக்காவ வே...''லஞ்ச பணத்தை வீட்டுல கொண்டு போய் சேர்க்கிறது, வங்கியில போடுறதை எல்லாம் தற்காலிக கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் ஒருத்தர் கச்சிதமா செஞ்சிடுதாரு... ''அதிகாரியோ, 'நான் வாங்குறதுல மாவட்ட, மாநில அதிகாரிகள் வரைக்கும் பங்கு போவுது'ன்னு சொல்லுதாரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.பெஞ்சில் புதியவர்கள் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை